(Reading time: 15 - 30 minutes)

 

றுநாள் அதிகாலை நான்கு மணி.

விமான நிலையத்தில் அமர்ந்திருந்தான் பரத்.

விமானம் தரையிறங்கிவிட்டதாக விட்டதாக அறிவிப்பு வர இருக்கையை விட்டு எழுந்தான்.

சில நிமிடங்கள் கழித்து வந்தார் அவர். ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்று எல்லாராலும் அழைக்கப்படும் அவர்.

நம் பரத்துக்கு எல்லாமே அவர் தான். அவர் முகத்தில் ஓடும் சின்னதொரு வருத்த ரேகையையோ, கண்களில் சேரும் ஒரு சொட்டு கண்ணீரையோ கூட பார்க்க விரும்பமாட்டான் பரத்.

நேர்த்தியாய் உடுத்தபட்ட காட்டன் சேலையும், அவரது வட்டமான முகத்துக்கு இன்னமும் கம்பீரம் சேர்க்கும் கண்ணாடியும் தான் அவரது அடையாளம்.

அவர் பெயர் மைதிலி அனந்தராமன். அனந்தராமன் இப்போது உயிருடன் இல்லை.

சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியின் முதல்வர் நம் மைதிலி. ஐம்பத்தி ஆறு வயதில் இன்னமும் பம்பரமாய் சுழன்றுக்கொண்டிருக்கிறார் அவர்.

பரத்தின் அருகில் வந்து நின்றார் மைதிலி.

'ஏன்டா கண்....ணா இப்படி தூக்கத்தை கெடுத்திட்டு ஏர்போர்ட்லே வந்து காத்து கிடக்கறே.? நான் டாக்ஸி பிடிச்சு வந்திட மாட்டேனா? என்றார் மைதிலி.

'ஏன்டா கண்....ணா.. ' அதை ரசித்தபடியே புன்னகைதான் பரத்.

'கண்ணா' என்று அவர் அழைக்கும் அழகே தனிதான். பரத்தின் தாத்தா பெயரும் பரத்வாஜ் என்பதால், அந்த பெயரை சொல்லி வீட்டில் யாருமே அவனை அழைப்பதில்லை. கண்ணா கண்ணாவென அழைத்து வீட்டில் அவன் பெயர் கண்ணனென்றே ஆகிப்போனது. உறவினர்கள் பலருக்கு அவன் பெயர் பரத் என்பதே தெரியாது.

புன்னகையுடன் அவரை பார்த்து சொன்னான் பரத் 'நீ எத்தனை நாள் தூங்காம கிடந்து எங்களை வளர்த்திருப்பே. ஒரு நாள் நான் உனக்காக தூங்காம இருந்தா ஒண்ணும் ஆயிடாது. வா.

அவர் பெட்டியை தூக்கிக்கொண்டு நடந்தான் பரத். அவர் எதுவும் குடிக்க மாட்டார் என்று தெரியும் .இருந்தாலும் மனம் கேட்கவில்லை 'சூடா ஒரு கப் காபி சாப்பிடறியா? கேட்டான் பரத்.

இல்லைடா. வீட்டுக்கு போயிடலாம்.

காலையில் குளித்து பூஜையை முடிக்காமல் எதையும் சாப்பிட மாட்டார் அவர். அவரிடம் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. வாழ்கையை எப்படி வாழ வேண்டுமென்று அவரிடம்தான் கற்றுக்கொண்டான் பரத்.

வீட்டில் எல்லாரிடமும் அதே நேர்த்தியை எதிர்பார்ப்பார் மைதிலி.

வீட்டை அடைந்தனர் இருவரும்.

காலை ஏழரை மணிக்கு எல்லாரும் பூஜையறையில் இருக்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள், பூஜையறையில் அவர் குரல் மட்டுமே ஒலிக்க எல்லாரும் கொஞ்சம் கரைந்து தான் போவார்கள்.

நேரம் ஏழரை. இந்து இன்னும் பூஜைக்கு வந்து சேரவில்லை.

'இந்........து.......' அதிர்ந்து எதிரொலித்த பரத்தின் குரலில் விழுந்தடித்து ஓடி வந்தாள் அவள்.

'வந்தவுடனே ஆரம்பிச்சாச்சா.? அடுத்தது எட்டு மணிக்கு, மணியடிச்சவுடனே சாப்பாடு. கொஞ்சம் freeyaa விடுங்கப்பா'. முணுமுணுத்த இந்து, 'ப்ச்' என்றபடியே திரும்பிய பரத்தின் கனல் பார்வையில் சட்டென அமைதியாகிப்போனாள்.

