(Reading time: 35 - 70 minutes)

துஷ்யந்த் சென்ற பின்பு கங்கா வாணியிடம் கோபப்பட்டாள். “அவங்க வீட்ல வந்து இவ்வளவு பேசிட்டு போன பின்பும் நீங்க எதுக்கு அவருக்கு போன் பண்ணீங்க.. அவருக்கும் எனக்கும் என்ன உறவுங்கிற உண்மை நம்ம ரெண்டுப்பேருக்கு தெரிஞ்சாலும் அதை வெளிய சொல்ல முடியாதப்போ, அவர் இங்க வர்றது சரியில்லைன்னு உங்களுக்கு புரியலையா வாணிம்மா..”

“ஆனா இதுவரைக்கும் இந்த உண்மையை சொல்ல நாம பயந்தது துஷ்யந்த் மாமாக்காக தானே, இப்போ அவர் இல்லாத பட்சத்துல இனி உண்மை தெரிய தானே வேண்டும்..”

“இத்தனை நாள் அவருக்காக தான் நான் பயந்துக்கிட்டு இருந்தேனா? அவர் இல்லன்னா எல்லாமே சரியாகிடுமா?  இன்னைக்கு அவரோட மனைவி என்னல்லாம் பேசினாங்கன்னு கேட்டிங்கல்ல.. அவர் என்னவெல்லாம் சொல்லியிருந்தா அவங்க இப்படி பேசியிருப்பாங்க.. சாகறப்போ கூட மனுஷ தன்மை இல்லாததை என்னன்னு சொல்ல.. இப்போ போய் நான் துஷ்யந்தோட மனைவின்னு சொன்னா அதை அவங்கல்லாம் ஏத்துப்பாங்களா? தன்னுடைய கணவன், தன்னுடைய தம்பி சொல்றதை நிஜம்னு நம்புவாங்களா? இல்லை நான் சொல்றதை ஏத்துப்பாங்களா? அப்படியே நான் சொல்றதை ஏத்துக்கணும்னா கூட ஆதாரம் கேப்பாங்க.. நம்மக்கிட்ட இருக்கா..

முதலில் நான் பொண்டாட்டின்னு என்னோட வாயால சொல்லமாட்டேன்.. உரிமை எடுத்துக்க மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டு இப்போ எப்படி போய் அவங்கக்கிட்ட நான் உண்மையை சொல்ல முடியும்?”

“அவங்கக்கிட்ட நீ ஏன் சொல்லணும்.. துஷ்யந்த் தம்பிக்கிட்ட சொல்லலாம்.. அதுவும் நீ கூட உன்னோட சத்தியத்தை மீறி எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றேன், நடந்தது என்னன்னு எல்லாம் சொல்றேன்..

வாணி சொன்னப்படி செய்யலாம் தான்.. ஆனால் அதை மனதார கங்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நடந்தது என்ன என்று விளக்கி தான் அவனோடு சேர வேண்டுமா? என்ற கேள்வி எப்போதும் அவளை உறுத்திக் கொண்டு தான் இருந்தது. முதலில் மாமா சொன்னதை நம்பினான். பிறகு இவள் சொன்ன கதையை நம்பினான். பிறகு இப்போது சொல்வதையும் நம்ப தான் செய்வான். அடுத்து யாராவது வந்து வேறு ஏதும் சொன்னால் அதையும் அவன் நம்பமாட்டான் என்பது என்ன நிச்சயம்? நடந்த நிகழ்வு சுத்தமாக அவனுக்கு நினைவில்லாத பட்சத்தில் எந்த சாட்சிகளும் இல்லாத போது இந்த உறவு எத்தனை காலம் நீடிக்கும்? இந்த கேக்விகளுக்கெல்லாம் விடை தெரியாத போது அவளால் துஷ்யந்தோடு இணையவே முடியாது. வாணியிடம் பிடிவாதமாக மறுத்தாள்.

