(Reading time: 23 - 45 minutes)

 “ம்மாஆஆஆஆஆ”

“இப்ப ஏண்டி கத்தற, போ போய் உங்க அக்காவை கூட்டிட்டு வா, துணிய காயப் போடறதுக்கு எவ்வளவு நேரம். போ போய் கூட்டிட்டு வா”

“என்னம்மா சாப்பிட உட்கார்ந்த குழந்தையை இப்படி எழுப்பற” என்று சோகத்துடன் கேட்டாள் மலர்விழி.

கௌசல்யாவோ அவளை முறைக்க,

“கௌசி செல்லம். பசிக்குது டா” என்றாள் சோகம் போல முகத்தை வைத்துக் கொண்டு.

“ஏய் வாலு, நாம சாப்பிடும் போதே சாப்பிட சொன்னா தான் அவ ஏதாச்சும் சாப்பிடுவா, அப்புறம் சாப்பிடறேன்னு சொல்லுவா. இல்லன்னா எல்லாத்தையும் நினைச்சிட்டு ஒழுங்காவே சாப்பிட மாட்டா. முதல்ல அவளுக்கு ஒரு வேலை கிடைக்கணும்” என்றார்.

மலர்விழியின் முகத்திலும் சோகம் பரவ “சரிம்மா. இதோ போய் கூட்டிட்டு வரேன்” என்றவளாக மாடிக்கு சென்றாள்.

மலர்விழி மாடிக்கு சென்று பார்க்க தேன்மொழி சுவற்றில் சாய்ந்தவாறு கையைக் கட்டிக் கொண்டு மரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

மரத்தையே பார்த்துக் கொண்டிருந்த தன் அக்காவையே பார்த்துக் கொண்டு நின்றாள் மலர்விழி.

அவளின் அந்த மோன நிலையை கலைக்க விரும்பாமல் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏதோ ஒரு சிந்தனையோடு நிற்கும் அக்காவை பார்த்து எப்போதும் அதிசயிப்பது போல் இப்போது அதிசயித்துக் கொண்டிருந்தாள்.

தேன்மொழியின் முகத்தில் தெரியும் தீட்சண்யம் தான் அவளை எப்போதும் ஈர்க்கும்.

எந்த ஒரு விசயத்தையும் தெளிவாக அதே நேரத்தில் கட் அண்ட் ரைட்டாக முகத்தில் அந்த தீட்சண்யத்தோடு சொல்வாள். இந்த அம்சம் தான் அவளுக்கு நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் கொடுத்திருந்தது.

ஆண், பெண் என அவள் அக்காவின் இருபாலின நண்பர்களும் எந்த ஒரு தெளிவிற்காக அவளிடம் அந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்களோ, அதே விஷயம் தான் அவளுக்கு எதிரிகளையும் பெற்று தந்தது.

‘ஒரு பெண்ணுக்கு என்ன அவ்வளவு திமிர்.’

‘என்ன நெஞ்சழுத்தம் பார்த்தியா. எப்படி பார்க்கிறா’

‘ஒண்ணு சொன்னா அவங்களுக்கு சரியில்லைன்னு தோணினா ஏத்துக்க மாட்டாங்களாம். எவ்வளவு திமிர் பார்த்தியா.’

இப்படி எண்ணற்ற பேச்சுக்களை கேட்க வைத்துள்ளது.

இவை எல்லாவற்றையும் கேட்கும் போது மலர்விழிக்கு தான் கோபம் வரும். ஆவேசத்துடன் இரண்டு நாட்கள் அதையே நினைத்து அப்படி பேசியவர்களை திட்டிக் கொண்டிருப்பாள்.

ஆனால் தேன்மொழியிடம் இதற்கெல்லாம் எந்த ரியாக்ஷனும் வராது. அவளை புகழும் போதும் சரி, இப்படி யாராவது ஏதாவது கூறும் போதும் சரி, அவள் முகத்தில் எந்த உணர்வும் தெரியாது.

ஒரு வேலை அவளின் அந்த நிலை தான் அவர்களை இன்னும் கோபப்பட வைக்கிறதோ என்னவோ.

ஒருத்தியை திட்டினா, அவளுக்கு கோபம் வந்து திரும்ப காச் மூச்சுன்னு கத்த வேண்டாமா. அதை தானே இந்த உலகம் எதிர் பார்க்கிறது.

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், என்ன வேணும்னா சொல்லிக்கோங்க. நான் சொல்றது கரெக்ட், எனக்கு தெரியும். அவ்வளவு தான் என்று கூறுபவள் மேல் அவர்களுக்கு கோபம் வருவது நியாயம் தானே.

மலர்விழிக்கு அவளை விட அவள் அக்காவை ஏன் பிடிக்கிறது என்பது தான் தெரியவில்லை.

சிறு வயதில் இருந்து அக்கா அக்கா என்று அவள் பின்னாலே திரிவாள். எல்லோரும் அவளை தேன்மொழியின் ஒட்டு வால் என்று கூட கிண்டல் செய்வார்கள். அந்த நேரத்திற்கு கோபம் வந்தாலும், அவளால் அவள் அக்காவை மட்டும் விட்டு கொடுக்க முடியாது.

