(Reading time: 34 - 67 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 14 - வத்ஸலா

vs

மை காட்!!! அலறினான் அருகிருந்த விமானி.

தாங்கள் இறங்கிக்கொண்டிருப்பது ஓடு தளத்தை நோக்கி அல்ல அந்த விமான நிலையத்தை ஒட்டி இருந்த சாதரண சாலையை நோக்கி என்பது .புரிந்தது இருவருக்கும். அதிவேகத்தில் இறங்கிக்கொண்டிருந்தது விமானம். இன்னும் கிட்டத்தட்ட தொண்ணூறு நொடிகளுக்குள் விமானம் தரையை தொட்டுவிடும் நிலை.

விமானம் இறங்கி சாலையை தொட்டிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியவில்லை அவளால். இதற்கு இருவரது கவனக்குறைவே காரணம்.

‘வாட் தி ஹெல் தருண்..’ அருகிருந்த விமானி மீது பாய்ந்தாள் அவள். ஆனாலும், அந்த பரபரப்பிலும் சமாளித்து விட்டிருந்தாள். சட்டென ஒரு வட்டமடித்து விமானத்தை மேலே எழுப்பி இருந்தாள் ஹரிணி. இருப்பினும் படபடத்து போனது அவளுக்கு.

இப்போது சரியான பாதையில் சென்று விமானத்தை ஓடுதளத்தை நோக்கி இறக்கி கொண்டு சென்ற படபடப்பில், ஓடுதளத்தின் முனைக்கு கொண்டு சென்று இவள் பிரேக்குகளை அழுத்திய வேகத்தில் விமானமே குலுங்கி நின்றது. பயணிகள் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தனர்.

அப்படியே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஹரிணி. மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அடுத்து என்ன நடக்குமென தெரியும் அவளுக்கு. டி.ஜி.சி.ஏவிற்கு இவர்கள் இருவரும் பதில் சொல்லி ஆகவேண்டும். அதன் விதிமுறைகள் சற்றே கடுமையானவைதான்.

முதலில் இவர்களிடம் இரண்டு மூன்று மாதங்கள் விசாரணை நடக்கும். அதுவரை இவர்களது உரிமங்கள் தாற்காலிகமாக முடக்கப்படும். இவளால் காக்பிட்டுக்குள் கால் கூட வைக்க முடியாது. விசாரணைக்கு பிறகு இவர்களது உரிமங்கள் ரத்து கூட செய்யப்படலாம்!!! அடுத்து டி.வி களிலும் வலைத்தளங்கலிலும் கூட இந்த சம்பவம் விவாதிக்கப்படும். உயிர் வரை சுட்டன இந்த உண்மைகள்.

சில நிமிடங்கள் கடந்திருக்க அங்கே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த தனது வீட்டுக்கு தாமோதரனை  அழைத்துக்கொண்டு வந்திருந்தான் விவேக்.

விடுமுறை நாட்களில் ஸ்ரீனிவாசனுடன் அவன் இங்கே வந்துவிடுவான். நிறையவே இனிமையான நினைவுகள் கொண்ட வீடு அது. இப்போது அந்த வீட்டில் அங்கங்கே ஸ்ரீனிவாசனின் புகைப்படங்கள் வீற்றிருந்தன.

வாங்கப்பா... வாங்க... வாங்க.... வாங்க..’. அகமகிழ்ந்து வரவேற்றான் அவரை. சோபாவில் சென்று அமரவைத்தான்.

ஸ்ரீனிவாசன் ஒரு மகாராஜாவை போல் கம்பீரமாக அமர்ந்திருப்பார் அந்த சோபாவில். அவர் அதில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பார் இவன் அவருக்கு எதிரில் அமர்ந்து அவரையே ரசித்துக்கொண்டிருப்பான். இங்கே வந்தாலே அடிக்கடி நடக்கும் அந்த விளையாட்டு.  

‘சும்மா தைரியமா உட்காருங்க. இது உங்க வீடுப்பா..’ சொன்னான் ஒரு சிறு தயக்கத்துடன் அமர்ந்திருந்த தாமோதரனை பார்த்து. ஒரு ஆழ்ந்த சுவாசத்துடன் சற்றே இயல்பாக அமர்ந்தார் அவர்.

‘எப்படி இந்த உருவ ஒற்றுமை. ஒரே போல் ஏழு பேர்கள் இருப்பார்கள் என்பார்களே அது இதுதான். நிச்சயமாக இதுதான். இறைவன் படைப்பில் இது என்ன ஆச்சரியம்.’ சில நொடிகள் அவரையே பார்த்திருந்தவன் அவர் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான்.

‘ரொம்ப தேங்க்ஸ்பா..’ என்றான் நிறைவாக. ‘எங்கப்பா மறுபடியும் இந்த வீட்டுக்கு வரவே மாட்டார்னு நினைச்சு நினைச்சு அழுதிருக்கேன். ‘இதோ வந்திட்டார். எங்கப்பா வந்திட்டார் என்றான் நெகிழ்ச்சியாக.

‘இருங்க வந்திடறேன்’ என்று தனது பையை எடுத்து வந்தவன் அதிலிருந்து புது வேஷ்டி சட்டையை எடுத்தான்.

‘இனிமே எங்கப்பா இப்படி பழைய டிரஸ் எல்லாம் போடக்கூடாது. எப்பவும் பளிச்சுன்னு கம்பீரமா இருக்காணும்..’ அவரிடம் கொடுத்தான் அதை.

அவருக்கு உடை மாற்றிக்கொள்ள உதவிவிட்டு அவன் கையாலேயே அவருக்கு பிடித்தமானதை சமைத்து சாப்பிட வைத்தான். ஏதோ ஒரு பொக்கிஷத்தை பெற்றதைப்போல் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தான். ஏதோ ஒரு கிரீமை கொண்டு வந்து அவரது சுரசுரப்பான கையில் தடவினான்.

‘எங்கப்பா கை இப்படி எல்லாம் இருக்க நான் விட மாட்டேன்’ என்றான் இதமாக.

நேரம் இரவு எட்டு மணியை தொட்டிருந்தது.

அப்போது அவனது கைப்பேசிக்கு வந்தது அந்த அழைப்பு. அழைத்தது அவனது தோழி ராதிகா. அன்று மும்பை விமான நிலையத்தில் அவனை சந்தித்த அதே ராதிகா.

‘ஹேய்.. ஹவ் ஆர் யூ??? இவன் குரலில் இருந்த அந்த உற்சாகம் அந்த தோழிக்கு புரியாமல் இல்லை.

‘ஓய் என்னப்பா இவ்வளவு ஹாப்பியா இருக்கே. மேரேஜ் செட் ஆகிருச்சா என்ன??? இப்போ எங்கே இருக்கே நீ???

‘ஏய்... ஒரு ,மனுஷன் சிரிச்சா அதுக்கு காரணம் கல்யாணம் மட்டும்தான் இருக்குமா??? இது வேறே விஷயம். எனக்கே தெரியாம எனக்கு கிடைச்ச சர்ப்ரைஸ். ஒரு வாரம் அப்படியே ப்ரேக் எடுத்திட்டேன் இன்னொரு நாள் உனக்கு எல்லாம் சொல்றேன்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.