(Reading time: 19 - 37 minutes)

ப்போது அவள் தந்தை "அழாதே நிஷா. இதற்கெல்லாம் அழுவார்களா" என்று ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

அவள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவளைப் பிடிக்கவில்லை. காரணம், எங்களுக்குப் பெண்களே பிடிக்காது. என் தந்தை அவள் தந்தையிடம் பேசத் தொடங்கினார்.

"ஏன் அழுகிறாள்?"

"சென்னைக்கு இவளைக் கல்லூரியில் சேர்ப்பதற்காக போகிறோம். முதல்முறையாக வீட்டைப் பிரிவதால் இவ்வாறு அழுகிறாள்" என்றார் அவர்.

"நம்ம ஊர் பொண்ணு, எப்பவும் தைரியமாக இருக்கனும்மா. அழக்கூடாது" என்றார் என் அப்பா.

அவளது கல்லூரியின் பெயரைக் கேட்டார் அப்பா. அவள் கல்லூரியின் பெயரை சொன்னதும் சிறு மகிழ்ச்சி என்னுள் தோன்றியது. நாங்கள் சேரப்போகும் கல்லூரியும் அதுதான்.

"என் மகனும் அங்கேதான் படிக்க போகிறான்"என்றார் என் தந்தை.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் இதழோரம் புன்னகைப் பூத்ததை நான் அறிந்தேன். பின் மறுபடியும் தலைக்குனிந்து கொண்டாள்.

எங்கள் இருவரின் தந்தையும் நண்பர்கள் போல் நன்றாக பேசி வந்தார்கள்.

நாங்கள் சென்னையை அடைந்தவுடன் கல்லூரிக்குப் பயணித்தோம். கல்லூரிக்குப் பக்கத்தில்தான் ஆண்கள் மற்றும் பெண்களின் விடுதி உள்ளது. நிஷா அவளது பெற்றோர்களுடன் பெண்களின் விடுதிக்குச் சென்றாள். நானும் என் நண்பனும் ஆண்களின் விடுதிக்கு வந்தோம். இருவருக்கும் ஒரே அறையில் இடம் கேட்டோம். விடுதி அறை ஒன்றில் மூவர் தங்கலாம். எங்கள் இருவர் போக எங்கள் அறையில் இன்னொருவன் இருந்தான். அவன் பெயர் சிங்கமுத்து. பெயரில் மட்டும்தான் சிங்கம். அன்றுமுதல் சிங்கமும் எங்கள் நண்பனாகினான்.

முதல் நாள் கல்லூரிக்குச் சென்றோம். நிஷாவும் எங்கள் வகுப்பறையிலே அமர்ந்திருந்தாள். கவலையாகவே காணப்பட்டாள். என்னைப் பார்த்ததும் சிறு புன்னகை பூத்தாள். பேராசிரியர் வந்தவுடன் பெயர் வரிசையில் வகுப்பை இரண்டாகப் பிரித்தார். இனிமேல் இரண்டு வகுப்பு'அ' மற்றும் 'ஆ' பிரிவு என்றார். நிஷா பெயர் வரிசையில் 'அ' பிரிவு. நாங்கள் 'ஆ' பிரிவு.

அப்போது சரவணன் கூறினான் "அப்பாடா, அவ நம்ம வகுப்பு இல்ல. நம்ம வகுப்பா இருந்தா நம்மல பத்தி வீட்டுல பத்த வச்சிருவா" என்றான்.

என் இதழ் சிரித்தாலும், என் இதயத்தில் சிறு உறுத்தல் "பாவம் அவள்" என்று. 

ஆனாலும் அவள் பக்கத்து வகுப்பறையே என்பதால் எந்த உதவி வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது.

நாட்கள் நகரத் தொடங்கியது. கல்லூரி வாழ்க்கை படத்தில் வருவதுபோல் இல்லாமல், பள்ளியைவிட கொடுமையாய் இருந்தது.

இந்த ஒரு வருடம் கல்லூரி வாழ்க்கையில், நாங்கள் இருமுறை எங்கள் ஊருக்குச் சென்றிருப்போம். இங்கே நாங்கள் என்பது நான்,சரவணன், நிஷா மற்றும் அவள் தோழி யமுனா. யமுனாவும் சிவகங்கைதான். அந்த இருமுறையும் சரவணன் அவர்களுடன் வரமாட்டேன் என்றான்.

நான் "அவர்கள் பாவம் துணைக்குப் போகலாம். நாம் அவர்களுடன் பேசக்கூட வேண்டாம்" என்றேன்.

அவனை மிகவும் வற்புறுத்திதான் அழைத்துவந்தேன். அதிலிருந்து, நிஷாவும், நானும் மிகக் குறைந்த வார்த்தையில் பேசத்தொடங்கினோம்.

ரண்டாம் வருடம் தொடங்கியதில் இருந்து நாங்கள் இனி கடைசித் தேர்வுக்கு முன் எந்த ஒரு சிறு தேர்வுக்கும் புத்தகம் வாங்குவதில்லை என்று சபதம் எடுத்தோம். நிஷா என் பக்கத்து வகுப்பறை என்பதால், எனக்குத் தேர்வு வரும்போதெல்லாம் அவளிடம்தான் புத்தகம் வாங்கிப் படிப்பேன்.

ஒருமுறை கணக்குத் தேர்வு வந்தது. நிஷாவிடம் வழக்கம் போல் புத்தகம் வாங்கினேன்.

அன்று இரவு விடுதியில் படிக்கும் போது ஒரு பக்கத்தில் "உன்னை ஒரு பெண் நேசிக்கிறாள்" என்று எழுதியிருந்தது.

இது நிஷாவின் கையெழுத்தே தான். என்னுள் புரியாத ஓர் மாற்றம். என்னவென்றே புரியவில்லை. என் உயிர் நண்பன் சரவணனைத் தவிர என் உடன் படிப்பவர்கள் எல்லாம் காதலித்து வருகிறார்கள்.

எனக்கும் காதலித்தால் என்ன என்று தோன்றும் நேரத்தில், இல்லை நமக்கு காதல் சரிபட்டு வராது என்று தோன்றியது. ஏன் சரிபட்டு வராது என்றும் தோன்றியது. இப்படிப் பல கேள்விகள் என்னுள் மாறிமாறி எழுந்தன. கடைசி வரையில் படிக்கமுடியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன்.

திடீரென்று புத்தகத்தை திறந்து "உன்னை ஒரு பெண் நேசிக்கிறாள்" என்ற வாக்கியத்தின் கீழ் "யார் அந்த பெண்" என்று எழுதினேன். மறுநாள் நிஷாவை பார்க்கும்போது, அந்த புத்தகத்தை கொடுத்தேன்.

அவளிடம் "இன்று வகுப்பு முடிந்ததும் புத்தகம் வேண்டும்" என்றேன்.

அவளும் சிறுப்புன்னகையுடன் "சரி" என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.