(Reading time: 23 - 46 minutes)

ரண்டு நாட்களுக்கு பிறகு காலை பத்து மணி – குயின்ஸ்லேன்ட்.

இனியாவை அவள் வீட்டிற்கு சென்று இளவரசனால் பார்க்க இயலவில்லை.

இனியாவே வற்புறுத்தியும் அவன் வர மறுத்து விட்டான்.

லக்ஷ்மியும் இனியாவை வெளியே எங்கும் அனுப்பவில்லை. அவளை ஒரு நோயாளியை கவனிப்பது போல் கவனித்துக் கொண்டார்.

இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஜோதி தான், இளவரசனிடம் எங்காவது வெளியே சென்று வரலாம், நான் அம்மாவிடம் பெர்மிஷன் வாங்குகிறேன் என்று கூறினாள்.

அவள் ஆரம்பித்து வைத்த ஐடியா ஏதேதோ யோசனை செய்து கடைசியில் எல்லோரும் குயின்ஸ்லேன்ட்டில் வந்து ஒத்துக் கொண்டார்கள்.

அதன்படி எல்லோரும் அங்கு குயின்ஸ்லேன்ட்டில் இருந்தார்கள்.

இளவரசன், இனியா, பாலு, ஜோதி, பவித்ரா, சந்துரு மற்றும் ஸ்வேதா.

ஆம் ஸ்வேதாவும் வந்திருந்தாள். அதுவும் இளவரசனே அவளை அழைத்தும் இருந்தான்.

ஸ்வேதாவிற்கு முதல் நாள் இளவரசன் போனில் அழைத்து விஷயத்தை கூறியதில் இருந்தே சந்தோஷம் தாங்கவில்லை.

அதுவும் இன்று காலையில் அவர்களே வந்து அவளை பிக் அப் செய்துக் கொண்ட போது அந்த மகிழ்ச்சி உச்சிக்கு சென்று விட்டது.

சிரித்த முகத்துடனே வந்தாள். அவளை பார்த்த இனியாவிற்கும் மகழ்ச்சி.

அதை விட ஜோதியும் ஸ்வேதாவிடம் நன்றாக பேசிய படி வந்தாள்.

உள்ளே சென்ற உடனே ப்ரீ பால் டவர் என்று மிகவும் உயரத்திற்கு சென்று வேகமாக கீழே வரும் ரைடு.

எல்லோரையும் விட ஜோதி தான் உற்சாகமாக முன்னே சென்றாள்.

“பார்த்து பார்த்துக்கா. தரையை பார்த்து நட” என்றாள் இனியா.

“போடி. என் வீட்டுக்காரரே அதிசயமா எனைக்கோ ஒரு நாள் தான் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி வராரு. எனக்கு ஜாலியா இருக்காதா. போடி” என்று விட்டு முன்னே சென்றாள்.

வரிசையாக ஒவ்வொருவராக அதில் போய் அமர ஸ்வேதா சென்று அமர்ந்த சீட்டின் அடுத்த சீட்டில் அமர சென்ற சந்துரு, அந்த பெல்ட் எடுக்க முடியாமல் அதிலே அமிழ்ந்து கிடந்ததை கண்டு, அங்கு வேலை செய்பவரிடம் கூற, அவரோ அடுத்த சீட்டில் அமர சொன்னார். சந்துரு அதற்கு அடுத்த சீட்டில் அமர்ந்தான். பவித்ராவிற்கு மட்டும் இடமில்லாமல் இருக்க, சந்துருவின் அடுத்த சீட்டில் அமர சொன்னார்கள். ஆனால் அதுவோ கடைசி சீட். எனவே பவித்ராவிற்கு பயமாக இருந்தது. அவள் சிறிது தயங்க சந்துரு எழுந்து அந்த சீட்டில் அமர்ந்து பவித்ராவிற்கு இடம் தந்தான்.

இதைக் கண்ட ஸ்வேதாவிற்கு சிறிது கோபம் துளிர்த்தது.

பக்கத்தில் திரும்பி பார்த்தாள். எட்டு பேர் அமரும் அந்த வரிசையில் அவளின் வலப்புறம் முதலில் இனியாவும் இளவரசனும் அமர்ந்திருக்க, பிறகு ஜோதியும், பாலுவும் அமர்ந்திருந்தனர். அவளின் இடப்பக்கத்து சீட் காலியாக இருக்க, அதற்குப் பிறகு பவித்ராவும், சந்துருவும் அமர்ந்திருந்தனர்.

முதல் முதலாக அவளுக்கு பவித்ராவின் மேல் கோபம் வந்தது.

பவித்ராவை இன்று கண்ட போது கூட, நாம் எல்லோரும் பேர்-ஆக இருக்க இவள் மட்டும் தனித்து இருக்கிறாளே என்று தான் எண்ணினாள். ஆனால் தான் தான் அவ்வாறு தனித்து விடப்படுவோம் என்று அவள் அப்போது எண்ணவில்லை.

இந்த எண்ணங்கள் எல்லாம் அந்த ரைடு ஆரம்பிக்கும் வரைக்கும் தான். மேலே போகும் வரையில் கூட அவளுக்கு ஏதும் தெரியவில்லை.பாதி உயரத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து சர்ரென்று கீழே கொண்டு வந்தனர். பயத்தில் அவளுக்கு உடல் நடுங்கியது. பின்பு மறுபடியும் முழு உயரத்திற்கும் கொண்டு சென்று சில நொடிகள் அங்கேயே நிறுத்தினர், அங்கிருந்து நெடு தூரம் தெரிந்தது. அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. அங்கிருந்து திரும்ப சர்ரென்று கீழே வந்தது. இறங்கும் போது அவளால் சரியாக நிற்க கூட இயலவில்லை. ஜோதியும் பவித்ராவும் தான் அவளுக்கு உதவி செய்து கீழே அழைத்து சென்றனர்.

