(Reading time: 34 - 67 minutes)

‘அப்பா..’ வீட்டுக்குள் வந்தபடியே அழைத்தான் விவேக். ‘இந்தாங்க உங்க பொண்ணு..’

காதுகளையும், தனது கண்களையும் நம்ப முடியாமல் நின்றிருந்தார் தாமோதரன்.  ‘விவேக் என் மகளை அழைத்து வந்திருக்கிறானா???

ஓடி சென்று தந்தையை அணைத்துக்கொண்டாள் ஹரிணி. ‘அப்பா உங்களுக்கு ஒண்ணுமில்லையே..’. இது மகள்.

‘என்னமா??? டிவியிலே உன்னை பத்தி என்னென்னமோ சொல்றாங்க..’ இது தந்தை.

கோபத்தில் தனக்கு யாருமே இல்லை என்று சொன்னவர்தான். ஆனால் இன்று மகளை பார்த்ததும் இப்படி கரைந்து போய் நிற்கிறாரே. அவர் செய்த தப்புகளை எல்லாம் இத்தனை எளிதாகக மன்னித்து விட்டாரே??? வியப்புடன் யோசித்தபடியே அங்கிருந்து விலகினான் விவேக்.

ஆம்!!! அவர் ஹரிணியின் தந்தைதான். ஹரிணியின் தந்தையாக மட்டுமே இருக்கிறார். நன்றாக புரிந்தது அவனுக்கு.

நிமிடங்கள் கரைந்து ஓட ‘விவேக்..’ அழைத்தார் தாமோதரன்.

‘சொல்லுங்கப்பா..’ வந்தான் அவன்.

‘ஹரிணி கிளம்பறாளாம்..’

‘ஓ.. ஷூர் டேக் கேர்...’ என்றான் அவள் முகம் பார்த்து.

‘விவேக்... ‘ மெல்ல அழைத்தார் அப்பா ‘வந்து அவ எப்படி ராத்திரி நேரத்திலே தனியா போவா. நான் போய் அவளை விட்டுட்டு காலையிலே வந்திடவா..’ அவர் தயங்கி தயங்கி கேட்க தலை சாய்த்து புன்னகைத்தபடியே அவர் முகம் பார்த்தான் விவேக்.

‘போயிட்டு வாங்க உங்க பொண்ணு கூட. இது உங்க வீடு நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம். என் நம்பர் இருக்கில்ல உங்ககிட்டே??? நீங்க எங்கே இருந்தாலும் ஒரு போன் பண்ணுங்க. நான் எப்பனாலும் உங்களை வந்து கூப்பிட்டுக்குவேன்’ அவன் சொல்ல அவர் முகம் மலர்ந்த வித்ததில் நெகிழ்ந்து போனான் விவேக்.

‘என் பை???’

‘இருங்க வரேன். நானே உங்களை கார்லே டிராப் பண்றேன்..’ என அவர் பையை எடுத்துக்கொண்டு வந்தான். ‘இதிலே நான் வாங்கிக்கொடுத்த துணியெல்லாம் இருக்கு. நீங்க  இனிமே பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிக்கணும் சரியா’

அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் அவர்களை இறக்கிவிட்டான் விவேக்

‘ஹரிணி ஒரு சின்ன ரிக்வெஸ்ட் உங்க அப்பாவை இனிமே சமையல் வேலைக்கு விடாதே ப்ளீஸ்’

‘அய்யோ.. இல்லை இனிமே இல்லை.. அவள் பதற

அவர் கையெல்லாம் ரொம்ப சுரசுரன்னு இருக்கு. பாவம் கொஞ்சம் பார்த்துக்கோ. அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. மருந்தெல்லாம் கரெக்டா சாப்பிட சொல்லு. டேக் கேர்.’

‘நான் சீக்கிரம் உன்கிட்டே வந்திடுவேன்..’ தாமோதரன் அவசரமாக சொல்ல

‘கண்டிப்பாபா. நான் வெயிட் பண்ணிட்டே இருப்பேன்..’ என்றான் விவேக் ஸ்ரீனிவாசன். அவர்கள் விடைபெற்று நகர்ந்தார்கள்.

‘அவரை நல்லபடியாக பார்த்துக்கொள்வாளா ஹரிணி??? கேள்வி பிறந்தது அவனுக்குள்ளே. பார்த்துக்கொள்வாள். அவள் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைகள் அவளை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திக்கொண்டிருக்கும் தோன்றியது அவனுக்கு.  காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்திருந்தான் விவேக். அன்று உடைந்து நொறுங்கிய அப்பாவின் படத்திற்கு முன்னால் சென்று அமர்ந்தான். அவன் கண்களில் நீர் சேர்ந்தது. அன்று அந்த மாலில் அப்பாவின் கை சேர்ந்து புன்னகைத்த அந்த குழந்தையின் பாவம் அவன் முகத்தில்.

‘நான் திரும்ப உங்ககிட்டேயே வந்திட்டேன்பா..’ என்றான் அவர் புகைப்படத்தை பார்த்து. ‘புரிஞ்சுதுபா எனக்கு. அப்பாங்கிறது உருவமில்லை ஒரு உணர்வு ஒரு பந்தம்னு புரிஞ்சது.

‘அன்னைக்கு சுதர்ஷன் வந்தப்போ நான் வெளியிலே ஓடி வந்து உட்கார்ந்துகிட்டு உங்ககிட்டே தானே புலம்பினேன். என் மனசிலே இருக்கிறது எல்லாம் அவர்கிட்டே பேசலையே. அதே மாதிரி  அன்னைக்கு உங்க போட்டோ உடைஞ்சப்போ என் மனசு அவ்வளவு தவிச்சு போச்சு. போட்டோதானே, அதே உருவத்திலேதானே இவர் இருக்கார் இவரை பார்த்துக்கலாமேன்னு தோணலை எனக்கு. உங்க போட்டோவை சரி பண்ணி மாட்டினதுக்கு அப்புறம்தான் நிம்மதி வந்தது.

இதெல்லாம் யோசிச்சு பார்த்தப்போதான் புரிஞ்சதுப்பா நீங்க வேறெங்கேயும் இல்லை எனக்குள்ளேயே, என் உணர்விலேயே  இருக்கீங்கன்னு!!! எனக்கு வழி காட்டிட்டே இருக்கீங்கனு!!! நான் தேவை இல்லாம வேறே யார் யார்கிட்டேயோ உங்களை தேடிட்டு இருக்கேன்னு!!!’ மனம் நிறைந்த பாவத்துடன் சொன்னான் விவேக்.

‘அவருக்கும் அதே நிலைதான் அவர் பொண்ணு இடத்திலே என்னை வெச்சு பார்க்க முடியாது அவராலே. அவ எத்தனை தப்பு செஞ்சிருந்தாலும் அவதான் அவருக்கு எல்லாம்’ . ஒரு ஆழ்ந்த மூச்சு அவனிடம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.