(Reading time: 35 - 70 minutes)

ங்காவோ விஷயத்தை கேள்விப்பட்டு நிலை தடுமாறி கீழே சாய்ந்தாள். அவள் நினைத்திருந்தால் இன்று பேசியது போல் எப்போதோ பேசி துஷ்யந்தை அப்போதே தன் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைத்திருக்கலாம்.. ஆனால் எந்த காலத்திலும் அவன் பழையப்படி மாறிடக் கூடாது என்று தானே அமைதியாக இருந்தாள். இன்று கூட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தானே அப்படி பேசினாள். வேண்டுமென்றே அவனை காயப்படுத்த நினைக்கவே இல்லையே.. ஆனால் இன்று இவளின் கோபம் அவன் உயிரை பறிக்கும் அளவிற்கு போய்விட்டதே, கண்டிப்பாக இவள் பேசியதற்கும் கோபப்பட்டதுக்கும் தான் மனம் தளர்ந்து சோர்ந்து காரில் பயணித்திருப்பான். அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்கும்.. அவனது நிலைமைக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்தவள் கண்ணீரில் கரைந்தாள்.

இந்த நேரத்தில் துஷ்யந்தை மருத்துவமனையில் சென்று கூட பார்க்க முடியாது. இவ்வளவு பேசிவிட்டு சென்ற அவன் குடும்பத்தினர் இவளை பார்க்க கூட விடமாட்டார்கள். என்ன ஏதென்று தெரிந்து வர இளங்கோவும் ஊரில் இல்லை. வாணியையே இப்போது அங்கே அனுமதிப்பார்களா? என்பது சந்தேகம் தான்.. துஷ்யந்தின் நலனை பற்றி அறிந்துக் கொள்ள முடியாமல் வேதனையில் தவித்தவள், உடனே அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றாள். இறைவனிடம் துஷ்யந்த் சரியாக வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்தாள். அங்கேயே அழுதப்படி அமர்ந்திருந்தாள். வாணியும் செய்வதறியாது தவித்தார்.

கோயிலுக்கு வந்து போனவர்கள் எல்லாம் கங்காவை  பாவமாக பார்த்துவிட்டுச் சென்றனர். சில பேர் என்னவென்றும் விசாரித்தனர். “புருஷனுக்கு ஆக்ஸிடெண்ட் அதான் இப்படி இருக்கா..” என்று வாணி தான் மேலோட்டமாக கூறினார். அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு மந்திரிச்சு விபூதி கொடுப்பது, அருள் வாக்கு சொல்வது என்று ஒரு பெண்மணி ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். வாணியை அருகே அழைத்து விவரத்தைக் கேட்டார்.

“என்னன்னு சொல்றதும்மா.. அவ புருஷனுக்கு ஆக்ஸிடெண்ட், பிழைக்கறதே கஷ்டம்னு சொல்லியிருக்காங்க.. கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஒன்னா வாழ்ந்தாங்க.. அதுக்குப்பிறகு பிரிஞ்சு வாழற நிலைமை.. அதிலேயும் கொடுமை என்னன்னா இவர் தான் என்னோட புருசஷன்னு தன்னோட புருஷனை அடையாளம் காட்ட முடியாத நிலைமை. இப்போ ஹாஸ்பிட்டலுக்கு கூட போக முடியாது.. போனா இவ புருஷனை பார்க்க கூட விடமாட்டாங்க.. அப்படி ஒரு நிலைமையில் தான் என் பொண்ணு இருக்கா..” என்று அந்த பெண்மணியிடம் தங்கள் துயரத்தை முறையிட்டு அழுதார்.

“உன் பொண்ணை இப்படி வந்து உக்காரச் சொல்லு.. அப்படியே அம்மன் சன்னிதானத்துல இருந்து கொஞ்சம் குங்குமம் எடுத்துட்டு வா..” என்று கட்டளைகள் பிறப்பித்தார் அந்த பெண்மணி.

வாணியும் அவர் சொன்னதை செய்தார். கங்காவை கூட்டிக் கொண்டு வந்து அவர் முன் அமர வைத்தவர். குங்குமத்தை அந்த பெண்மணியிடம் கொடுத்தார். அந்த பெண்மணியோ சிறிது நேரத்திற்கு கையில் குங்குமத்தை மடித்து நெற்றியில் கைகளை வைத்தப்படி கண்களை மூடி வேண்டிக் கொண்டவர், கங்காவின் நெற்றி வகிட்டிலும், தாலியிலும் குங்குமத்தை வைத்தார்.

