(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 03 - சகி

Uyiril kalantha urave

ங்கு யாவும் தீர்மானிக்கப்பட்டவை தான்!அதிகாலை கதிரொளி முதல்,நள்ளிரவு தென்றல் காற்று வரை இங்கு யாவும் தீர்மானிக்கப்பட்டவை தான்!விருட்சத்திலிருந்து பிறக்கும் தென்றல்,கார் மேகங்களை மோக வலையில் தள்ள வேண்டும் என்ற தீர்மானம் இல்லாவிடில்,"துப்பாய தூவும் மழை!"என்ற வள்ளுவன் வாக்கு வாக்காக மட்டுமே வாழ்ந்திருக்கும்.எங்கோ எழும் பேரலையில் உயிர் பறிக்கும் இயற்கையின் கோபதாபத்தில்,உயிரிழக்கும் பேதை மனங்களும்,இயன்ற உதவி உலகிற்கு செய்து உழைத்து வாழும் உண்மைகளும்,பரம்பொருளை விடுத்து கல்லிற்கு பால் வார்த்து பசிக்கு அழும் பச்சிளம் குழந்தையை அபசகுனமாய் கருதும் நல்லுள்ளங்களும்,ஈன்ற தாய் தந்தையை அழ வைத்து சிரிக்கும் மண்ணின் மைந்தர்களும் வாழும் அகிலத்தில் யாவும் இங்கு தீர்மானிக்கப்பட்டவையே!!

"ஒழுங்கா ஆடணும் சரியா?"-ஒரு குழந்தைக்கு ஒப்பனை செய்தப்படியே புன்னகையுடன் அறிவுறுத்தினாள் சிவன்யா.

"சரிங்க மிஸ்!"தனது பிஞ்சு மொழியில் கூவியது அக்கான குயில்!!

"மிஸ்!மிஸ்!எச்.எம் உங்களை கூப்பிடுறாரு!"-மூச்சிரைக்க ஓடி வந்த பாலகன் கூவிவிட்டு மீண்டும் ஓட்டம் பிடித்தான்.

"இங்கேயே இருங்க!இதோ வந்துடுறேன்!"-குழந்தைகளை அமைதிப்படுத்தி தலைமை ஆசிரியர் இருக்கும் இடம் நோக்கி புறப்பட்டாள் சிவன்யா.

"சார் கூப்பிட்டீங்களா?"

"ஆ...சிவன்யா!ஒரு சின்ன உதவி பண்ணணும்!"

"சொல்லுங்க சார்!"

"கலெக்டர் சார் வந்துட்டு இருக்காரு!அவரை வரவேற்க இருந்த காயத்ரி மேடம் என்னப் பிரச்சனையோ இன்னிக்கு வரலை!நீதான் அவரை வெல்கம் பண்ணணும்!"

"நானா?"வாய் பிளந்தாள் அவள்.

"ஆமாம்மா!நான் இங்கே டிரான்ஸ்பர் ஆகி ஆறு மாசம் தான் ஆகுது!நீங்க ரொம்ப நாளா இருக்கீங்க..அதான்!"

"சார்...சீனியர் டீச்சர்ஸ்கிட்ட வெல்கம் பண்ண சொல்லலாமே!அவங்க தப்பா நினைத்துப்பாங்க!"

"இதோப் பாரும்மா!காரணம் இல்லாம உன்கிட்ட இந்த வேலையை தரலை!வருவது கலெக்டர்..அவரை பொறுமையா மரியாதையா வரவேற்கணும்!அதான் உன்னை கூப்பிட்டேன்!"-உறுதியாக அவர் கூற மறுக்க இயலாமல் தவித்தாள் சிவன்யா.

"சரிங்க சார்!"-ஆமோதித்தவளை சற்று தூரத்தில் இருந்து பொறாமையால் கவனித்தன சில கண்கள்.

"பார்த்தியா!நேற்று வந்தவள் முக்கியமா போயிட்டா!"என்றது ஓர் குரல்.

