(Reading time: 36 - 71 minutes)

 

செல்வம் இப்போதைக்கு வரப்போவதில்லை… வேரு ஒருவரிடம் கேட்கவும் ஆதிக்கு விருப்பமில்லை… மேலும் ஆதி லண்டன் வந்த வேலையைப் பார்க்க வேண்டுமே…. அவன் எடுத்துக்கொண்ட ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்துவிட்டான்… அடுத்து இங்கே அவன் அவர்களுக்கு(வெளிநாட்டவர்களுக்கு) பயிற்சி அளிக்க வேண்டி இருந்தது…. அதனால் எப்படியும் நாட்கள்  நீளுமே தவிர, குறையாது… இதை அவன் முழுமூச்சாக நாட்களைப் பார்க்காமல் முடித்துவிட்டால் இங்கேயே அவன் அவனது அடுத்த கிளையையும் தொடங்கி விடலாம்… அதை அவ்னீஷிடம் பார்த்து கொள்ளவும் சொல்லலாம்… ஹ்ம்ம்… எல்லாம் விதிப்படியே தான் நடக்கிறது… ஹ்ம்ம்… பொறுத்துக்கொள்ள தான் வேண்டும் அதுவரை…” என்றெண்ணிக்கொண்டான் ஆதர்ஷ்….

காவ்யாவிடம் வாயளந்து விட்டு தனது அறைக்குள் வந்தவள், மௌனமாக கண்ணீர் வடித்தாள்… “என் சோகமோ வருத்தமோ யாரையும் தொற்றிக்கொள்ள நான் அனுமதியேன்…. என்னோடு போகட்டும் எல்லாம்… ராம்… நீங்க நல்லாயிருக்கணும் ராம்… என்னால் உங்களை மறக்க முடியாது ராம்…” என்று வேதனையில் புழுங்கினாள் சாகரி…

ரவின் தனிமையில் காவ்யா கணவனிடம், “ஏங்க இன்னைக்கு ஏன் இவ்வளவு கோபம் பட்டீங்க?...”

அவளின் விரல்களைப் பற்றி கொண்டவன், “வயசு பொண்ணுங்கடா… நாமும் அவர்களின் வயதை தாண்டி தானே வந்திருக்கிறோம்… அப்பா நம்மை நம்பி தான விட்டு போயிருக்காங்க… நாளைக்கு எதும் பிரச்சனை என்றால் நம்மால் அப்பா முகத்தில் விழிக்க முடியுமாடா?... அதான் கொஞ்சம் கோபம் பட்டுட்டேன்….”

“ஹ்ம்ம்… நல்ல பொண்ணுங்க தாங்க இரண்டு பேரும்…. காதலிச்சாலும் சரியானவங்களை தேர்வு செய்வாங்க… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு… அப்படி அவங்க காதல் வயப்பட்டா கண்டிப்பா நம்மிடம் விரைவில் சொல்லுவாங்க… அதை நான் அவங்க கூட பழகினதை வைத்து சொல்லுறேன்…”

“அப்போ அவங்க காதலிக்கிறாங்கன்னு சொல்கிறாயா?...” என்றான் தினேஷ் அவள் விரல்களை அழுத்தியபடி….

அவனின் கையை மெதுவாக தட்டிக்கொடுத்தவள், “இப்போ தான சொன்னீங்க நாமும் அவங்க வயதை கடந்து வந்தவர்கள் என்று…. அதை அதற்குள் மறந்தாச்சா?... ஹ்ம்ம்… ஒரு பொண்ணா இருந்து அவங்க உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும்… பொண்ணுங்க மனதில் காதல் இருந்தால் அதை அவர்கள் முகமே காட்டி கொடுத்துவிடும்… என்னதான் பொண்ணு அவளின் மனதில் காதலை பொத்தி வைத்தாலும், சில நேரங்களில் அவளையும் மீறி அவளின் உள்ளத்தை அவளின் முகம் படம் பிடித்து காட்டிவிடும்….”

