(Reading time: 35 - 70 minutes)

41. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ங்காவும் துஷ்யந்தும் தனித்தனியாக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற 3 வருடங்கள் ஆனது. ஆனால் கங்கா மனம் மாறி தன்னுடன் இணைவாள் என்ற துஷ்யந்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைவேறாமலேயே இருந்தது. கங்காவின் மனம் கொஞ்சம் கூட மாறவில்லையென்றால் இந்த 3 வருடங்களில் அவள் பட்ட அவமானங்களும் வலிகளும் அதிகம்.

3 வருடத்தில் அவள் கிட்டத்தட்ட 6,7 வீடுகள் மாறியிருந்தாள். வீடு என்று கேட்டுப் போனாலே முதலில் அவளிடம் கேட்கும் கேள்வி உன் கணவன் என்ன செய்கிறான்? எங்கே இருக்கிறான் என்பது தான், இத்தனை கேள்விகள், அவள் குறித்த சந்தேகங்கள் இதையெல்லாம் தாண்டி அவளுக்கு வீடு கிடைத்தால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசும் பேச்சு அத்தனையும் அவளை காயப்படுத்தும்படியாகவே இருக்கும். யாராவது ஒரு ஆடவனோடு  ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசினால் போதும் அது கூட மற்றவர்கள் பார்வைக்கு தவறாக தான் படும்.  அவளை தவறான நோக்கோடு பார்க்கும் ஆண்களை கூட அவர்கள் வீட்டு பெண்கள் குற்றம் சாட்டாமல் கங்கா மீது மட்டுமே பழி போடுவார்கள்.

குடியிருந்த வீடுகளில் தான் இப்படி என்றால் அலுவலகத்திலும் இளங்கோவோடு சேர்த்து தவறாகவே பேசுவார்கள். அதற்காக அவள் இளங்கோவின் நட்பை இழக்க விரும்பவில்லை. ஒரு நல்ல நட்பை எப்படி கொச்சை படுத்துகிறார்கள் என்ற கவலையோடு அமைதியாக சென்றுவிடுவாள். ஆனால் துஷ்யந்த் விஷயத்தில் மட்டும் அது முடியவில்லை. தான் இப்படி ஒரு நிலையில் இருக்க தெரிந்தோ தெரியாமலோ அவன் தானே காரணம். ஒரு கனவு போல கூடவா அவளுடன் நடந்த திருமணம் அவனுக்கு ஞாபகமில்லை என்ற உறுத்தல் மனதில் எப்போதுமே இருந்தது.

அதனாலேயே ஒவ்வொரு சமயம் ஏதாவது பிரச்சனை, தேவை என்று துஷ்யந்த் உதவிக்கு வந்தால் அவனிடம் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிப்பாள். ஏற்கனவே வாணிக்கும் அவளுக்குமான உறவு என்ன? என்ற கேள்விகள் வரும்.. இதில் துஷ்யந்தின் வருகையில் அவன் யாராக இருப்பான் என்று சந்தேக பார்வையோடு  பேசும் பேச்சுக்களுக்கு என்னவென்று பதில் சொல்வாள்.

இளங்கோவை நண்பன், உடன் பணிபுரிபவன் என்று சொல்லும் அளவுக்கு கூட துஷ்யந்தை என்னவாக மற்றவர்களிடம் சொல்வது என்று  அவளுக்கு புரியவில்லை. இவன் என் கணவன் என்று சொல்ல முடியாத போது அவனுடன் பழகுவது கூட ஒருவிதத்தில் அவளுக்கு அறுவறுப்பாக தான் இருந்ததது.

ஆனால் இதெல்லாம் துஷ்யந்த் புரிந்துக் கொண்டால் தானே.. கங்காவை விட்டு மொத்தமாக விலக முடியாத நிலையில் தான் அவன் இருந்தான்.

ஒவ்வொரு வீடு மாறுவதற்கும் அவளை பற்றிய அவதூறுகள் மட்டுமே எப்போதும் காரணமாக இருக்கும். அதற்கு தீர்வாக தான் இளங்கோ சொந்த வீடு வாங்கும் யோசனையை கூறியிருந்தான். இதற்கும் அந்த நேரம் பதிப்பகத்தின் வேலையை விட்டு தையல் பயிற்சி வகுப்பு வைத்து நடத்த ஆரம்பித்திருந்தாள். அந்த வேலையை விடும்போது கூட இளங்கோவுடனான நட்பும் படிப்படியாக குறைந்து விடுமோ என்று நினைத்து வருத்தப்பட்டாள். ஆனால் அவனோ அதற்கு பிறகும் அவளுடன் நட்பை தொடர்ந்தது மட்டுமல்லாமல் இப்போது வீடு வாங்க கூட யோசனை கூறியிருந்தான்.

அதன்படி ஒரு பழைய வீடு பார்த்து பேசியும் முடித்தாகிவிட்டது. இதுவரை ஏதாவது அவதூறு பேச்சுக்களோடு வீட்டை விட்டு வெளியேறியவள், இந்த முறையாவது எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியேற வேண்டும்.. மனநிறைவுடன் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

அந்த நேரம் தான் அண்ணாமலையை உடல்நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அப்போது செல்வா மேற்படிப்புக்காக சென்றிருந்தான். துஷ்யந்தும்  வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தான். கோமதியும் விஜியும் மட்டுமே வீட்டில் இருந்த சமயத்தில் தான் மது பழக்கத்தால் உடலில் சில உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மோசமாகி மருத்துவமனையில் சேரும் சூழ்நிலை வந்தது. பிழைப்பது கஷ்டம் என்று கூறிவிட்டனர். துஷ்யந்தால் உடனே மருத்துவமனைக்கு வர முடியாத சூழல்.. அங்கிருந்தப்படியே அண்ணாமலைக்கு சிறப்பான மருத்துவம் கொடுக்கும்படி மருத்துவர்களை இயக்கிக் கொண்டிருந்தான். ஆனால் எத்தனை சிகிச்சை அளித்தாலும் பயனில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அண்ணாமலைக்குமே தனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை அவர் உணர்ந்து தான் இருந்தார். அந்த நேரத்தில் கூட ஒரு பெண்ணுக்கு தீங்கு செய்திருக்கிறோம்.. அவள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை. அதற்குமாறாக தன் மரணத்திற்கு பின் கங்கா துஷ்யந்தோடு சுலபமாக சேர்ந்துவிடுவாள் என்று நினைத்து பயந்தார். அதுமட்டும் நடக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இறக்கும் தருவாயில் கூட அவரின் ஜாதி வெறி தீவிரம் குறையவில்லை.

ஆனால் அவர் ஒன்றை மட்டும் உணரவே இல்லை. கங்கா மனது வைத்திருந்தால் துஷ்யந்தோடு எப்படியும் சேர்ந்திருக்கலாம்.. முன்பு நடந்த திருமணத்தை கூட அப்படியே ஒதுக்கிவிட்டு இன்னொரு முறை அவனை மணம் புரிந்திருக்கலாம்.. அவனின் மனைவி என்று ஊரறிய நல்லப்படியாக வாழ்க்கை நடத்தியிருக்கலாம்.. ஆனால் அவள் மனசாட்சி அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. அது மட்டுமே காரணம்.. ஆனால் அண்ணாமலையோ அவருக்கு பயந்து மட்டுமே ஒதுங்கி இருக்கிறாள். தான் இறந்துவிட்டால் அந்த பயம் போய்விடும் என்று தப்புக்கணக்கு போட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.