(Reading time: 18 - 36 minutes)

கடவுளைக் கண்டவன் - விசயநரசிம்மன்

ங்கராஜன் தன் சொந்த ஆய்வுக்கூடத்தில் இருந்தான். அவனைச் சுற்றி ஆறு திரைகள், இரண்டு பெரியது, நான்கு சிறியது. அவைக் காட்டிக்கொண்டிருந்த வண்ணக்கோலங்களைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான் ர.ராஜன்.

ரொம்பவும் இல்லாத கொஞ்சமும் இல்லாத சிக்கனமான தேகம், கூர்மையாகப் பார்க்கும் விழிகள், அகன்ற நெற்றி, காதை உறுத்தாத கட்டைக் குரல். ஆங்காங்கு எட்டிப்பார்த்த நரைமுடி இல்லையென்றால் ரங்கராஜனை முப்பத்தைந்து வயதுக்காரன் என்று சொல்லமாட்டீர்கள். மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியன்.

ர.ரா-வின் வேகத்துக்கு அவனது கைக்கணினி ஈடுகொடுக்கவில்லை போல, அவ்வப்போது குறிப்புகளைச் சரளமாய்க் குரல்பதிவும் செய்துகொண்டிருந்தான்.

Kadavulai kandavan“வந்தனம் பாஸ்! எவ்ளோ போயிருக்கீங்க?” வசந்த் விசிலடித்துக்கொண்டேதான் உள்ளே வருவான்.

ரங்கராஜனைவிட அரையடி உயரம் அதிகம், அலைபாயும் கேசம். நேர்த்தியான உடற்கட்டு, அதை எடுத்துக்காட்டும் டி-சட்டையும், ஜீன்சும் அணிந்து ‘ஸ்மார்ட்’ என்று சொல்ல வைக்கும் முகம். ரங்கராஜனின் முதல் மற்றும் ஒரே ஆய்வு மாணவன் (’அந்தாளுகிட்ட எவன் டா சேருவான்!’.) ஆய்வு முடித்தபின் இவனோடே உதவியாய்ச் சேர்ந்துகொண்டுவிட்டான். பல்கலை வேலைக்கும் முயற்சி செய்துகொண்டிருக்-கிறான்.

”இரண்டாயிரம்” ர.ரா திரைகளைவிட்டுப் பார்வையைத் திருப்பாமலே பதில் சொன்னான்.

“பாஸ்… க்ளியோபாட்ராவக் கொண்டுவருவோமா? செம்ம அழகுனு வரலாறு பூரா வழிஞ்சு வெச்சிருக்காங்க பாஸ்…” ஆய்வுக்கூடத்திற்கான வெள்ளை மேலங்கியை எடுத்துப் போட்டுக்கொண்டு, திரைகளை நோட்டம் விட்டபடியே கேட்டான்.

”’ஸ்டாடிஸ்’ஸோட ஃபீல்டைத் தாண்டிப் போனா ஒரு வாரத்துக்கு எல்லாம் மரத்துடும், பரவால்லயா?” வழக்கமான பொய்க் கோவத்தைக் காட்டினான் ர.ரா.

“சரியான கடி பாஸ் நீங்க!”

”உண்மையாவே நீ நான்–லீனியர்ல டாக்ட்ரேட்’டா டா?”

“தீசிஸ்-ல நீங்கதான் கையெழுத்துப் போட்டிருக்கீங்க!”

“தப்புதான்!” ர.ரா இலேசாக தலையில் அடித்துக்கொண்டான்.

“மரத்துப் போனா என்ன?” குரல் கேட்டு இருவருமே திரும்பினர், பெண்குரல் என்றதால் வசந்த் கொஞ்சம் அதிக ஆவலோடே திரும்பினான்.

“ஹே, ஹாய்!” வசந்த் தானாகவே அவள் கைகளைக் குலுக்கினான், “பாஸ், நி.நா. கணினி வல்லுநர் கேட்டிருந்தீங்களே, நம்ம பல்கலை-லதான் ஸ்காலரா இருக்கா, செம மூளை, உங்களுக்கு ’பிசிக்ஸ்’லனா இவளுக்கு ’கம்ப்யூட்டர்’ல…” கையை விடவில்லை இன்னும், “நி.நா, டாக்டர் ரங்கராஜன்” ர.ரா-க்கும் சேர்த்து அவனே கைக்குலுக்கினான்.

“வந்தனம் நீனா” ர.ரா திரைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“நீனா இல்ல பாஸ், நி.நா. நித்ய… அப்பறம் என்னமா?”

“நித்யநாராயணி! நி-நா!” அழுத்திச் சொன்னாள். வசந்திடமிருந்து கையைப் பறித்துக்கொண்டு மணிக்கட்டைத் தடவிக்கொண்டாள்.

நி.நா-வைப் பார்த்தவுடன் முதலில் அவளது பட்டையான கண்ணாடியைத்தான் கவனிப்பீர்கள். அப்புறம் குதிரைவால் கொண்டை, கொஞ்சம் தொளதொள ஆடை, பூச்சு இல்லாத முகமும் உதடும், இவற்றையெல்லாம் தாண்டி அலட்டிக்கொள்ளாத அழகும் அலட்டிக்கொள்ளும் அறிவும் மின்னும் அவளிடம்.

”சரி, நி-நா” ரங்கராஜனும் அவளைப் போலவே அழுத்திச் சொல்லிக்காட்டினான், “நீ எதுக்கு தேவப்படுறனு வசந்த் சொல்லிருப்பான்…”

“இல்ல!” முடித்தாள்.