சரியாய் எட்டு மணிக்கு எல்லாரும் சாப்பாட்டு மேஜையில் இருந்தனர். வீட்டில் சமையல் வேலை செய்யும் தியாகராஜன் பரிமாறிகொண்டிருந்தார்.

'இன்னைக்கு ஜனனிக்கு கல்யாணம் மைதிலி.' என்றார் தாத்தா. அவர்களது குடும்ப நண்பரின் மகள்தான் ஜனனி.

கல்யாணம் எங்கே பெங்களூர்லேயா?

'இல்லைமா. இங்கே சென்னையிலேதான் கல்யாணம். பத்தரை மணிக்கு முகூர்த்தம். வீட்டுக்கு வந்து அழைச்சிட்டு போனாங்க, யாராவது  போயிட்டு வாங்களேன்.' என்றார் அவர்.

சட்டென நிமிர்ந்தாள் இந்து.' நான் வரமுடியாது பா. எனக்கு ஆபீஸ்லே வேலையிருக்கு.' ஏனோ அந்த திருமணதிற்கு சென்று வாழ்த்த மனமில்லை அவளுக்கு. அந்த வீட்டில் ஜனனி-விஷ்வா காதல் விஷயம் அறிந்தது இந்து மட்டுமே.

நீ வரியாடா கண்ணா என்றார் மைதிலி. முகூர்த்தம் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு அப்படியே காலேஜ் போயிடு.

அவர் சொல்லி எதை மறுத்திருக்கிறான் பரத்.? அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவருடன் கிளம்ப தயாரானான் அவன்.

தே நேரத்தில் மைலாப்பூரிலிருந்து அபர்ணாவின் அப்பாவை அழைத்துக்கொண்டு திருமணதிற்கு கிளம்பினான் விஷ்வா. அது யாருடைய திருமணம் என்று அப்போது தெரியவில்லை அவனுக்கு.

மண்டபத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினர் விஷ்வாவும் ,அபர்ணாவின் அப்பாவும்.

ஆட்டோ டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்தவனின் கண் முன்னால் சிரித்தது அந்த அலங்கார பலகை. ' JANANI WEDS SUDHAKARAN'

நேற்று மின்னஞ்சலில் பார்த்த மண்டபத்தின் பெயர் அப்போதுதான் நினைவில் வந்தது.

உடலெங்கும் பல அதிர்வலைகள் பாய சிலையாகி நின்றுவிட்டிருந்தான் விஷ்வா. அவன் காலடியில் பூமி நழுவுவது போல் இருந்தது. 'எங்கே? யார் திருமணதிற்கு வந்து நிற்கிறேன் நான்.?'

என்னாச்சுப்பா? என்றார் அபர்ணாவின் அப்பா.

ம்......? கலைந்தான் விஷ்வா. இவ்வளவு தூரம் வந்தபிறகு யோசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்று புரிந்தது அவனுக்கு. அங்கிருந்து கிளம்பிவிடுவது என்றாலும் திடீரென்று அவரிடம் என்ன விளக்கம் சொல்லிவிட்டு கிளம்புவது என்று புரியவில்லை அவனுக்கு. சட்டென்று எதுவுமே தோன்றவில்லை.

ஆங்.. ஒ....ண்ணும் ஒண்....ணுமில்லை போகலாம்' தடுமாறியபடியே நடந்தான் விஷ்வா. மண்டபத்திற்குள் நுழைந்தவனின் இதயம் நிலையற்று தாறுமாறாக துடித்தது. நிமிர்ந்து மேடையைப்பார்க்கும் சக்தியற்றுப்போயிருந்தான் விஷ்வா.

அதே மண்டபத்தில் மேடைக்கு முன்னால் இருந்த முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர். பரத்தும், மைதிலியும். அவர்களை கவனிக்கவில்லை விஷ்வா. அவர்களும் இவனை கவனிக்கவில்லை.

மணமகனின் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார் அபர்ணாவின் அப்பா. இவனை அறிமுகப்படுத்தி வைத்தார். பெயருக்கு சிரித்து வைத்தவன் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

என்னதான் அவள் வேண்டாமென்று அவன் முடிவெடுத்திருந்தாலும் கண்ணெதிரே நடக்கும் காதலியின் திருமணத்தை ரசிக்கும் அளவுக்கு அவன் ஒன்றும் ஞானி இல்லையே!!!

அபர்ணாவின் அப்பா முன்வரிசைக்கு சென்று விட, ஜனனியின் கண்ணில் பட விரும்பாமல் பின் வரிசையில் ஓரமாய் சென்று அமர்ந்தான் விஷ்வா.

இதயம் படபடவென துடிக்க மெல்ல நிமிர்ந்தான் விஷ்வா.

மேடையில் அமர்ந்திருந்தாள் அவள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.