வீட்டை காலி செய்ய மூன்று நாள் தான் அவகாசம் என்ன செய்யப் போகிறோம் என்று வாணி கேட்ட போது.. “இத்தனை நாள் என்றால் பரவாயில்லை.. ஆனால் இப்போது தான் நாம வாங்கிய வீடு இருக்கே.. வீட்ல வேலை  நடந்தா என்ன? பரவாயில்ல நாம அங்க போயே இருப்போம்” என்றவள், உடனே அதற்கான வேலைகளில் ஆயத்தமானவள், நேரம் காலம் கூட பார்க்காமல் அன்று மாலையே தன் சொந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறினாள்.

இங்கோ காரில் அடிபட்டுக் கிடந்த துஷ்யந்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அதன்பின் தான் அவனது வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டது. கோமதியும் விஜியும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவர்கள் துஷ்யந்திற்கு எப்படி இருக்கு என்று சொல்லாமலேயே மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர். துஷ்யந்திற்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் யாருக்குமே தகவல் சொல்லாமல் மருத்துவமனையிலேயே இருந்தனர்.

நெடுநேரமாய் துஷ்யந்திற்கு சிகிச்சை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. வெளியில் வந்த மருத்துவரிடம் கோமதியும் விஜியும் சென்று அவனுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.

“இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. பேஷண்ட் ரொம்ப சீரியஸா இருக்கார்.. எங்களால முடிஞ்ச ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு தான் இருக்கோம்.. ஆனா பேஷண்டும் கொஞ்சம் ஒத்துழைக்கணுமே.. பேஷண்ட்க்கு உயிர் வாழற ஆசையே இல்லை போல.. இப்படி இருந்தா எவ்வளவு நாங்க முயற்சி செஞ்சாலும் அவரை காப்பாத்த முடியாது..” என்ற பதிலை சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்படியே இடிந்து போய் அமர்ந்துவிட்டனர்.

பால் காய்ச்சி குடி போனதும் இரவு சமைப்பதற்கு தேவையான காய்கறி வாங்க போன போது, துஷ்யந்த் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மூலமாக, துஷ்யந்திற்கு விபத்து ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை வாணி அறிந்தார்.

துஷ்யந்த் வீட்டில் வேலை செய்யும் பெண் வாணியின் ஊரைச் சேர்ந்தவள், பிழைப்பு தேடி அவள் குடும்பம் சென்னைக்கு வந்த போது, அவளுக்கும் ஒரு வேலை தேவை என்பதால் வாணியிடம் தான் உதவிக் கேட்டிருந்தாள். வாணி தான் துஷ்யந்திடம் சொல்லி அவளுக்கு வேலை வாங்கி கொடுத்தார். வாணியின் இருப்பிடமெல்லாம் அவள் அறிந்து வைத்திருக்கவில்லை. தொலைபேசியில் தான் எப்போதாவது பேசுவாள். இப்போது கங்கா குடிபோயிருக்கும் ஏரியாவிற்கு பக்கத்தில் தான் அந்தப் பெண்ணின் வீடும் இருப்பதால், கடை வீதியில் சந்தித்துக் கொள்ளும்படி ஆனது.

“நான் வீட்டுக்கு கிளம்பும் போது தான்க்கா போன் வந்துச்சு.. அரக்கபரக்க கிளம்பிப் போனாங்க.. நானும் வீட்டுக்கு வந்துட்டேன்.. இந்த நேரம் பார்த்து சின்ன ஐயாவும் ஊர்ல இல்ல.. அம்மாவோட தம்பியும் உயிரோட இல்ல.. தனியா ரெண்டு பொம்பளைங்களும் என்ன செய்றாங்களோ.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் போன் போட்டு ஐயாக்கு எப்படி இருக்குன்னு கேட்டேன்.. ரொம்ப சீரியஸா தான் இருக்காராம்.. எதுவும் இப்போ சொல்ல முடியாதுன்னு சொல்லியிருக்காங்களாம்.. உதவிக்கு வரணுமான்னு கேட்டேன் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. தேவைன்னா கூப்பிடுவாங்க” என்று அனைத்து விஷயத்தையும் கூறியிருந்தாள்.

ஆனால் துஷ்யந்த் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான் என்ற செய்தியே வாணியின் தலையில் இடியை இறக்கியது. பொருட்கள் வாங்க கொண்டு வந்த பையை கூட தவறவிட்டவர், கங்காவிடம் விஷயத்தை கூற அவசரமாக ஓடினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.