“என்னடா?” திரைகளைவிட்டு வசந்தை நோக்கி முறைத்தான்,

“சொல்ல வரதுக்குள்ள வீட்டுக்குப் போய்ட்டா பாஸ்” வசந்த் தனது அக்மார்க் இளித்தான்.

“இதக் கூட சொல்லாம ரெண்டு மணி நேரமா என்னடா பண்ணிட்டு இருந்த?, வேண்டாம் சொல்லாத!”

“நீங்க நினைக்குற மாதிரி இல்ல பாஸ்!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான், ”அவ ரிசர்ச் பத்திதான் பேசிட்டு இருந்தேன், இல்ல நினூ?”

“இல்ல!” நி.நா வசந்தைச் சீண்டிப்பார்த்தாள்.

“ஆல் ரைட், எனக்கு அதிக நேரம் இல்ல, முழு விவரமும் உனக்குத் தேவையில்ல, புரியவும் புரியாது…” ‘புரியாது’ என்றதில் நி.நா இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்தாள், வசந்த் ‘அமைதி’ என்று பின்னாலிருந்து கையசைத்தான், ரங்கராஜன் எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்,

“எங்க ஆராய்ச்சி ஒருவகை ‘டைம் டிராவல்’, ஆனா நாம எங்கயும் போகல, வெவ்வேறு காலத்திலிருந்து பொருளையோ ஆளையோ இங்க கொண்டு வரலாம், இதோ இந்தக் கூண்டுக்குள்ள, “ஸ்டாடிஸ்’, இதைச் சுத்தி மின்காந்தப் புலத்தை ஒரு குறிப்பிட்ட பேட்டர்னல் அலையவிடுறது மூலம் உள்ள இட-காலப் பரிமாணங்களை மாற்ற முடியும், அவ்ளோதான்!” நி.நா-வையும் திரைகளையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பேசினான் ர.ரா. வசந்தும் தன் பங்கிற்குச் சில கருவிகளை இயக்கிவிட்டுத் தன் கைக்கணினியில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான். ர.ரா நிறுத்தியதும் வசந்த் தொடர்ந்தான்,

“ஜடப் பொருள்கள்ல தொடங்கி ’ஸ்டாடிஸ்’-குள்ள ஆளைக் கொண்டு வர அளவுக்கு வந்துட்டோம். ஆனா இப்போதைக்கு எங்களால ‘ராண்டமா’தான் கொண்டுவர இயலுது. குறிப்பிட்ட இடம், காலத்துல குறிப்பிட்ட ஆளைக் கொண்டுவரதுதான் குறிக்கோள். இங்கதான் உன் உதவி தேவை…” வசந்த் நி.நா-வை நோக்கிக் கண்சிமிட்டினான். நி.நா (செல்லமாக) முறைத்தாள்.

“யெஸ் யெஸ்… வசந்த் சொல்ல மறந்துட்டேனே, நேத்து நீ போனப்புறம் என்ன ஆச்சு தெரியுமா, நம்பவே மாட்ட” ர.ரா சட்டென பரபரப்பானான், வசந்தும் நி.நா-வைவிட்டு அவனைக் கவனித்தான், “ஸ்வீப் ரேஞ்ச் ஆயிரம் ஆண்டுலேர்ந்து ஆயிரத்து ஐந்நூறுக்குப் போச்சு, டெஸ்ட் ரன் ஓட்டினேன்…” சின்னக் குழந்தைக்குக் கதை சொல்வதைப் போல ஆவலைத் தூண்ட இடைவெளிவிட்டுத் தொடர்ந்தான், ”ஸ்டாடிஸ்-குள்ள தி கிரேட் சோளா எம்பரர் வந்து நிக்குறாரு!”

வசந்தின் கண்கள் விரிந்தன, நி.நா-வும் பரபரப்பானாள், “என்ன சொல்றீங்க பாஸ்? ராஜ ராஜனா?”

“இல்லடா, ராஜேந்திரன்!” ர.ரா தன் கைக்கணினியில் தட்டினான், பெரிய திரைகள் இரண்டிலும் காட்சிகள் ஓடின- வெளிர்நீலம், இளஞ்சிவப்பு இழையோடி ஒளிர்ந்த அந்தக் கூண்டிற்குள் மஞ்சள் பட்டில் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும், இளஞ்சிவப்பு பட்டில் மேல் துண்டும் அணிந்த, ஆறடிக்குக் கொஞ்சம் உயரமாய், கட்டான உடலுடன், இடுப்பில் சொருகிய கட்டாரியும், முறுக்கு மீசையும், கொண்டை போட்ட சடைமுடியுமாக கம்பீரமான ஒருவன் கைகளை ஆவேசமாக ஆட்டிக் கத்திக்கொண்டிருந்தான்…

நி.நா. நம்ப சிரமப்பட்டாள்.

”என்ன பாஸ், மனுஷன் இவ்ளோ டென்ஷனா கத்துறாரு? என்ன பண்ணீங்க?”

“நான் என்னடா பண்ணேன், சட்டுனு இங்க வந்ததுல ஒன்னும் புரியாம கோவமாயிட்டாரு போல…”

“எந்த நேரத்துல தூக்கினீங்களோ! மனுஷனுக்கு எத்தன அரசிங்க தெரியுமா பாஸ்? மரத்துப் போச்சுனா கோவம் வரத்தான செய்யும்…”

“ஷட் அப் வசந்த்!”

வசந்த் நி.நா-வைப் பார்த்து மறுபடி கண்சிமிட்டினான்.

“’மரத்து’ மீன்ஸ் என்ன?” நி.நா திரையையே பார்த்தபடி கேட்டாள், பள்ளிப்பெண் போல துள்ளின அவள் கண்கள், வசந்த் கொஞ்சம் அவளுக்கு அருகில் சென்றான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.