(Reading time: 19 - 37 minutes)

ருநாள் விடுதியிலிருந்து கல்லூரிக்கு வர எனக்கும், சரவணனுக்கும் ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது. அதிலும் விடுதி கல்லூரிக்குப் பின்புறமே. அன்றைய வகுப்பு அரக்கி அகிலாவினுடையது. அவர்தான் கணிதப் பேராசிரியை. அவர்களுக்கு விடுதியில் இருக்கும் மூன்று பசங்களையும் பிடிக்காது. நாங்கள் தாமதமாய் வருவதைப் பார்த்த அகிலா கோபமாகி

"ஏன்டா வந்திங்க, அப்படியே போய்ருங்க" என்று சொல்லிவிட்டு பாடத்தை தொடர்ந்தார்.

விடுதியில் தங்கிடாம வெளிய இருந்து வந்த பசங்க கொஞ்ச பேரு எங்களுக்கு அப்புறம்தான் வந்தாங்க. அவர்களை எல்லாம் உள்ள போக சொல்லிட்டா அந்த அரக்கி.

சரவணனுக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது.

என் காதுகிட்ட வந்து "மச்சான், அவ உன் இடுப்பு உயரம்தான் இருக்கா, ஓங்கி மண்டைல ஒரு தட்டுதட்டு. மண்ணுக்குள்ள போய்டுவா" என்றான்.

எனக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் சிரிப்பை அடக்கி கொண்டேன். அரக்கி எங்களைக் கோபமாய் பார்ப்பதுபோல் தோன்றியது.

"மச்சான் செத்தோம்டா" என்றேன்.

அரக்கியின் பார்வை வேறு எங்கேயோ போனது. அங்கே பார்த்தால் எங்கள் சிங்கம்(சிங்கமுத்து). தலைவன் 50 நிமிடம் தாமதம்.

அவனை "நீயெல்லாம் எதுக்கு படிக்க வர..." எனத் திட்டத் தொடங்கினாள்.

அந்த சமயம் நிஷா பக்கத்து வகுப்பறையில் இருந்து வெளியே வந்தாள். என்னைப் பார்த்தாள். நானும் அவளைப் பார்த்தேன்.

அவள் முக பாவனையிலே "என்ன ஆயிற்று" என்றுக் கேட்டாள்.

நான் முக பாவனையில் "ஒன்றுமில்லை. சப்ப விஷயம்" என்றேன்.

அப்போது அவள் ஒரு சிரிப்பு சிரித்தாள். ஏதோ மின்னல் வெட்டுவது போலே இருந்தது. அந்தச் சிரிப்பு, அர்த்தமில்லா என் வாழ்வுக்கு அர்த்தம் தருவதாய் இருந்தது. அன்றைய நாள் எனக்கு மட்டும் இன்பமாய் இருந்தது.

நாட்கள் மிகவும் சந்தோஷமாக நகர்ந்தன. கல்லூரியின் கடைசி வருடத்தை எட்டிவிட்டோம். நானும், நிஷாவும் நல்ல நண்பர்கள் ஆகினோம். சரவணன் உறங்கிவிட்டால் கைப்பேசியில் இரவு 1 மணி வரைக் கூட உரையாடினோம். ஒருமுறை என் காதலைச் சொல்ல முயற்சித்தேன்.

"என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். நாளை அவன் பதிவுத்திருமணம் செய்யப் போகிறான்." என்றேன்.

"பெற்றோரை மறந்து எப்படி திருமணம் செய்ய இவர்களுக்கு மனம் வருகிறது" என்றாள்.

"நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்" என்றேன்.

"என் அப்பா, அம்மா விருப்பப்படிதான் என் திருமணம் நடக்கும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதால்தான் காதலும் எனக்குப் பிடிப்பதில்லை" என்றாள்.

அதோடு புரிந்துகொண்டேன் அவளுக்குக் காதல் பிடிக்காது என்று. இருந்தாலும் என் மனம் சொல்கிறது அவள் என்னைக் காதலிப்பதாய்.

கல்லூரியில், பல அழகிய பெண்கள் இருந்தாலும் என் கண்கள் அவளையே நோக்கியது. அவளைப் பார்க்கும்போது இவ்வுலகமே எனக்கு மறந்துவிடுகிறது. இப்போதெல்லாம், கவிதை எழுதத் தொடங்கிவிட்டேன். அதில் ஒன்று

"என் மனம்கூட என் எதிரிதான்;

என்னவள் கண்டதும் அவள்பின்னே சென்றதால்!!!..."

அவள் நினைவுகள் என்னை வாட்டியது. காதலைச் சொல்ல முடியாமல் தவிக்க வைத்தது. நாங்கள் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்தோம். பொங்கலன்று அவள் வாழ்த்துத்துணுக்கு அனுப்புவாள் எனக் காத்திருந்தேன். பிறகு நானே முதலில் வாழ்த்துத்துணுக்கு அனுப்பினேன். ஆனால் அவள் பதில் அனுப்பவில்லை. கவலையில் என் வீட்டுக்கு வெளியே வந்தேன்.

"பொங்கல் வாழ்த்துக்கள் விக்கி" என்று ஓர் பெண்ணின் குரல் கேட்டது.

அது நிஷாவின் குரல்போல இருந்தது. திரும்பினால், என்னை என்னால் நம்ப இயலவில்லை. அது நிஷாதான். ஆனால், இன்று அவள் மிகமிக அழகாக இருந்தாள். காரணம், தாவணி அணிந்திருந்ததால் தேவதையாய் தோன்றினாள். மகிழ்ச்சியில் திளைத்து நின்றேன்.

அவள் "விக்கி..." என்றாள்.

சொர்க்கம் நோக்கிப் போய் கொண்டிருந்தவன் அவள் குரல் கேட்டதும் பூமிக்குத் திரும்பினேன்.

நானும் "பொங்கல் வாழ்த்து" என்றேன்.

அவள் கையில் வைத்திருந்த பொங்கல் பலகாரத்தட்டை என்னிடம் நீட்டினாள்.

"உள்ளே என் அம்மா இருக்கிறார். அவர்களிடம் கொடு" என்றேன்.

அப்போது அவள் ஒரு சிரிப்பு சிரித்தாள் அவ்வளவு தான். நான் கீழ் விழாமல் விழுந்தேன். அவள் என் வீட்டினுள் சென்றாள்.

தாவணியில் தேவதையையும் மிஞ்சும் கன்னியாய் தோன்றினாள்.

பிறகு, சிந்தித்தேன் பெண்கள் ஏன் தாவணியைத் தவிர்த்து பிற ஆடைகளை அணிகிறார்கள் என்று. அதன்பின் கேள்வியைத் தவிர்த்து என் தேவதையை ரசித்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.