மலர்விழி எலுமிச்சை நிறத்தில் இருக்க, தேன்மொழியோ நிறம் குறைவு..

நிறம் குறைவு என்றால் மாநிறம் கூட கிடையாது. அதை விடவும் குறைவு. அதற்காக கருப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் ரொம்ப கலராக இருப்பவர்கள் அவளை கருப்பு என்று கூறும் நிறத்தில் தான் இருந்தாள்.

இதுவே மலர்விழி அந்த நிறத்தில் இருந்தால் அதையே குறைப்பட்டு மாய்ந்து போயிருப்பாள். ஆனால் தேன்மொழியோ அதற்காக ஒரு நாளும் வருந்தியதில்லை.

ஒரு நாள் மலர்விழி “அக்கா, நீ கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கன்னு என்னைக்குமே பீல் பண்ணதில்லையா அக்கா” என்று கேட்டாள்.

அதற்கு சிறிது புன்னகையுடன் “இல்லை” என்று கூறியவள் பின்பு “சிகப்பு என்பது அழகில்லை, ஆங்கிலம் என்பது அறிவில்லை. இதை எங்கேயோ கேட்டிருக்கேன். யோசிச்சி பார்த்தா இது உண்மை தானேன்னு தோணும். பட் மத்தவங்களுக்காக வெளியில இப்படி எல்லாம் சொல்லிட்டு மனசுக்குள்ள ஐயய்யோ நாம சிகப்பா இல்லாம போயிட்டோமோன்னு வருத்தப் படக் கூடாது. எனக்கு என்னைக்குமே அப்படி தோணினதில்லை. மே பீ நான் கருப்பா இருந்துக்கிட்டு இப்படி சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. நீ சொன்னா ஏத்துப்பாங்க.”

“நீ ஒன்னும் கருப்பு எல்லாம் இல்லை” என்றவளை பார்த்து

“நான் என்பது யாரு மலர். என்னோட அழகு தானா, அப்படி என்றால் வயதான பிறகு இந்த அழகு போய் விட்ட பிறகு, அது நான் இல்லையா. நான் என்பது என் மனது, என் எண்ணங்கள் அல்லவா, அவை தானே என்றும் மாறாமல் என்னுடன் இருப்பவை” என்றாள்.

அப்போது தான் உணர்ந்தாள். ‘அட ஆமாம். நாமளே எத்தனை பேர்னஸ் கிரீம் தேடி தேடி போட்டுக்கிட்டு இருக்கும் போது, அக்கா அதுக்காக எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணதே இல்லை’ என்பதை.

அன்றிலிருந்து அவளும் அந்த பேர்னஸ் கிரீம்களுக்கு எல்லாம் விடைக் கொடுத்து விட்டாள்.

அதுவும் அவள் அக்கா கூறியதை ஒரு நூறு பேருக்காவது கூறி இருப்பாள். அது திரும்ப தேன்மொழி காதுக்கே வரும் அளவுக்கு.

தோ யோசித்துக் கொண்டிருந்த தேன்மொழி திரும்ப, அவள் பார்வையில் மலர்விழி பட்டாள்.

“என்னடி இங்க நின்னுட்டிருக்க”

“இல்ல. அம்மா உன்னை கூப்பிட சொன்னாங்க. நீ ஏதோ யோசிச்சிட்டு இருந்த. அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே நின்னுட்டேன்.”

“அது சரி. சரி வா. போகலாம்”

“ம்ம்ம். அக்கா. தேவி மேடம் போன் பண்ணாங்க. வீடு, எல்லாம் செட் ஆகிடுச்சா, அப்புறம் உன் வேலை என்ன ஆச்சின்னு கேட்டாங்க”

“ஓ. வேலைக்கு தான் ட்ரை பண்ணணும்.”

“ஏன்க்கா. வேலை கிடைக்கறது அவ்வளவு கஷ்டமா. எனக்குன்னா சொல்லு, இப்ப தான் வேலைல ஜாய்ன் பண்ணேன், ரெண்டு மாசம் தான் ஆச்சி. உடனே வேலையை விட்டுட்டு இங்க வந்ததால கொஞ்சம் வாய்ப்பு கம்மி. உனக்கு என்ன, எக்ஸ்பீரியன்ஸ் இருக்குல்ல”

“அதில்ல டா. இந்த அகாடமிக் இயர் ஸ்டார்ட் பண்ணி அல்மோஸ்ட் போர் மன்த்ஸ் ஆகிடுச்சி இல்ல. வேகன்சி எல்லாம் பில் பண்ணி இருப்பாங்க. அதுவும் இல்லாம சென்னையா இருந்தா பரவால்ல. இங்க லிமிடெட் வேகன்சி தானே இருக்கும். பார்க்கலாம் எங்க கிடைக்கணும்ன்னு இருக்கோ அங்க கிடைக்கும்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.