(Reading time: 35 - 70 minutes)

வாணி கங்கா வாழ்கையில் நடந்த முழுவதையும் சொல்லி முடித்த போது அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் அலை அடித்துக் கொண்டிருந்தது. உண்மை தெரியாமல் கங்காவை என்னவெல்லாம் சொல்லிவிட்டோம் என்று தங்களுக்குள்ளேயே வருத்தப்பட்டுக் கொண்டனர். கங்கா எப்படிப்பட்ட பெண் என்று ஆச்சர்யப்பட்டனர். ஆனால் அங்குள்ளவர்களின் அமைதி வாணிக்கு குழப்பத்தை தந்தது. தான் சொன்னதை நம்பவில்லையோ என்று பயந்தவர், “அம்மா நான் சொன்னது உண்மை தான்ம்மா.. என்னோட பேச்சில் நம்பிக்கை இல்லன்னா,  இந்த போட்டோவை பாருங்க.. நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்கே தெரியும் என்று சொல்லி சில புகைப்படங்களை காட்டினார். அது கங்கா துஷ்யந்தின் திருமண புகைப்படங்கள். ஒவ்வொரு சடங்கையும் ஒவ்வொரு புகைப்படமும் தாங்கியிருந்தது.

அங்கிருந்த அனைவருக்குமே ஆச்சர்யம்.. இவ்வளவு முக்கியமான ஆதாரம் இருந்தும் ஏன் இதை இத்தனை நாளாக காண்பிக்கவில்லை. ஆதாரம் இல்லையென்று தானே கங்கா அமைதியாக ஒதுங்கியிருந்தாள். இப்படி ஒரு ஆதாரம் இருந்தால் இதை ஏன் முன்பே காட்டி கங்காவின் வாழ்க்கையை சரிப்படுத்தவில்லை என்ற கேள்வி அங்கு அனைவருக்குமே தோன்றியது. வாணியும் அதற்கு விளக்கம் கொடுத்தார்.

அண்ணாமலை எந்த வித சாட்சியும் இல்லாமல் கங்கா துஷ்யந்தின் திருமணத்தை முடிக்க நினைத்தவர், யாரும் கோவிலுக்கு வராத நேரத்தை தேர்ந்தெடுத்து திருமணத்தை நடத்த நினைத்தார். ஆனால் அந்த நேரம் பக்கத்து எஸ்டேட்டுக்கு இரண்டு பேர் வந்திருந்தனர். பார்க்க வெளியூர் ஆட்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள அவர்களிடம் வாணியை அனுப்பி வைத்தார்.

வாணி சென்று அவர்களிடம் கேட்டபோது இருவரும் அந்த எஸ்டேட் உரிமையாளரின் உறவுக்காரர்கள். சும்மா எஸ்ட்டேட்டை பார்வையிட வந்ததாக கூறினர். இருவரில் ஒருவன் கழுத்தில் புகைப்பட கேமரா மாட்டியிருந்தான். அதைப்பார்த்த நொடி வாணிக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த நேரம் அண்ணாமலையின் திட்டம் எதுவும் அவருக்கு தெரியவில்லையென்றாலும், கங்காவிற்கு கண்டிப்பாக அநியாயம் நடக்கும் என்பதை அறிந்து தான் இருந்தார்.

“ஐயா இந்த கேமரால தூரமா இருக்கறதை எடுக்க முடியுமாங்க?” என்றுக் கேட்டார். அவர்களும் zoom செய்து எடுக்கலாம் என்று சொன்னதும் பிரச்சனையை சுருக்கமாக சொன்ன வாணி திருமண நிகழ்வை போட்டோ எடுக்க வேண்டும் என்றார். அவர்களும் வாணிக்கு உதவுவதாக சொன்னவர்கள், யாருக்கும் தெரியாதப்படி இந்த திருமணத்தை புகைப்படம் எடுக்கிறோம் உங்கள் முகவரி கொடுங்க எடுத்த புகைப்படத்தை அனுப்பி வைக்க என்று கேட்டனர்.

அந்த நேரம் எஸ்டேட் முகவரியை கொடுப்பது நல்லதல்ல என்று தன் தங்கை வீட்டு முகவரியை அவர்களிடம் கூறினார். பின் அண்ணாமலையிடமும் அவர்களால் பிரச்சனை இருக்காது என்று சமாளித்தார். எதற்கும் மேனேஜரை ஒருமுறை அண்ணாமலை அவர்களிடம் பேச அனுப்பி வைத்தார். அவர்களும் சமாளிப்பாக பேசவே, அவர்களை பொருட்டாய் நினைக்காமல் அண்ணாமலை திருமண சடங்குகளை ஆரம்பிக்க சொன்னார்.

