(Reading time: 35 - 70 minutes)

செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டிருக்க, மருத்துவ உபகரணங்கள் துஷ்யந்த்  உடம்பில் இணைக்கப்பட்டிருந்தது. கண்களில் கண்ணீரோடு துஷ்யந்தின் அருகில் கங்கா அமர்ந்தாள். அவன் தான் விரல் நுனி கூட உன்மீது படாது என்று சத்தியம் செய்தான். ஆனால் அவள் செய்யவில்லையே, அவனது கைகளை தன் கைகளின் மேல் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“என் மேல ஏன் இவ்வளவு அன்பும் பாசமும் வச்சிருக்கீங்க துஷ்யந்த்.. இந்த அன்புக்கு தகுதியானவளா நான்.. எப்பவும் எனக்காக யோசிக்கிறீங்க.. எவ்வளவு கோபப்பட்டாலும் வெறுத்து பேசினாலும் என்னை தேடியே வருவீங்க.. இப்போ மட்டும் என்னாச்சு துஷ்யந்த்.. ஏன் என்னை விட்டு போக நினைக்கிறீங்க.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான் இல்ல.. மனசளவுல நீங்க நினைச்சு பார்க்காத விஷயத்துல உங்க மேல பழி போட்டு உங்களை கஷ்டப்படுத்தி இருக்கேன்.. என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு உங்களை ரொம்பவுமே வேதனை படுத்தி இருக்கேன். அதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதீங்க துஷ்யந்த்..

நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் உங்க மனைவிங்கிற உண்மையை மறைச்சது தான் தப்பா.. இப்பவும் உண்மையை சொல்லி உங்கக் கூட வாழ முடியுமான்னு எனக்கு தெரியல.. ஆனா இனி உங்களை கஷ்டப்படுத்தி பார்க்க மாட்டேன்.. உங்களுக்கு ஒரு நல்ல தோழியா நான் உங்களுக்கு எப்பவும் துணையா இருப்பேன்.. நீங்க நல்லப்படியா திரும்ப வரணும்..  ப்ளீஸ்  வந்துடுங்க துஷ்யந்த்” என்று அவனிடம் புலம்பினாள். கோவிலில் அந்த பெண்மணி கொடுத்த குங்குமத்தை நெற்றியில் வைத்தாள்.

அந்த நேரம் அங்கே வந்த நர்ஸ் “என்னம்மா பேஷண்ட்ட தொடக் கூடாது.. அதுலயும் குங்குமம் வேற வைக்கிறீங்க எழுந்திருங்க..” என்று அதட்டினார். அதற்குள் மருத்துவரும் அங்கே வந்தார்.

“என்ன ஆச்சு?” என்று அவர் நர்ஸிடம் கேட்க, நர்ஸும் விஷயத்தை கூறினார். அதற்குள் துஷ்யந்திடம் அசைவு தெரிந்தது. அதை கவனித்த மருத்துவர் கங்காவையும் வாணியையும் வெளியில் அனுப்பிவிட்டு துஷ்யந்தை பரிசோதித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தவர், துஷ்யந்தின் உயிருக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. அவன் விரைவில் குணமாகிவிடுவான் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினார். கங்கா உள்ளே இருந்த போது தான் துஷ்யந்திடம் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட மருத்துவர், கங்காவைப் பார்த்து.. “நீங்க Mr. துஷ்யந்தோட வைஃபா?” என்றுக் கேட்டார். அங்கு மௌனம் தான் ஆட்சி செய்தது. மருத்துவரும் அதற்கு மேல் கிளரவில்லை.

அன்று இரவு கங்கா மருத்துவமனையிலேயே இருந்தாள். துஷ்யந்த் கண் விழித்த போதும் அவன் அருகில் தான் இருந்தாள். அதுமட்டுமல்லாமல் தினம் துஷ்யந்தை பார்க்க யாரும் வராத சமயத்தில் அவனை பார்க்கச் சென்றாள். அவனுடன் நேரத்தை செலவிட்டாள். தன் மகனை இப்படி ஒரு நிலையில் பார்த்த பின்பு கோமதியும் அதை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டார். விஜிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றாலும் கோமதிக்காக அமைதியாகிவிட்டார்.

துஷ்யந்த்  ஓரளவு தேறியதும் தான் செல்வாவிற்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே சொல்லியிருந்தால், அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பி வரும் முயற்சியில் இறங்கியிருப்பான். கொஞ்ச நாள் முன்பு தான் வந்து போனதால், அவனது படிப்பும் பாதிக்கப்படும்.. இங்கு வந்து கங்காவை பற்றி அவனுக்கு எதுவும் தெரிய வரக் கூடாது என்று கோமதி செல்வாவிற்கு முன்னமே எதுவும் தெரிவிக்கவில்லை. இளங்கோவும் விஷயத்தை கேள்விப்பட்டு சுற்றுலாவை பாதியிலேயே விட்டுவிட்டு வந்து துஷ்யந்தை பார்த்தான்.

