(Reading time: 19 - 37 minutes)

கே. நீ கோபமா இருக்க. நான் உன் கிட்ட அப்புறம் பேசறேன். இப்ப எனக்கு ஜஸ்ட் நீ பத்திரமா வந்துட்டியானு தெரியனும். அதான் நீ வந்துட்ட. எனக்கு இப்போதைக்கு அது போதும். நான் வைக்கிறேன். பை.”

போனை வைத்து விட்டு இனியா சிலை போல் அமர்ந்திருந்தாள்.

பாலை எடுத்துக் கொண்டு வந்திருந்த லட்சுமி இனியாவை பார்த்து “என்னடி என்னாச்சி” என்று வினவினார்.

“ஒன்னும் இல்லம்மா. கொஞ்சம் தலை வலியா இருக்கு என்று சொல்லி சமாளித்தாள்.”

“சரி இந்தா இந்த பாலை குடிச்சிட்டு போய் தூங்கு என்று இனியாவிடம் பாலை கொடுத்துவிட்டு, சரி நீ போய் இருந்தியே அந்த வீட்டு பையன் தானே இப்ப பேசியது, நீ வந்துட்டியா வந்துட்டியானு மூணு முறை போன் பண்ணிட்டாங்க. எப்பவோ கிளம்பி இருப்ப போல. அப்புறம் ஏன் இவ்வளோ நேரம் என்று விசாரித்தார்.”

இனியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்ன சொல்றதுன்னு தெரியாம தான் கோவிலுக்கு போய்ட்டு லேட்டா வீட்டுக்கு வந்ததே. இளவரசன் அதையும் போன் பண்ணி கெடுத்துட்டான் போலவே என்று எண்ணிக் கொண்டாள்.

“இல்லம்மா ஸ்வேதாவை அவ வீட்டுல விட்டுட்டு அப்படியே பக்கத்துல ஒரு கோவில் இருந்துச்சி. அதுக்கு போய்ட்டு வந்தேன்” என்று சொன்னாள்.

“ஸ்வேதாவை ஏன்மா நீ போற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போற. அவளை ஒரு ஆட்டோல ஏத்தி விட்டுட்டு போக வேண்டியது தானே” என்றார் லட்சுமி.

“ஏன்மா இப்படி சொல்றீங்க.

“இல்லடா நீ உன்னோட ப்ரொபெஸன் சம்மந்தமா வெளிய போற வர. அங்க  இவள சம்மந்தம் இல்லாம கூட்டிட்டு போக கூடாது. அவங்க அப்பா அம்மாவே எதாச்சும் சொல்லுவாங்க. அதான்.”

“ம்ம். நான் என்ன தினமுமா கூட்டிட்டு போக போறேன். ஏதோ ஒரு சந்தர்ப்பம். அதனால தானே கூட்டிட்டு போனேன்.”

“சரி விடுடா. இனி இப்படி கூட்டிட்டு போகாத. அந்த வீட்டு அம்மா தான் நீ வீட்டுக்கு போய் சேர்ந்துட்டியானு கேட்க சொன்னாங்களாம். நான் நீ இன்னும் வரலன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். அவங்க திரும்ப திரும்ப போன் பண்ணி கேட்டாங்க. நானே இல்ல வந்துடுவா. ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டேன். அந்த தம்பி இல்லம்மா. எங்கம்மா வயசு பொண்ணு. ராத்திரில தனியா போய் இருக்கு. வீட்டுக்கு போய் சேர்ந்துடுச்சானு கேளு தம்பி. நமக்காக வந்த பொண்ணு பத்தரமா போய்டுச்சானு நாம தான் விசாரிக்கணும்னு சொன்னாங்களாம். பாரு இந்த காலத்துல எவ்வளோ நல்லவங்களா இருக்காங்க. நான் கூட முதல்ல உன்ன அங்க அனுப்பனுமானு யோசிச்சேன். இப்ப எனக்கு ரொம்ப தைரியமா இருக்கு.”

“ம்ம். சரிம்மா எனக்கு ரொம்ப தல வலிக்குது. நான் போய் தூங்கறேன்” என்று சொல்லி விட்டு பாலை எடுத்துக் கொண்டு தன்னறைக்கு சென்றாள் இனியா.

