(Reading time: 35 - 70 minutes)

னால் விஜி குழப்பிக் கொள்ளவில்லை.. கங்காவை துஷ்யந்த் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். கணவன் செய்தது தவறாக இருந்தாலும், இப்போதும் கங்கா துஷ்யந்தோடு ஒட்டிக் கொண்டிருப்பது பணத்துக்காக மட்டும் தான் என்று நினைத்தார். அவளோடு பழக்கம் இருக்கும் வரை துஷ்யந்த் வேறொரு கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்று கோமதியின் மனதை குழப்பினார். கங்காவை நேரில் பார்த்து துஷ்யந்த் வாழ்க்கையை விட்டு விலகிச் செல்லும்படி சொல்ல வேண்டும் என்று கோமதியை உடன் அழைத்துச் சென்றார்.

ஆனால் கங்காவிடம் தனியாக அதைப்பற்றி பேசியிருக்கலாம்.. ஆனால் அவள் வீட்டின் முன் சென்று கங்காவை அழைத்து மற்றவர்கள் பார்வையில் படும்படி கங்காவை விஜி மிகவும் கேவலமாக பேசினார். அவள் நடத்தையைப் பற்றி தகாத வார்த்தைகளால் பேசி கங்காவை கூனி குறுக வைத்தார். ஏற்கனவே மற்றவர்கள் வாய்க்கு அவலாக மாறியிருந்த கங்காவை இப்போது மற்றவர்கள் மிகவும் கீழாக பார்த்தனர். விஜி பேசியது கோமதிக்கே அதிகப்படியாக தோன்றியது. விஜி இப்படியெல்லாம் பேசுவார் என்று தெரிந்திருந்தால் அவரை உடன் அழைத்து வந்திருக்கவே மாட்டார். கங்கா நின்றிருந்த நிலையை பார்த்து கோமதிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

உடன் இருந்த வாணிக்கு வேறு விஜி சாபங்களை அள்ளி வழங்கினார். உண்ட வீட்டுக்கே கெடுதல் நினைச்சிருக்கியே என்று திட்டி தீர்த்தார். பொறுத்து பார்த்து கோமதியே விஜியை அதட்டி அவர் பேச்சை அடக்கும் நிலை வந்தது. என்ன தான் கங்கா தவறானவளாகவே இருந்தாலும் அனைத்துக்கும் கங்கா மட்டுமே காரணமாய் இருக்க முடியாது என்பது கோமதிக்கு புரிந்து தான் இருந்தது. விஜியை போல் கங்காவிடம் அவரால் கோபத்தை காட்ட முடியவில்லை. ஆனால் கையெடுத்து கும்பிட்டு என் மகனோட வாழ்க்கையை விட்டு விலகிடு என்று கெஞ்சினார்.

அவர்கள் இருவரும் கிளம்பியதும் அவமானத்தால் அதிர்ச்சியில் அப்படியே கங்கா வீட்டுக்குள் அடைந்துக் கொண்டாள். அந்த வீட்டின் உரிமையாளரோ, “புருஷன் யாருன்னு சொல்லலன்னாலும் ஏதோ கண்ணியமா வாழறிங்கன்னு தான் வீடு கொடுத்தேன்.. அக்கம் பக்கத்துல இருக்கவங்கக் கூட ஏன் இதுபோல ஆளுங்களுக்கெல்லாம் வீடு கொடுக்கிறன்னு சொன்னப்ப கூட அதை கண்டுக்காம இருந்தேன்.. உன்னை பார்க்கிறப்போ தப்பானவளா இருக்க மாட்டேன்னு தான் தோணுச்சு.. ஆனா யாரையும் வெளித் தோற்றத்தை வச்சு எடை போட முடியாதுன்னு இப்போ தான தெரிஞ்சுது.. உடனே வீட்டை காலிப் பண்ணுங்க” என்று கத்தி விட்டு சென்றார்.

ஏற்கனவே ஒரு மாதத்தில் காலி செய்வதாக தான் சொல்லியிருந்தனர். சொந்தமாக வாங்கிய வீட்டில் சில மாற்று வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. அந்த வேலை இப்போது நடந்துக் கொண்டிருந்ததால், அந்த வேலை முடிந்ததும் பால் காய்ச்ச முடிவு செய்திருந்தனர். இப்போதோ  உடனே காலி செய்ய சொல்லி சொன்னதால், வாணி போய் பேசிப் பார்த்தும் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே காலி செய்ய அவகாசம் கொடுத்திருந்தார்.

இந்த நேரம் இளங்கோவும் ஊரில் இல்லை. தன் குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருந்தான். இவர்கள் இருவரையும் கூட அழைத்தான். ஆனால் கங்கா வர மறுத்துவிட்டாள். கிளம்பி ஒரு நாள் தான் ஆகிறது.. பத்து நாட்கள் சுற்றுலா, அதனால் அவன் இப்போது வர வாய்ப்பில்லை. கங்காவோ அழுதப்படியே உட்கார்ந்திருந்தாள். இந்த நேரத்தில் அவளை தனியாக விடவும் வாணிக்கு பயமாக இருந்தது. வீட்டில் வேலை முடியாத பட்சத்தில் அடுத்து எங்கே போவது? என்ன செய்வது? என்று புரியாமல் தவித்தார். பொதுவாக ஏதாவது பிரச்சனை என்றால் துஷ்யந்திடம் தான் வாணி தெரியப்படுத்துவார். ஆனால் இன்று பிரச்சனையோ அவனது அத்தை மற்றும் அன்னையால்.. சொல்லலாமா வேண்டாமா? என்று யோசித்து கடைசியில் அலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் விட்டார்.