அந்த சம்பவத்திற்கு பிறகு கங்கா மாறிப் போனாள். துஷ்யந்தோடு நன்றாக பேசினாள். அவன் வீட்டுக்கு வருவதற்கு கூட அனுமதித்தாள். ஊரார் பேசும் பேச்சுக்களை புறந்தள்ளினாள். என்னைப் பற்றி எனக்கு தெரியும்.. பிறகு எதற்கு மற்றவர் பேச்சுக்கு கவலைப்பட வேண்டும் என்று நிமிர்வாகவே நடமாடினாள். ஆனாலும் துஷ்யந்துடன் மனைவியாக வாழ அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை. அவளது மனதில் இருந்த உறுத்தல் அப்படியே தான் இருந்தது. வாணி எப்படி பேசியும் அவள் முடிவில் உறுதியாக இருந்தாள். கங்காவிடம் இவ்வளவு மாற்றம் வந்ததே துஷ்யந்திற்கு போதுமானதாக இருந்தது. விரைவில் அவள் மனம் மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு துளிர்விட்டது.

அடுத்த மூன்று வருடங்கள் கடந்த பின்பும் கூட அவளுக்காக காத்திருப்பது அவனுக்கு சுகமாக தான் இருந்தது. ஆனால் கோமதிக்கு அப்படி இல்லை. கங்காவை தானே முன்வந்து தன் மகனுக்கு மணம் முடித்து வைக்க அவருக்கு பரந்த மனது இல்லை. மகன் என்ன முடிவெடுக்கிறானோ எடுக்கட்டும் என்று அமைதியாக இருந்தார். ஆனால் நாட்கள் வருடங்களாக கடந்தும் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை. முன்பானால் கங்காவை பற்றி இவர்களுக்கு தெரியாது. அதனால் துஷ்யந்த் கங்காவுடனான உறவை மறைத்து வைத்திருந்தான். ஆனால் இப்போதும் ஏன் இப்படியே இருக்க வேண்டும்? அவர் காலம் முடிந்த பின் மகன் நிலை என்னாகும்? மனைவி, குடும்பம், குழந்தை என்று இல்லாமல் தனிமரமாக நிற்க மாட்டானா? கங்காவுடனான இப்படிப்பட்ட உறவு எத்தனை நாள் நீடிக்கும்? இப்படி தன் மகனை குறித்து கவலைக் கொண்ட கோமதி திரும்பவும் கங்காவை பார்த்து தன் மனக்கவலையை கூறினார்.

இதுநாள் வரையிலும் துஷ்யந்த் தன் வாழ்க்கையில் இல்லையென்றாலும் தன்னால் தனியாக வாழ முடியும்.. அவனுக்கு வேறு திருமணம் ஆனாலும் பரவாயில்லை என்று கங்கா நினைத்திருந்தாலும், அவனிடம் திருமணம் செய்துக் கொள்ளும்படி என்றுமே அவள் சொன்னதில்லை. இதுவும் ஒரு வகையில் சுயநலம் இல்லையா? அவனிடம் உண்மையை கூற போவதும் இல்லை. அவனுக்கு உண்மை தெரியாமல் அவனோடு வாழ போவதும் இல்லை. அப்படியிருக்க அவன் தனக்காக காத்திருக்கிறான் என்று தெரிந்தும் அமைதியாக இருப்பது துஷ்யந்திற்கு செய்யும் அநியாயம் தானே.. காலம் முழுக்க தன்னை மட்டுமே அவன் நினைக்க வேண்டுமென்றா எதிர்பார்க்கிறாய்? என்று மனசாட்சி கேள்விக் கேட்டது.

ஒரு தாயின் நியாயமான ஆசையை நிறைவேற்ற துஷ்யந்திடம் திருமணம் பற்றி பேசினாள். மீண்டும் அவள் மேல் வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடி ஆனதாலோ என்னவோ அப்போது வேறொரு பெண்ணை மணக்க ஒத்துக் கொண்டான். அதுவும் இதுநாள் வரை அவனை விலகச் சொன்னவள், இப்போது தான் விலகிப் போய்விடுவேன் என்று கூறும்போது, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று தான் அப்போது திருமணத்திற்கு சம்மதித்தான். அதன்பின் நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.