அவளுக்கு சிறு வயதில் இருந்தே இது போன்ற ரைடு எல்லாம் பயம் தான். ஆனால் இவர்கள் எல்லாம் ஒன்றாக செல்கிறார்களே, அதுவும் இளவரசனே அழைத்திருக்கிறானே என்று தான் வந்தாள். ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக இருந்தது.

பின்பு ஓரளவு சரியாகி, அதன் பின்பு இரண்டு ரைடுகளுக்கு அவள் செல்லவில்லை.

இருவர் சேர்ந்து செல்லும் அந்த ரைடுகளில் ஜோதி-பாலு, இனியா-இளவரசன், பவித்ரா-சந்துரு என்று எல்லோரும் பேர்-ஆக சென்றனர்.

பவித்ராவிற்கோ இதை எல்லாம் பார்த்து வெறுப்பாக இருந்தது.

முதல் ரைடில் தான் அப்படி என்றால், இந்த பவித்ரா தயங்கினாலும், எல்லோரும் சேர்ந்து அவர்களை ஒன்றாக செல்லும் படி கட்டாயப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

எனவே முடிவு செய்து இந்த முறை அவளும் அடுத்த ரைடுக்கு வருவதாக தெரிவித்தாள்.

ஆனால் அவளின் துரதிர்ஷ்டவசமாக அந்த ரைடு சிங்கிளாக செல்ல வேண்டியது. அது மட்டுமில்லாமல் மிக வேகமாக மேலும் கீழும் மாறி மாறி செல்லும். அதிலிருப்பவர்கள் எல்லோருமே சாய்ந்திருப்பதில் ஓட்டிக் கொண்டது போல் தான் இருப்பார்கள், கையை கூட அசைக்க முடியாது.

அதிலிருந்து ஸ்வேதா கிட்டத்தட்ட விழுந்து விடுவது போல் தான் இறங்கினாள்.

எல்லா பெண்களுக்குமே ஓரளவுக்கு அந்த நிலை தான் என்றாலும், ஏற்கனவே அந்த மாதிரி ரைடுகளில் ஏறி பழக்கமில்லாத ஸ்வேதாவிற்கு இன்னும் கஷ்டம் தான்.

இது போல் இரு நிகழ்வுகள் நடந்த பின் பாலுவே “உனக்கு தான் இதெல்லாம் ஆகாது இல்ல, அப்புறம் ஏன் இப்படி தேவை இல்லாம போயிட்டு இப்படி உடம்பை கெடுத்துக்கற, எங்க மூடையும் ஸ்பாயில் பண்ற” என்று கோபமாக கேட்கவே, அவள் அதற்கு மேல் எந்த ரைடுகளிலும் ஏறவில்லை.

நடந்து செல்லும் போதும் எல்லோரும் ஜோடி ஜோடியாக நடந்து செல்ல சந்துரு மட்டும் இவளுடன் சேர்ந்து நடக்காமல் தனியாக நடந்து வந்தான்.

கோபத்துடன் பின்னால் பார்த்தால், இளவரசன் ஏதோ கூற முகம் சிவந்து போய் வரும் இனியா கண்ணில் பட்டாள்.

அவளுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. எல்லோரும் சந்தோசமாக வரும் போது தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று ஆத்திரம் தான் வந்தது.

ஆனால் சந்துருவோ முகத்தில் ஏதும் காட்டாமல் அமைதியாக வந்தான்.

பின்பு அனைவரும் ஹிமாலயன் வாட்டர் ரைடு போகும் போது வழக்கம் போல் எல்லோரும் ஜோடியாக அமர இந்த முறை ஸ்வேதா, சந்துரு, பவித்ரா என்று சந்துரு நடுவில் அமர்ந்திருந்தான். (சந்துருக்கு ரெண்டு பேர்-ஆன்னு டென்சன் ஆகாதீங்க. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கங்க)

தண்ணீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அந்த பெரிய டயர் போன்றது அசைந்து அசைந்து செல்ல ஆங்காங்கே இடித்து இடித்து சென்று தண்ணீர் மேலே அடித்து சென்றது.

பவித்ராவிற்கோ தண்ணீர் என்றால் தான் மிகவும் பயம். ஒரு இடத்தில் வேகமாக மோதி கொஞ்சம் அதிகமாக தண்ணீர் எல்லோரின் மேலும் அடிக்க அவள் பயந்து போய் கத்திக் கொண்டே சந்துருவின் கையை பிடித்துக் கொண்டாள்.

எல்லோரும் அவளை பார்த்து சிரித்து கலாட்டா செய்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.

ஸ்வேதா பவித்ராவின் கை சந்துருவை பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். எல்லோரையும் சுற்றி பார்த்தாள். யாரையும் எதுவும் பாதிக்கவே இல்லை. அவரவர் சந்தோசமாக இருந்தனர், அவளைத் தவிர.

அவர்களின் சந்தோசம் அவளுக்கு வெருப்பளித்தது. எல்லோரையும் விட, திரும்ப ஒரு முறை குலுங்கியதால் பயந்திருந்த பவித்ராவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்த சந்துருவை விட்டு விட்டு பவித்ராவின் மேல் தான் அவள் கோபம் திரும்பியது.

எத்தனை நாளுக்கு என்று இளக்காரமாக எண்ணிக் கொண்டாள். சீக்கிரம் உன்னை துறத்துகிறேன் என்று மனதினுள் எண்ணிக் கொண்டாள்.

இங்கே இப்படியிருக்க அவர்கள் வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் சதி நடந்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை நல்லது தானோ?    

தொடரும்

En Iniyavale - 29

En Iniyavale - 31

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.