(Reading time: 9 - 18 minutes)

டுத்தடுத்த நாள்கள் பல்லியோடே போயிற்று எனக்கு. நான் பல்லியைப் பற்றிப் பேச்செடுத்தாலே என் மனைவி முகஞ்சுளிப்பாள். இடையில் அவளுக்கு நிரூபித்துக் காட்டும் வகையில் வீட்டில் மூன்று இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தினேன் (அதற்கான செலவை மொத்தமாக என் கைக்காசில் இருந்தே கழித்துக் கொண்டாள், கிராதகி!)

இதுவரை ஒரு முறை கூட அந்தக் கேமரா கண்களில் சிக்கவில்லை அந்த நயவஞ்சக பல்லி! என்வரையில் இதுவே ஒரு ஆதாரம்தான், என் மனைவிக்கோ இது தற்செயல்.

ஒரு நாள் மாலை இதைப் பற்றித் தீவிரமாக விவாதித்தோம். அந்தப் பல்லியும் பரணில் இருந்தபடிக் கேட்டுக்கொண்டிருந்தது. சரியாக அடுத்த நாளே மூன்றில் இரண்டு கேமராக்களில் அது பதிவாகியிருந்தது, அதுவும் சமர்த்தாக சாதாரண பல்லியைப் போல மணிக்கணக்காய் அசையாமல் இருந்துவிட்டு, ஒன்றிரண்டு பூச்சிகளை மட்டும் ‘லபக்’கிப் பிடித்து மென்று ‘போஸ்’ கொடுத்திருந்தது.

“டிஸ்கவரி, அனிமல் பிளானட்னு அனுப்பி வை, போட்டாலும் போடுவாங்க” மனைவி கிண்டல் செய்தாள். கேலி கிண்டல் மனநிலையில் நான் இல்லை, சூடாக பதிலளித்தேன். எரிமலையாய் வெடித்தது ஒரு விவாதம். அதன் உச்சகட்டத்தில் அவளை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று “நம்ம வீட்ல இருந்த பல்லி இல்ல இது! அதைக் கொன்னு போட்டுட்டுதா இது வந்திருக்கு” என்றேன்.

“என்ன டா உளறுர! இதென்ன பல்லியா இல்ல ஜேம்ஸ் பாண்ட்டா? சயின்ஸ்

பிக்‌ஷன் மேக்ஸ் பிக்‌ஷன்னு கண்ட கதையும் படிச்சுக் கண்ட கண்ட படத்தையும் பார்த்தா இப்படித்தான் பைத்தியம் பிடிக்கும்!”

‘பைத்தியம்’ என்ற சொல்லில் அவள் கன்னத்தில் என் கை பதிந்தது. அவள் அடுத்த நொடியே கிளம்பிச் சென்றுவிட்டாள். அவள் செல்லும்போது வாசல் அருகில் அந்தப் பல்லி இருந்தது. ஒரு குற்ற உணர்வோடு அவளைப் பார்ப்பதைப் போலத் தோன்றியது எனக்கு!

ஆற்றாமை, கோவம், எரிச்சல், குழப்பம், ஏக்கம், ஆர்வம் – அப்புறம் அந்தப் பல்லி!

இரண்டு நாட்கள் முழுதாய் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்னால் – மாமனார் வீட்டுக்குப் போய் சமாதானப்படுத்தி அவளை அழைத்து வந்தேன் (அங்கே என்னைப் பார்த்த பார்வை தனிக்கதை!)

‘இனி பல்லியைப் பற்றிப் பேசுவதில்லை’ என்ற சத்தியம்தான் சமாதானத்தின் ஆணிவேர். இனி சாம்பாரில் பல்லி விழுந்தால்கூட யாருக்கும் சொல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டேன்!

ஆனால் இயலவில்லை! அந்தப் பல்லி என்னை நோட்டம்விடுகிறது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. சில சமயம் அதைப் பார்த்துச் ‘சனியனே’ என்று நான் திட்டுவேன், அது முன்னங்கால்களை உந்தி எழுந்து இறங்கி (தண்டால் எடுப்பதைப் போல) அசைந்துவிட்டுத் தெளிவாக என்னைப் பார்த்துப் புன்னகைக்கும்!

அதன் வினோத செயல்பாடுகளைக் கேமராக்களில் சிக்க வைக்கும் முயற்சியில் பட்டன் கேமரா, பேனா கேமரா என்று சேகரிப்பதுதான் மிச்சம். ரொம்ப ஜாக்கிரதையான பல்லிதான்!

ஒருமுறை அதனோடு சமாதானம் பேச முயன்று பார்த்தேன், என் மனைவி என்னை முறைத்துவிட்டுப் போனதுதான் மிச்சம்.

தலை சுற்றியது. அப்பொழுதுதான் இதையெல்லாம் ஒரு கதையாக எழுதலாம் என்று தோன்றியது. பேசத்தானே கூடாது? எழுதலாமே?

கணினியை இயக்கி, நோட்பேட்டைத் திறந்துகொண்டு அமர்ந்தேன்:

       சிங்கம், புலி, யானை, குதிரை, ஆடு, மாடுஇப்படி ஏதாவதுனா கூட நம்புவீர்கள், போயும் போயும் ஒரு பல்லிக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நீங்கள் நம்புவீர்களா

கடகடவென்று சொற்கள் ஓட, என் மனத்தில் அரித்துக்கொண்டிருந்ததைக் கதையில் கொட்டினேன். நான் வேகமாக மும்முரமாக எதையோ டைப்புவதைப் பார்த்துவிட்டு ஆர்வமாக அருகில் வந்த என்னவள் “இந்தக் கருமம்தானா! என் மானத்தை வேற ஏண்டா வாங்குற? இதை ‘சில்சீ’ல வேற போட்டுத் தொலைப்பியே!...” புலம்பிக்கொண்டே மாடிக்குத் துணி உலர்த்தச் சென்றுவிட்டாள்.

அவள் போவதற்கே காத்திருந்ததைப் போல வேக வேகமாக என் அருகில் ஓடி வந்தது அந்தப் பாதகப் பல்லி. வழக்கம்போல என்னை நோட்டம்விடும் என்று எண்ணி நான் என் வேலையைத் தொடர்ந்தேன், ஆனால் அது எக்கிக் கணினியின் விசைப் பலகை மேல் விழுந்தது, நான் பதறி என் கைகளை உதறிப் பின்வாங்கினேன்.

விசைப் பலகையில் நின்றவாறு என்னைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தது. பின்னர் ‘டிராகன் நடனம்’ ஆடுவதைப் போலக் கால்களை முன்னாலும் பின்னாலும் பக்கவாட்டிலும் வைத்து அசைந்தது…

இதைப் படம் பிடித்தே ஆக வேண்டும் என்று கேமராக்களில் ஒன்றை எடுத்துவர சென்றேன், என் ஓரக்கண் அதன் மீதே இருந்தது, அதுவும் ஏதோ ஒரு மெதுவான தாளத்திற்கு ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருந்தது.

நான் கேமராவுடன் அருகில் வரவும் அது தன் நடனத்தை நிறுத்தவும் சரியாக இருந்தது (வழக்கம் போல!) என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு என் கணினித் திரையைப் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன் கால்கள் பட்டதில் விசைகள் அழுந்தித் தட்டச்சு ஆகியிருந்தது:

அச்ச,மில்.;லை., நட்[பு முறையில்;’.க் வந்தே.]ன்!

.ன்னோ,டு பேசநான்.’ தயார்ச், நீ?...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.