“புருஷனுக்கு சீக்கிரம் சரியாகணும்னு மனசார அம்மனுக்கு வருஷம் தவறாம கேதார கௌரி விரதம் இருக்கிறதா வேண்டிக்கம்மா.. இந்த விரதம் கணவனோட ஆயுளுக்காக மட்டுமில்ல.. பிரிஞ்சு இருக்கவங்க சீக்கிரம் சேர்ந்து வாழறதுக்கும் தான்.. சிவனை விட்டு பிரிஞ்சு போன பார்வதி இந்த விரதத்தை தான் இருந்தாங்க.. போம்மா அம்மன் முன்ன நின்னு மனசார வேண்டிக்கிட்டு இந்த குங்குமத்தை கொண்டு போய் உன் புருஷன் நெத்தியில வச்சிவிடு..”

“அம்மா.. இவ புருஷனை பார்க்க தான் இவளை விடமாட்டாங்களே? அப்புறம் எப்படி?” என்று கேட்ட வாணியை ஒரு பார்வை பார்த்தவர்,

“போம்மா போய் இந்த குங்குமத்தை உன்னோட புருஷனுக்கு வச்சி விடு..” என்று மீண்டும் கங்காவிடம் கூறினார்.

கங்காவிற்கு இது போன்ற விஷயங்களில் எல்லாம் நம்பிக்கையில்லை என்பதை உணர்ந்த வாணி உடனே அவளை எழுப்பி அம்மன் சன்னிதானத்தின் முன் நிறுத்தி, “அந்த அம்மனே வந்து சொல்ற மாதிரியே இருக்கு கங்கா.. சாமின்னு நினைக்காட்டியும் வயசுல பெரியவங்க சொல்றாங்கன்னு நம்பு கங்கா.. விரதம் இருக்கிறதா வேண்டிக்க.. ஹாஸ்பிட்டலுக்கு போலாம் வா..” என்று சொன்னார். கங்காவும் வாணி மற்றும் அந்த பெண்மணி சொன்னது போல் மனதார வேண்டியவள், உடனே மருத்துவமனைக்குச் சென்றாள்.

கடவுள் முன் கூட சென்று முறையிட முடியாமல் மனதிற்குள்ளேயே வேண்டிக் கொண்டு தங்கள் மகன் பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஐ.சி.யூ அறை வாசலில் உட்கார்ந்திருந்தனர் கோமதியும் விஜியும்.. அந்த நேரம் கங்காவும் வாணியும் அங்கு வர, “எங்க வந்தீங்க?” என்ற விஜியின் சத்தத்தில் இருவருமே அப்படியே நின்றனர்.

“எங்க பிள்ளையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது போதாதா? இன்னும் என்ன வேணும்னு வந்தீங்க.. இருக்கானா? பிழைச்சானா? அவன் போயிட்டான்னா நமக்கு ஏதாவது தேறுமான்னு பார்க்க வந்தீங்களா?” என்று கேட்டபோது,

“விஜி..” என்று சொல்லி அதட்டியது கோமதி தான்.. விஜியும் அதற்கு மேல் பேசாமல் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.

“அம்மா.. தம்பியை ஒரே ஒரு முறை பார்க்க விடுங்கம்மா.. என்னை கூட அனுப்ப வேண்டாம்.. இவளை மட்டுமாவது அனுப்புங்கம்மா..” என்று கோமதியிடம் வாணி கெஞ்சினார்.

வெளியூரில் இருந்த மகன் இப்போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கிறான் என்றால் எதனால் என்பதை கோமதியாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. “பேஷண்ட்க்கு உயிர் வாழவே ஆசையில்லை.. இதுக்கு மேல எங்களால ஒன்னும் செய்ய முடியாது” என்று மருத்துவர்கள் கூறியது அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“சரி போய் பாருங்க..” என்று கூறினார்.

“அண்ணி..” என்று விஜி அதிர்ந்த போதும்,

“நம்ம ராஜா நமக்கு வேணும் விஜி.. இந்த நேரம் அவன் நல்லப்படியா பிழைச்சா போதும் அமைதியா இரு..” என்று விஜியை  அடக்கி அமைதியாக செய்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.