“இப்போ நீ என்ன சொல்ல வருகிற காவ்யா?....” என்றான் அவளின் கண்களைப் பார்த்து…

‘ஒரு வேளை அவர்கள் இருவரும் காதலித்தால் நிச்சயம் நல்ல நபர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்…. காலம் சீக்கிரம் நமது எண்ணங்களுக்கு பதில் சொல்லும்… அதுவரை பொறுமையாக இருக்கலாம் கொஞ்ச நாட்கள்...” என்று சொல்லிவிட்டு எழுந்தவளை,

“கவி… நீ சொல்லுறது எனக்கு புரியுதுடா… அவர்கள் விருப்பப்படி அவர்களின் வாழ்க்கை இருக்கணும்டா மகிழ்ச்சியாய்… ஆனால் ஒரு அண்ணனாக இருந்து பார்க்கும்பொழுது இந்த காதல் இரண்டு பேரையும் வாழ்க்கையில் வழி தவறி விட்டுவிட கூடாதென்ற பயமும் இருக்கிறதுடா…” என்று அவளின் நெஞ்சில் முகம் புதைத்து அவளை இடையோடு சேர்த்துக் கட்டிக்கொண்டான்….

தாய்மை உணர்வு மேலிட, அவனின் தலைமுடியைக் கோதியவள், “அவர்கள் கண்டிப்பாக நல்ல துணையோடு சந்தோஷமா இருப்பாங்க… ஹ்ம்ம்… எனக்கு அண்ணன் இல்லாதது உங்களுக்கு ரொம்ப வசதியாய் போச்சு அப்படிதானே?...” என்றாள் கேலியுடன்….

அவளை நிமிர்ந்து பார்த்தவனின் இதழ்களில் புரிந்து கொண்டதின் அடையாளமாக குறுநகை அரும்பியது….

“ஹ்ம்ம்… என் பராக்கிரமத்தை பார்க்க உனக்கு சந்தர்ப்பம் கடவுள் ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்…”

“ஓ… அப்படியா?... அதான் உங்க தங்கைகள் விஷயத்தில் உங்க வீர சூர பராக்கிரமம் தெரிஞ்சிடுமே இன்னும் கொஞ்ச நாட்களில்… அப்போ பார்க்கிறேன் நல்லா….” என்று சிரித்தாள் காவ்யா…

“ஹ்ம்ம்…. பாரு பாரு…” என்றவனும் அவளின் சிரிப்பில் கலந்து கொண்டான்….

“இருந்தாலும் சாகரி பாவம் தான்… காலையில் உங்க கோபத்தை பார்த்து நானே வாயடைத்து போய்விட்டேன்…”

“அடடா… உன் நாத்தனார் நான் இருக்கும்போது அழுகாச்சி காவியம் வாசிச்சிட்டு நான் உள்ளே போனதும் என்னை எப்படி சமாளிக்கிற நீ என்று உன்னிடம் அவ கலாய்ப்பு காவியம் வாசிக்கலையா?...”

அவன் பேசியதைக் கேட்டு விரிந்தது அவளது கண்கள்…

அதைக் கண்டவன், “மெல்லடா… கவி… கண் வலிக்கப்போகுது…. மெல்ல…” என்றான் சிரிப்புடன்….

“அப்போ எல்லாம் கேட்டீங்களா?...”

“ஹ்ம்ம்… ஆமா… நீ சொன்ன மாதிரி அவ வாலு தான் நிஜமா…. என்னப் பேச்சுப் பேசுறா பார்த்தியா?...”

“உண்மைதாங்க…”

“கவி… ஆனால் அவ நமக்காக தாண்டா அப்படி பேசிட்டு போனாள்… அவளின் உண்மையான குணம் யாரையும் கஷ்டப்படுத்த விடாதுடா… அதனால் தான் நம் முன் நடிச்சிட்டு போயிருக்கா… நீ சொல்லுற மாதிரி அவ காதல் வயப்பட்டிருந்தா இன்னைக்கு அந்த பையன் அவளைப் பார்க்க வராமல் இருந்திருக்கணும் என் யூகம் சரி என்றால்…. ஹ்ம்ம்… அது தான் அவள் இன்று வீட்டிற்கு வர லேட் ஆனதின் காரணம்…” என்ற கணவனின் வார்த்தைகளை நம்பவும் முடியாது நம்பாமல் இருக்கவும் முடியாது அவனையேப் பார்த்தாள் காவ்யா…

“என்ன கவி?... எதுக்குடி இப்படி பார்க்குற?...”