னியாவிற்கு மனதே சரி இல்லை. அம்மா சொன்ன மாதிரி நாம ஸ்வேதாவை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா பிரச்சனையே இருந்திருக்காது தான் என்றது ஒரு மனது. இல்லை கூட்டிட்டு போனதே என் தப்பா இருந்தாலும் அவன் எப்படி அப்படி நடந்துக்கலாம். எனக்காகவாவது அப்படி நடந்துட்டு இருக்க கூடாது என்று வாதாடியது இன்னொரு மனது. பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் என்ன பத்தரமா வந்துட்டியானு போன் பண்ண வேண்டியது என எந்த பக்கம் யோசித்தாலும் கடைசியில் இளவரசனை தான் குறை சொன்னாள்.

தன் போனிற்கு கூப்பிட்டு இருந்தாலாவது பரவாயில்லை. வீட்டு எண்ணிற்கு அழைத்து என்னை நல்லா மாட்டி வைக்கிறான் என்று எண்ணி விட்டு தன் மொபைலை எடுத்து பார்த்தாள்.

அதிலும் அவன் போன் செய்திருப்பது அப்போது தான் தெரிந்தது. சைலெண்டில் இருந்திருக்கிறது. 15 முறை அழைத்திருக்கிறான். நிஜமான அக்கரையில் தான் அழைத்திருப்பானோ. இல்லை அம்மா சொன்னார்களே அவன் அம்மா தான் என்னை பற்றி கேட்க சொன்னதாக என்று எண்ணிக் கொண்டே போனவளுக்கு திடீர் என்று தான் கோபத்தில் இளவரசனை அவன் இவன் என்று குறிப்பிடுவதை உணர்ந்தாள்.

என்ன இது. நானா இப்படி மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவது. எப்போதும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் தானா இப்படி என்று அதற்கும் இனியா வருத்தம் கொண்டாள்.

இனியா என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளுக்கு இளவரசன் மேல் கோபம் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் ஸ்வேதாவிடம் பேசினால் அவள் இளவரசனை பற்றி எதாவது குறை சொல்வாள் என்று தெரிந்திருந்ததாலேயே ஸ்வேதாவிடம் அவள் எதையும் கேட்காமல் வந்து விட்டாள். அவள் இளவரசனை பற்றி குறை கூறுவதை அவள் விரும்பவில்லை.

அவளுக்கே இளவரசன் போன் செய்தது ஒரு விதத்தில் ஆறுதல் தான் என்றாலும் அவன் தான் செய்ததற்கு விளக்கம் தராதது தான் இன்னும் கோபத்தை அதிகரிக்க செய்தது.

இவ்வாறு யோசித்துக் கொண்டே இனியா உறங்க நள்ளிரவு ஆகிற்று.

காலையில் எழுந்த இனியாவிற்கு அன்று ஏனோ தினமும் காலையில் இருக்கும் உற்சாகம் இல்லாமல் இருந்தது. ஜாக்கிங் போகவும் பிடிக்கவில்லை. சோர்ந்து இருக்கவும் பிடிக்காமல் கீழே போய் டிவியை போட்டு நியூஸ் பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் மனம் அதிலும் சென்றாள் தானே. டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த அபி ரிமோட்டை எடுத்து கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்தாள். இனியாவிடம் எந்த அசைவும் இல்லை. என்னடா சித்தி ஒன்றுமே சொல்லவில்லையே என நினைத்து விட்டு அவள் டிவி பார்க்க தொடங்கினாள்.

அங்கு வந்த அவள் தந்தை இனியாவை பார்த்து “குட் மார்னிங் இனியா. என்ன இன்று ஜாக்கிங் போகலையா” என வினவினார்.

இனியாவோ இந்த லோகத்தில் இருந்தால் தானே பதிலளிப்பதற்கு. அவளுக்கு தந்தை வந்ததும் தெரியவில்லை. அவர் பேசியதும் அவள் காதில் விழவில்லை.

பெண் ஏதும் பேசாததை பார்த்து வியந்த தந்தை பதறி போய் “இனியா என்னம்மா என்ன ஆயிற்று” என்றார்.

அவளுக்கு அதுவும் தெரியவில்லை.

கடைசியில் அபி தான் இனியாவை போட்டு உலுக்கி எடுத்தாள்.

அபியின் உலுக்கலில் விழித்த இனியா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“என்னம்மா. என்ன ஆயிற்று என்று பாசமாக தலை வருடிய தந்தையை ஒன்றும் புரியாமல் நோக்கினாள்.”

“என்னப்பா. என்ன கேட்கிறீர்கள். எனக்கு ஒன்னும் புரியலையே.”

