(Reading time: 34 - 67 minutes)

இரவு அவரையும் வசதியாக படுக்க வைத்துவிட்டு இவனும் படுத்துக்கொண்டான். ஏதேதோ பேசிக்கொண்டிருந்த போதும் அவரது கவனம் அதிலில்லை என்று நன்றாக புரிந்தது விவேக்குக்கு. உறங்கவும் இல்லை அவர். புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார் தாமோதரன். அதற்கான காரணம் விவேக்குக்கு புரியவே இல்லை.

அப்போது சிலீரென்று ஒரு சத்தம் அந்த அறையில். திடுக்கிட்டு எழுந்தான் விவேக். அங்கே அவனது அப்பா ஸ்ரீனிவாசனின் படம் கீழே விழுந்து அதன் கண்ணாடி நொறுங்கிப்போயிருந்தது.

விளக்கை போட்டு பார்த்த விவேக் எதையோ பெரிதாக இழந்து விட்டதை போல் பதைபதைத்துதான் போனான். சில நொடிகள் அவன் இதயம் ஸ்தம்பித்து நின்றதை போல் தோன்றியது.

‘என்னப்பா இது???’ எழுந்து உட்கார்ந்துவிட்டார் தாமோதரன்

‘ஒண்ணுமில்லபா. கண்ணாடி உடைஞ்சிருச்சு அவ்வளவுதான். நாளைக்கு மாத்திடலாம்’ அவருக்கு சமாதானம் சொல்லியும் விட்டான்.

இருவரும் விளக்கை அணைத்து விட்டு படுத்துக்கொள்ள இவன் மனம் ஏனோ உறங்க மறுத்து ஸ்ரீனிவாசனையே சுற்றிக்கொண்டிருந்தது. காலை எப்போது விடியுமெனதான் காத்திருந்தான் விவேக். காலை விடியும் தருவாயில்தான் உறங்கிப்போனார் தாமோதரன்.

உறக்கம் பக்கம் கூட வரவில்லை. விவேக்குக்கு. விடிந்தவுடன் எழுந்து குளித்துவிட்டு அந்த வீட்டு சமையல்காரர்கள் கொடுத்த காபியை வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்டு, அவர்களை தாமோதரனை கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு காலை ஒன்பது மணிக்கு கடை திறக்கும் நேரத்தில் அந்த கண்ணாடி கடையின் முன்னால் நின்றிருந்தான் விவேக். கையில் நேற்று உடைந்து போன ஸ்ரீனிவாசனின் புகைப்படத்துடன்!!!

புகைப்படத்தின் கண்ணாடியை மாற்றி வீட்டுக்கு கொண்டு வந்து அதை அந்த இடத்தில் மாட்டிவிட்ட பிறகே அப்படி ஒரு நிம்மதி விவேக்குக்கு.

‘என்னப்பா நீங்க??? டென்ஷன் பண்ணி விட்டீங்க. உங்க படம் உடைஞ்சதும் நைட் தூக்கமே வரலை. இனிமே இப்படி பண்ணாதீங்க’ அவரிடம் பேசிவிட்டு திரும்பினான் விவேக். தாமோதரன் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தார்.

சில மணி நேரங்கள் கடந்த பின்புதான் எழுந்தார் தாமோதரன். நேரம் மதியம் ஒன்றை தொட்டிருந்தது.

‘என்னப்பா நல்ல தூக்கமா. ரொம்ப அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. அதான் சாப்பிடகூட எழுப்பலை. வாங்க பல் தேய்ச்சி முகம் கழுவி ஏதாவது சாப்பிடலாம்’ இவன் அவரிடம் பரிவாக பேசிக்கொண்டிருக்க

‘விவேக் இன்னைக்கு நீயூஸ் பேப்பர் எதுவும் இருந்தா கொஞ்சம் தர்றியாபா’ என்றார் கவலை தோய்ந்த குரலில்.

யோசனையுடனே அதை எடுத்து அவரிடம் நீட்டினான். அங்கே இருந்தது ஆங்கில பேப்பர்கள். எதுவுமே புரியவில்லை என்ற போதும் அதை அவசரமாக புரட்டினார் அவர். அதன் பின் ஒரு பெருமூச்சுடன் அதை மடித்து வைத்தார்.

‘என்னப்பா என்ன தேடறீங்கபா பேப்பர்லே..’

‘இல்ல நேத்து சொன்னியே அதுதான். அந்த பொண்ணு ஹரிணி பத்தி. அது பத்தி ஏதாவது போட்டிருக்கான்னு..’ ’

‘அப்பா??? சற்றே குழப்பத்துடன் அவர் அருகில் அமர்ந்தான் விவேக் ‘ஹரிணிக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்??? அந்த நீயூஸ் கேட்டதிலிருந்து நீங்க சரியே இல்லை..’

‘சம்மந்தம் எல்லாம் ஒண்ணுமில்லை சும்மா தெரிஞ்சுக்கதான்’ அவர் சொல்லிக்கொண்டிருந்த போது இவனுக்குள் பளிச்சிட்டது மின்னல்.

‘அப்பா..’ என்றான் சட்டென ‘நிஜமா ஏதோ சம்மந்தம் இருக்கு. அன்னைக்கு ஹாஸ்பிடல்லே உங்க பையிலே ஹரிணி போட்டோ பார்த்தேனே நான். அதுக்கு அப்புறம் நான் அவளுக்கு மெசேஜ் கூட பண்ணேன். இருங்க வரேன்’ என்றவன் சென்று அவர் பையிலிருந்து அந்த புகைப்படத்தை எடுத்து வந்தான்.

அந்த புகைப்படத்தை அவரிடம் நீட்டியபடியே அவர் முகம் படித்தான் ‘ஹரிணி உங்களுக்கு சொந்தமாபா???’

‘சொந்தம்... சொந்தமெல்லாம் இல்லை..’ குரல் பிசிறடித்தது அவருக்கு. ‘தெரிஞ்ச பொண்ணு அவ்வளவுதான்.’ அவர் சொல்ல அவர் முகம் விட்டு விழி அகற்றவில்லை இவன். ‘அவளுக்கு ரொம்ப பிரச்சனையா, இல்ல என்னாச்சுன்னு கேட்டு சொல்ல முடியுமாபா..’

‘கண்டிப்பா கேட்டு சொல்றேன். நீங்க முதல்லே ஏதாவது சாப்பிடுங்க..’ என்றான் மனதில் விழுந்த அழுத்தமான கேள்விகளுடனே.

சில மணி நேரங்கள் கடந்திருக்க

‘இப்போ என்கொயரி ஸ்டார்ட் பண்ணி இருக்காங்கபா. இப்போ சென்னை கிளம்பி வந்திட்டு இருக்கா. மறுபடியும் ஒரு நாலஞ்சு நாளையிலே இன்னொரு என்கொயரி இருக்கும்..’ யாரிடமோ விசாரித்து அவன் தாமோதரனிடம் விளக்கிக்கொண்டிருந்த நேரத்தில்

சென்னைக்கு வந்து  இறங்கி இருந்தாள் ஹரிணி. அவளது டாக்சி நகர்ந்துக்கொண்டிருந்தது

அவள் வாழ்க்கையில் முதல் முறையாக உடலும் மனமும் மொத்தமாய் தளர்ந்து போயிருந்தது. ஒரே நாளில் பூமியே தலை கீழாய் மாறிப்போன உணர்வு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.