“இல்லங்க… இப்போ நீங்க சொன்னது எ…ல்…..லா….ம்…….”

“இன்னும் இருக்குடா…. நீ பாதிக்கே இப்படி திக்கி திணறுகிறாயே…. உன்னிடம் மீதியையும் எப்படி சொல்வது?...”

“ஹ்ம்ம்… ப்ளீஸ் சொல்லுங்க….” என்று அவனிடம் கெஞ்சினாள்….

“கவி… மயூரியும் இன்னைக்கு அவளுடைய காதலனைப் பார்க்க தான் போயிருந்தாள்…”

“என்னது!!!!!!!!!!!!”

“ஷாக் ஆகாதடா… அவளும் கோவிலுக்கு போறதா இருந்தா, சாகரி கூட தான போயிருக்கணும்… ஆனால் மயூரி தனியா வேற கோவிலுக்குப் போனாள்… அதுமட்டும் இல்லை… மயூரி விஷயம் எனக்கு தெரிஞ்ச மாதிரி சாகரிக்கும் தெரியும்…”

“எப்படி சொல்லுறீங்க?...”

“யோசித்துப் பாருடா நீயே… சாகரி இப்போன்னு இல்லை இங்கே வந்த ஒரு மாத காலமாக கோவிலுக்கு போய் வருகிறாள்… ஆனால் கடந்த வாரம் அவளின் முகத்தில் நீ சொன்னது போல் உற்சாகம் கொப்பளித்தது…. இன்றும் அதை செய்கிறாள் வெளியே மட்டும்… ஆனால் மயூரி இன்று புதிதாக கோவிலுக்கு  செல்ல போவதாக சொன்னாள் அதுவும் சாகரியுடன் அல்ல… இதிலிருந்தே தெரியவில்லையா… சாகரிக்கு விஷயம் தெரியாதிருந்தால் இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பாள், மயூரி அவளுடன் வரவில்லை என்று…. மயூரியின் காதல் அவளுக்கு தெரிந்தமையால் தான் சாகரி அமைதியாக இருந்தாள்… அது மட்டும் இல்லை….” என்றவன் காவ்யாவைப் பார்த்தான்…

“சொல்லுங்க… ஏன் நிறுத்திடீங்க?...”

“ஹ்ம்ம்… அது… சாகரியின் காதல் மயூரிக்கு தெரியவில்லை இந்த நிமிடம் வரை… ஏனெனில் சாகரியின் முகம் சென்ற வாரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவளது காதலை பிரதிபலித்தது…. அதை அவள் கண்டு கொள்ளவில்லை… நான் கண்டுகொண்டேன்…. அநேகமாக அப்போது தான் உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்…. சரிதானா?...” என்றான் கேள்வியுடன்…

“ஆமாம்…” என்றாள் அவளும் தலையசைத்து….

“ஹ்ம்ம்… சாகரியின் துணை, நம்ம நந்து-சித்துவிற்கும் தெரியும்… ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இவர்கள் காதலர்கள் என…. அன்று நந்துவும் சித்துவும் வீட்டிற்கு வந்ததும் அந்த புதிய நபரைப் பற்றி தான் சொன்னார்கள் என்னிடம்…

“என்னங்க… இதெல்லாம் நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லையே….”

“நீ கேட்கவே இல்லையே என் அருமை பொண்டாட்டி… ஹ்ம்ம்ம் இதெல்லாம் யூகம் தாண்டா… அதான் சொன்னேனே… நாமும் அவர்களின் வயதை தாண்டி வந்தவர்கள்… அதை வைத்து தான் சொல்கிறேன் நானும்…”

“என் செல்லம்… இவ்வளவு அறிவா உங்களுக்கு?...” என்றவள் கணவனின் முகத்தில் முத்தங்களைப் பதிக்க, அவன் மற்றவற்றை மறந்து அவளின் செய்கையில் கிளர்ந்தான்…

“கவி….” என்று ராகம் பாடியவன், அவள் கைப்பிடித்து இழுத்தான்… அவளும் அவன் விருப்பத்திற்கேற்ப இசைந்து கொடுக்க துவங்கினாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.