(Reading time: 9 - 17 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

மாட்டிக்கொண்டால், சரோசா வழக்கில் கண்டிப்புத் தேவை என்று அசோஸியேஷன் போட்ட தீர்மானங்களை நகல் எடுக்கச் சொல்வார். பிறகு போலீஸ் கமிஷனரிடம் சங்கத்தின் பிரதிநிதிக்குழு உறுப்பினராக அல்ல, உதவியாளனாக வரச்சொல்லுவார். இதில் அவனுக்கு சம்மதமில்லை. நேற்று பூக்காரியிடம் அவர் பேசிய விதமும், அவள் வேகவேகமாய் போன விதமும் சரோசாவை காப்பாற்றக்கூடும் என்று நினைத்தான். ஆகையால், ரமணனின் தலையைப் பார்த்ததும், தனது தலையை நெருப்புக் கோழி மாதிரி இதர மனிதத் தலைகளுக்கு மத்தியில் மூழ்கடித்துக் கொண்டான். ஆனால், ரமணனோ அந்தப் பிள்ளையாரை திரும்பிப் பாராமலேயே போனார். அவருக்கு இந்தத் 'தெரு பிள்ளையார்' பிடிக்காது. பக்கத்துத் தெருவில் இருக்கும் கோபுரம் - கலசம் என்ற பணக்காரப் பிள்ளையாரிடம்தான், போவார். போனார்.

   

மிஸ்டர். ரமணன் போகவும், பூசாரி திரைச் சீலையை விலக்கி, கர்ப்பூரம் ஏற்றவும் சரியாக இருந்தது.பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரக் குவியல்களோடு, காட்சி காட்டுவது போல் கற்பூர ஜோதி ஒளிர்ந்தது. அதில் அந்த கல்லுப்பிள்ளையார் கரைந்து ஜோதிப் பிள்ளையார் தோன்றியது போல் இருந்தது. இது புரியாத இளங்கோ, வழக்கம் போல் தெருவைப் பார்த்தான். எப்போது இந்த ருக்குமணி வந்தாள்? கோவில் மேட்டுக்குக் கீழே இடுப்பில் உள்ள கூடை தரையிறங்க, ருக்குமணி கண்களை மூடியபடி நின்றாள். அவள் பக்கத்தில் செம்பட்டை முடி கொண்ட ஒரு ஆறு வயதுப் பயல், அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

   

ருக்குமணி, விபூதி வாங்குவதற்குக் காத்திராமல் தன்னை தானே பிள்ளையார் என்பது போல் அனுமானித்து நின்ற அந்தப் பூசாரியை ஏறிட்டுப் பார்க்காமலேயே ருக்குமணியை பின்தொடர்ந்தான். பல பக்தர்களும், பக்தைகளும் விபூதி குங்குமம் வாங்குவது பற்றிக் கவலைப்படாமல் முன்னால் போன ருக்குமணியையும், பின்னால் பாய்ந்த இளங்கோவையும், கள்ளத்தனமாய் பார்த்தார்கள்.

   

இளங்கோவால், ருக்குமணியை அந்த சாலையின் முனையில்தான் பிடிக்க முடிந்தது.

   

அவள், இன்னொரு தெருவுக்குள் திரும்பும் வரைக்கும், அவள் பின்னாலேயே நடந்தான். பிறகு அம்புபோல் கூர்மைப்பட்ட இரண்டு தெருக்களின் முனையில் அவள் நின்றபோது, அவள் முன்னால் போய் நின்றான். ருக்குமணி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். பப்பாளிப் பழத்திற்கு கருப்பு வர்ணம் பூசியது போன்ற முகம். வேல் போல் கூர்மையான விரல்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.