அதை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்தவர்களோ வாணி கொடுத்த முகவரிக்கு நகலோடு சேர்த்து அனுப்பி வைத்தனர். அண்ணாமலை உண்மை தெரிந்தால் கொலை கூட செய்வார் என்ற பயத்தில் வாணி கொஞ்சம் காலம் அமைதியாக இருந்தார். ஆனால் தங்கை வீடு ஒரு சமயம் புயலால் பாதிக்கப்பட்டு அந்த புகைப்படம் காணாமல் போனது. வாணியும் செய்வதறியாது தவித்தார். இருந்தும் துஷ்யந்த் மீதும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இதில் துஷ்யந்த் நர்மதா திருமண ஏற்பாடு நடந்த போது தான் வாணியின் தங்கை வீட்டை சுத்தம் செய்யும் போது சில புகைப்படங்கள் கிடைத்ததாக கூறி, அதை எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னாள். திருமணத்திற்கு முன் இரவு அதை வாங்க தான் வாணி புறபட்டு சென்றார். ஆனால் அங்கு சென்றும் பலனில்லை. புகைப்படங்கள் ஒரு மாதிரி கிழிந்து சரியாக முகம் தெரியாமல் இருந்தது. வாணி ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார். நடக்கவிருக்கும் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று தவித்த போது துஷ்யந்தே அதை நிறுத்தினான்.

இதில் சமீபத்தில் தான் புகைப்படங்களின் நகல் கிடைத்துவிட்டது என்று தங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.. அதே நேரம் கங்காவிடமும் மாற்றம் வந்ததால், கங்கா சொன்னது போல துஷ்யந்த் குடும்பம் நம்ப வேண்டுமென்றால் ஆதாரம் வேண்டுமென்று நினைத்து, இந்த முறை கண்டிப்பாக தங்கை சொன்னது அந்த புகைப்படங்களின் நகலாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஊருக்குச் சென்றார். தான் நினைத்தப்படி அதே புகைப்படங்கள் தான், வாணியின் தங்கை நகலை பிரிண்ட் போட்டு புகைப்படத்தை தயாராக வைத்திருந்தார். இனி கங்கா வாழ்க்கை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு வந்தால் கங்காவோ இங்கு இல்லை.

“தம்பி இதோ ஆதாரம் தான் இருக்கே.. இப்பவயாவது கங்கா உங்க மனைவின்னு நம்ம்பிறீங்களா? அவளை எப்படியாச்சும் கண்டுபிடிங்க தம்பி” என்று கெஞ்சினார்.

“என்ன வாணிக்கா.. இந்த ஆதாரம் எல்லாம் இருந்தா தான் நான் நீங்க சொல்றதை நம்புவேணா, இல்லன்னாலும் நீங்க சொல்றதை நான் ஏத்துப்பேன்.. கங்கா என்னோட மனைவி.. அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்று வாணியிடம் தெளிவாக கூறினான். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.  கோமதியும் அதையே தான் வாணியிடம் கூறினார்.

“கங்கா கிடைச்சுடுவால்ல தம்பி..’

“ கண்டிப்பா வாணிக்கா..” என்றவன், கங்கா எங்கு போனாள் என்பது தெரியுமா?” என்று செல்வாவிடம் கேட்டான்.  மனதில் குற்ற உணர்வோடு செல்வா தெரியாது என்று தலை ஆட்டினான்.

“கவலைப்படாதீங்க கங்கா கண்டிப்பா கிடைச்சிடுவா என்று அனைவரிடமும் கூறிவிட்டு துஷ்யந்த் வீட்டிலிருந்து கிளம்பினான்.  கங்கா கிடைக்க வேண்டுமென்று இறைவனிடம் முறையிட்டான். காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியவன், மீண்டும் இளங்கோவிற்கு தொடர்பு கொண்டான். ஆனால் இளங்கோவோ அழைப்பை ஏற்கவில்லை. ஒருவேளை அலைந்து தேடிக் கொண்டிருக்கிறான் போல என்று நினைத்தவன், இரண்டு நாட்கள் முன்னே காணாமல் போனவளை எங்கே எப்படி தேடுவது என்று புரியாமல் காரில் சுற்றி திரிந்தவன், திரும்பவும் இளங்கோவிற்கு அழைப்பு விடுத்தான். அப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

கங்கா காணாமல் போயிருக்கும் சமயத்தில் இளங்கோ கவனக்குறைவாக இருக்க மாட்டானே.. ஒருவேளை கங்கா கிடைத்துவிட்டாளா? என்று மகிழ்ந்தவன் திரும்ப அவனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தான். இந்த முறை அழைப்பை ஏற்ற இளங்கோ வீட்டில் இருப்பதாக கூறினான். இளங்கோ பேசும் பேச்சில் எந்த பதட்டமும் இல்லாததால் கண்டிப்பாக இளங்கோ கங்காவை கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே இளங்கோ வீட்டிற்கு காரை செலுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.