விஷயம் தெரிந்ததும் ஊரிலிருந்து புறப்பட்டவன், நேராக இங்கு தான் வந்தான். கங்கா இப்போது என்ன மனநிலையில் இருப்பாள் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனாலும் என்ன சொல்லி அவனளை தேற்றுவான்.. எதுவாக இருந்தாலும் தன்னிடம் கேட்காமல் ஏன் அவளிடம் சென்று கேட்டார்கள் என்று கோபமாக வந்தது. அவர்களிடம் சென்று கோபத்தை காட்ட வேண்டும் என்று மனம் துடித்தாலும், முதலில் அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியதாலேயே வந்தான்.

ஆனால் அவளோ கோபக் கனலாக அவன் முன் காட்சி அளித்தாள். அவன் இனி இங்கு வரக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல.. தான் பட்ட அவமானத்தின் உச்சக்கட்டத்தில், தான் என்ன பேசுகிறோம் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை..  “உங்களுக்கு என்ன வேணும்னு இங்க வர்றீங்க.. நான் அவமானத்துல கூனி குறுகி வீட்டுக்குள்ளேயே முடங்கறது தான் உங்களுக்கு வேணுமா? நான் தான் உங்க கூட எந்த உறவும் வேண்டாம்னு சொல்றேனே.. அப்படியும் நீங்க வர்றீங்கன்னா என்ன அர்த்தம்னு எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு, குன்னூர்ல என்கிட்ட நீங்க பேசினதெல்லாம் சும்மா நடிப்பு. உங்களுக்கு என்னோட உடல் ரீதியா உறவு வச்சிக்கணும் அதுக்கு தான் என் மேல அக்கறை இருக்க மாதிரி வேஷம் போட்றீங்க..”

“கங்கா.. என் மனசுல ஒரு போதும் அப்படி நினைச்சு பார்த்ததில்ல” அவள் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததில் வேதனையில் துடித்தான்.

“நான் எத்தனை சொல்லியும்  நீங்க கேக்காம எனக்கு தொந்தரவு கொடுத்தா நான் அப்படித்தான் நினைப்பேன்.. இன்னைக்கு என் வாழ்க்கையில் நடந்தது உச்சக்கட்ட அவமானம்.. இப்படி ஒரு அவமானம் எனக்கு  நடக்கணும்னு தான் என்னை அன்னைக்கு காப்பாத்தீனீங்களா? இப்படி அடிக்கடி என் மேல அக்கறை காட்றதா நீங்க எனக்கு இப்படி அவதூறு பேச்சுக்களை தேடிக் கொடுக்கிறதுக்கு பதிலா, உங்க மனசுல இருக்க கீழ்த்தரமான எண்ணத்தை வெளிப்படையாவே சொல்லி இருக்கலாம்..”

“கங்கா..”

“உங்க மனசுல தப்பு எதுவும் இல்லல்ல.. அப்போ எனக்கு நீங்க நல்லது நினைச்சீங்கன்னா என்னை பார்க்க வராதீங்க.. திரும்பவும் இப்படில்லாம் நடந்தா சாவறத தவிர எனக்கு வேற வழியில்ல.. ப்ளீஸ் என்னை கொஞ்சமாவது மானத்தோட வாழ விடுங்க..” என்று கெஞ்சினாள்.

அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை. இனியும் அவளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து தான் கிளம்பினான். ஆனால் அதை மனம் தான் ஏற்றுக் கொள்ள மறுத்தது. எத்தனையோ முறை கங்கா இப்படி கோபமாக பேசியது உண்டு. இதே போல் ஒருமுறை அவள் கோபமாக பேசி அதை தாங்க முடியாமல் குடித்துவிட்டு கூட சென்றிருக்கிறான். அப்போது கூட “மத்தவங்க பேசறது உண்மைன்னு காமிக்க தான் இப்படி நடந்துக்கிறீங்களா?” என்று கோபப்பட்டிருக்கிறாள். ஆனால் இன்றோ சுத்தமாக அவன் மீது நம்பிக்கை இல்லாதது போல் அல்லவா பேசுகிறாள். மூன்று வருடமாக அவள் மனம் மாறும் என்று காத்திருந்தவனுக்கு, இப்போதோ என்றுமே அவள் மனம் மாறாது.. அவளை இனி பார்க்க கூட முடியாது என்ற உண்மை உரைத்தது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள தான் அவனால் முடியவில்லை. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டே காரில் பயணித்தவன் கவனம் சிதறியதால், அவனது கார் விபத்துக்குள்ளாகி அவனை தீவிர மருத்துவ பிரிவில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.