“இல்லம்மா. நான் உன் கிட்ட பேசிட்டு இருந்தேன். ஆனா நீ ஏதும் பேசாம டிவியையே வெறிச்சு பாத்துட்டு இருக்க. அதான்”

“இல்லப்பா. ஏதோ யோசனையில் இருந்துட்டேன். சாரிப்பா.”

“பரவால்லம்மா. வேற ஒன்னும் இல்லல்ல என்று வினவினார் தந்தை.”

“ஒன்னும் இல்லப்பா. சும்மா ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க பேசினதே காதுல விழல”

“சரிம்மா. காபி சாப்பிட்டியா.”

“இல்லப்பா. இனிமே தான் சாப்பிடனும்.”

“சரி இரு. நான் அம்மா கிட்ட காபி எடுத்துட்டு வர சொல்றேன்” என்று கூறி விட்டு அவர் சென்றார்.

அன்று மருத்துவமனைக்கு செல்வதற்குள் இனியா இது போல் எத்தனையோ தவறுகளை செய்து ஒரு வழியாக கிளம்பினாள்.

 

கிளம்பும் போதும் டிபன் பாக்சை மறந்து விட்டு, வண்டியை கிளப்ப போகும் போது லட்சுமி எடுத்து கொண்டு போய் கொடுத்துவிட்டு “இன்று நீ கண்டிப்பா போகனுமா இனியா. நீ ஏனோ கலையில இருந்து சரி இல்லை. தலைவலி சரி ஆகிடுச்சா இல்லையா. இன்னைக்கு மட்டும் போக வேண்டாம் டா.” என்று கூறினார்.

“இல்லம்மா. நான் நல்லா தான் இருக்கேன். தலைவலி எல்லாம் எப்பவோ போய்டுச்சி. இன்னைக்கு அந்த அளவுக்கு வொர்க்கும் இல்ல. சோ நான் போயிட்டு வந்துடறேன். சாயந்திரம் சீக்கிரமே வந்துடறேன். ஓகே.” என்று சொல்லி விட்டு ஒரு வழியாக கிளம்பினாள்.

னியாவிற்கே இன்று போகாமல் வீட்டிலே இருந்து விடலாம் என்று தோணியது. ஆனால் வீட்டிலே இருந்தால் இப்படி எல்லாவற்றையும் சொதப்பி எல்லாரும் கேள்வி கேட்கற மாதிரி ஆகிவிடும் என்பதாலே மருத்துவமனைக்கே கிளம்பி விட்டாள். அதிலும் நாளை வேறு சண்டே. நாளையே எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை என்று நொந்துக்கொண்டே வண்டியை ஓட்டினாள்.

இன்று வேலை அவ்வளவாக இருக்காது என்று அம்மாவிடம் சொன்னதற்கு மாறாக மருத்துவமனையில் இனியாவிற்கு அப்பாய்ன்மன்ட் இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றார் போல் அவளால் மாறுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

இனியாவிற்கு மதிய உணவின் போது தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. திரும்பவும் ஒரு மணி நேரத்தில் திரும்பவும் அப்பாய்ன்மன்ட் உள்ளது. அவளுக்கு அப்போது தான் இன்னும் கார்த்திக்கை சந்திக்கவில்லை என்பது நினைவு வந்தது. சரி அதற்குள் கார்த்திக்கை போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று தோணவே கார்த்திக்கை பார்க்க சென்றாள்.

கார்த்திக்கை பார்த்து பேசிக் கொண்டு இருந்த சில நிமிடங்களிலேயே இளவரசன் அங்கு வந்து சேர்ந்தான். இனியாவிற்கு அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனை சந்தித்த நாளில் இருந்து அவன் கார்த்திக்கை பார்க்க வருவது சாதாரண நிகழ்ச்சி தான் என்றாலும் நேற்று அவ்வளவு நடந்த பிறகு இன்று வந்திருக்கிறான் என்றால் இவனை என்ன தான் சொல்வது. இவன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

அதிலும் இவன் காலையிலிருந்து வந்து விட்டு போய் இருக்க கூடாதா என்று என்னும் போது தான் இனியாவிற்கு இவன் தினமும் காலையில் அவன் வேலைக்கு கிளம்பும் போது தானே வருவான் என்பது நினைவு வந்தது. இன்று என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறான் என்று எண்ணியவாரே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார்த்திக் இடையில் புகுந்து “என்ன அக்கா அப்படி பார்கறீங்க” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.