"ஆமா!நமக்கெல்லாம் மரியாதை தெரியாது பாரு!"சில குரல்கள் அவள் செவிப்படவே ஒலித்தன.அதைக் கேட்டவளின் மனதில் சுருக்கென்ற ஒரு வலி!!அந்த வலியுடனே தலைமை ஆசிரியரை ஒரு பார்வை பார்த்தாள் சிவன்யா.

"நீ கவலைக் கொள்ளாதே!"என்ற ஆறுதலானப் பார்வை பதிலாய் அவளுக்கு வந்தது.

சில நிமிடங்களில் விழா தொடங்க,மிக சரியான நேரத்திற்கு அங்கு வந்தது மாவட்ட ஆட்சியரின் வாகனம்!!!உரிய மரியாதை செலுத்தும் பொருட்டு,தமைமை ஆசானுடன் வாயிலுக்கு விரைந்தாள் சிவன்யா.இரு மழலைச் செல்வங்கள் மாலையுடன் வாயிலில் நின்றிருந்தனர்.சுற்றி இருந்த ஆசிரியர்களின் பொறாமை பார்வை ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்க,பெரும் சிரமத்துடன் வாயிலில் நின்றாள் சிவன்யா.காரிலிருந்து இறங்கினான் அவன்!!!இறங்கியவனின் முகம் காண,சிரம் நிமிர்ந்தாள் சிவன்யா!!

"வி வெல்கம் அவர் ஹானரபில் கலெக்டர் டூ திஸ் வன்டர்புல் அக்கேஷன்!"-ஒரு மாணவன் மேடையில் நின்றப்படி உரக்கப் பேசினான்.எதிர் நின்றவனை தேக கண்களால் கண்டவளின் விழிகள் நன்றாக அகண்டன.அவனா இவன்???என்றது மனம்.அவள் முகம் கண்ட ஆட்சியருக்கோ இறுகி இருந்த முகம் தளர்ந்தது.நான்கு விழிகளும் சந்தித்த வேளை எண்ணற்ற உரையாடல்கள் மௌனமாய் அவர்களுக்கு மட்டும் புரிவதாய்!!சூழ்நிலை உணர்ந்தவள்,பிள்ளைகள் வைத்திருந்த மலர் மாலையை எடுத்து தலைமை ஆசானிடம் அளிக்க,அவர் அதனை அவருக்கு சூட்டினார்.

"வெல்கம் சார்!"-மாலையை கழற்றி உதவியாளரிடம் அளித்துவிட்டு,புன்முறுவல் பூத்தான் அசோக்.சிவன்யாவின் விழிகளோ நிலைக்கொள்ளாமல் தவித்தது,மனமும் தான்!!!அவன் வந்த சில நிமிடங்களில் விழாக்கோலம் பூண்டது அப்பள்ளி!!!ஆனால்,விழா முழுதிலும் ஏதோ சிந்தனையிலே சிக்கித் தவித்தாள் சிவன்யா.அவ்வப்பொழுது அவனும் அதை கவனிக்காமல் இல்லை.மீண்டும் அவள் முகம் காணும் வாய்ப்பு கிட்டும் என்பது அவன் எதிர்நோக்காதது!!கிட்டிய நிகழ்வு அசாதாரண நிகழ்வாகவே ஒரு எண்ணம் அவனுக்குள்!!விழாவின் இறுதி வரையிலும் அங்கிருந்தான் அசோக்.விழா முடிந்து அனைவரும் சென்றப்பின்பும் சில நொடிகள் மனம் அங்கு இருக்கவே தவித்தது!!ஏனெனில்,ஒரு காலத்தில் அவன் பயின்ற பள்ளி அது!!!ஆசிரியர்கள் மாற்றம் அடைந்தனர்!பள்ளி மாறியது!ஆனால் நினைவுகள்???அவை என்றும் பசிமரத்தாணி அல்லவா!!!!நம்மில் பலரும் பள்ளியில் பயிலும் போது அப்பருவத்தை வெறுக்கலாம்!ஆனால்,வாழ்வில் என்றேனும் ஓர்நாள் அப்பருவத்தை எண்ணி நிச்சயம் ஏக்கம் கொள்வோம் அல்லவா????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.