(Reading time: 15 - 30 minutes)

 

 

'ப்படி? எப்படி அது?. இன்னொரு தடவை கூப்பிடு விஷ்வா ப்.....ளீஸ்.

'ஜானும்...மா'

'நீ அப்படி கூப்பிட்டா எனக்கு அப்படியே....

அப்படியே..... அவன் குறுகுறுப்பாய் பார்க்க

சும்மா இரு விஷ்வா என்று அழகாய் சிரித்தவள் இன்று வேறொருவனுடன் அமர்ந்திருந்தாள்.

ஒரு நொடி மனம் தவித்துதான் போனது.

அடுத்த சில நிமிடங்களிலேயே வந்தது அந்த நிமிடம். ஜனினியின் கழுத்தில் சுதாகரன் தாலி கட்டும் வைபவம் மேடையில்  அரங்கேறியது.

கற்சிலையாக அமர்ந்திருந்தான் விஷ்வா.

'இதற்கு பேர் தான் இதய மாற்று அறுவை சிகிச்சையா? என் இதயத்தை எடுத்து வேறொருவனுக்கு பொருத்துவது இதுதானா? நான் உயிருடன் இருக்கும் போதே நடக்கிறதே இது.' உடல் நடுங்குவது போல் உணர்ந்தான் விஷ்வா.

சில நொடிகள் கழித்து கண்களை மூடிக்கொண்டு ஆழமாக சுவாசித்தான் 'ஏன்? என்னவாயிற்று எனக்கு? அவள் வேண்டாமென்று நான்தானே மனதார முடிவெடுத்தேன். ஆம் நான் தான் முடிவெடுத்தேன். என் அபர்ணாவுக்காக முடிவெடுத்தேன். அவளை தவிர எனக்கு வேறெதுவும் முக்கியமில்லை.'

அபர்ணாவின் ஞாபகம் வந்தவுடனேயே அலைப்பாய்ந்துக்கொண்டிருந்த மனம் லேசாகிப்போனது.

சில நிமிடங்கள் கழித்து சுவாசத்தை சீர்ப்படுத்திக்கொண்டு எழுந்தான் இனி அவள் வேறொருவன் மனைவி. அவள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துவதுதான் நியாயம்.

மனதை சரிப்படுத்திக்கொண்டு, அபர்ணாவின் அப்பாவிடம் எதையாவது சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட எத்தனித்து, இருக்கையை விட்டு எழுந்த அந்த நொடியில் அவன் அருகில் வந்தார் அவர் 'வாப்பா, மேலே போய் பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்திட்டு வந்திடலாம். என்றார் அவர்.

'நா.. நா..னா நான் எதுக்கு அங்கிள் நீங்க போங்க'

அட என்னப்பா நீ.? கல்யாணத்துக்கு வந்திட்டு பொண்ணு மாப்பிள்ளையை பார்க்காமல் போனால் எப்படி.?

இல்லை அங்கிள்... தடுமாறினான் விஷ்வா. என்ன சொல்வது அவரிடம். நான் ஜனனியை காதலித்தவன் என்றா?

ஏதோ சொல்ல முயன்றவனை பேசவிடாமல் அவர் நகர்த்திக்கொண்டு  போக பொம்மையாய் அவருடன் நடந்தான் விஷ்வா. ஒவ்வொருவராய் வாழ்த்திவிட்டு நகர, மணமக்களின் அருகில் அவர்கள் செல்ல மெல்ல நிமிர்ந்தது ஜனனியின் பார்வை.

அவனை பார்த்த நொடியில் ஒரே நேரத்தில் அவளுக்குள்ளே அதிர்ச்சியும், பயமும் பரவ உடல் நடுங்கி முகம் வியர்த்தே விட்டிருந்தது. கையிலிருந்த கைகுட்டையால் முகத்தை துடைக்கும் பாவனையில் அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் ஜனனி.

அவளையும் அவள் தவிப்பையும் நேருக்கு நேராக பார்த்த நிமிடத்தில் அவள் மீது பரிதாபத்தை தவிர வேறெதுவுமே வரவில்லை விஷ்வாவிற்கு. அவனிடம் ஒரு பெருமூச்சு எழ, தெளிந்த மனதுடனும் நிறைவான புன்னகையுடனும் மாப்பிள்ளையின் கையை பற்றி குலுக்கினான் விஷ்வா.

'ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் சுதாகர். நான் மனசார சொல்றேன் நீங்க ரெண்டு பேரும், ரெ.....ண்டு பேரும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்'

அவன் அந்த வார்த்தைகளில் அவன் கொடுத்த அழுத்தமும், அவன் புன்னகையும் அவளை உலுக்கித்தான் போட்டது.

அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஜனனி. தன்னை விட்டு பிரிந்த காதலியின் வாழ்கை அழிந்து போகவேண்டுமென்று நினைப்பவர்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கிறார்களா என்ன?

மனம் அவனுக்காக வருந்தியது. 'நான் மட்டும் சந்தோஷமா இருந்தா போதாது. நீயும் சந்தோஷமா இருக்கணும் விஷ்வா' என்றாள் தனக்குள்ளே..

சில நிமிடங்கள் மாப்பிளையுடன் பேசிவிட்டு அவன் விடைபெற்று நகர எத்தனித்த போது மனம் தாங்காமல் சட்டென சொன்னாள் ஜனனி. 'உங்களுக்கு கல்யாணம் முடிவாச்சுன்னா பத்திரிக்கையை எங்களுக்கு கண்டிப்பா அனுப்புங்க. நாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வருவோம்.'

சட்டென நிமிர்ந்து சில நொடிகள் அவள் முகத்தை ஆராய்ந்தான் விஷ்வா.

அவளை காயப்படுத்திவிட விரும்பாதவனாய்  'கண்டிப்பா அனுப்பறேன்' என்று புன்னகைத்து விட்டு நகர்ந்த நொடியில் அவனை தாக்க தயாராக இருந்தது அடுத்த அதிர்ச்சி.

மேடையை விட்டு கீழே இறங்கியவன் அபர்ணாவின் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டே திரும்ப, ஒரு நொடி பேச்சிழந்து போனான்.,

மணமக்களை வாழ்த்துவதற்காக மேடையின் மற்றொரு பக்கத்தில் மேலே  ஏறிக்கொண்டிருந்தனர். பரத்தும், மைதிலியும்.

மைதிலியை பார்த்தவுடன் விஷ்வாவின் உடலும், மனமும் சிலிர்த்துதான் போனது. மனமெங்கும் பொங்கிய மகிழ்ச்சியில் அவருடன் பேசிவிட துடித்து, சில அடிகள் முன்னால் நடந்தவனை தடுத்து நிறுத்தியது ஏதோ ஒன்று.

அங்கே இருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டிருந்தான் விஷ்வா. இந்த நிமிடம் அவன் அவர்  முன்னால் சென்று நின்றே விடலாம். நின்றால் என்னவாகும்?

அந்த முகம் மலர்ந்து போகுமா? இல்லையே.!!!!! அந்த முகத்தில் கோபமும், வலியும் ஒரே நேரத்தில் சேருமே. கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டு நிற்குமே. அதை பார்க்கும் சக்தி கண்டிப்பாக அவனுக்கு இல்லை. பார்வை மேடை மீதே இருக்க சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான் விஷ்வா.

அதிர்ச்சியில் உறைந்திருந்தவனை கவனிக்காமல் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் அபர்ணாவின் அப்பா.

அதே நேரத்தில் மேடையின் மேல் மணமக்களை வாழ்த்திவிட்டு சொல்லிவைத்தார் போல் அவனை நோக்கி திரும்பினான் பரத். சுள்ளென கொதிப்பேறியது அவனுள்ளே. இவன் எங்கே இங்கே வந்து தொலைத்தான்?

எல்லாரிடமும் விடைப்பெற்று கீழே இறங்கினார் மைதிலி. அவர் தோளை அணைத்தபடி  கீழே இறங்கினான் பரத்.

அவர் பார்வை விஷ்வாவின் மீது பட்டுவிடாத வண்ணம் அவரை அழைத்து சென்றான் பரத்.

அதை பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாவினுள்ளே ரத்தம் கொதித்தது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்?. மனம் பற்றி எரிந்தது விஷ்வாவுக்கு.

மண்டபத்தை விட்டு வெளியே வந்து கார் நிறுத்துமிடத்திற்கு வந்த நிமிடத்தில் திகைத்துப்போனான் பரத்.

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனது காரின் மீது சாய்ந்துக்கொண்டு நின்றிருந்தான் விஷ்வா.

சில நொடிகள் அசைவற்று நின்றுவிட்டிருந்தார் மைதிலி. அவர் கண்களில் நீர் சேர துவங்க, தான் அணிந்திருந்த கண்ணாடியை சட்டென கழற்றினார் அவர்.

அந்த கண்ணீரில் துடித்து போய் பரத் பேச வாயெடுக்கும் முன்

அ....ம்....மா என்றான் விஷ்வா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.