(Reading time: 10 - 20 minutes)

 

கிணற்றின் மீது அவள் கை பதிந்ததில் சிலிர்த்து போனததை போல் நீருக்குள்ளிருந்து அப்படியே மேலே எழும்பியது அந்த வெள்ளை உருவம்.

கண்கள் ரத்த சிவப்பாய், உடல் வெள்ளை புகை மண்டலமாய், மூக்கிருக்கும் இடம் வெறும் பள்ளமாய்  பெரிய வெண் பற்களைக்காட்டி சிரித்தபடி சட்டென மேலே எழும்பி அவளை நோக்கி கை நீட்டியது அந்த உருவம்.

முதுகுத்தண்டு சில்லிட்டுப்போக, உடலெங்கும் ஒரே நேரத்தில் பல நூறு அதிர்வலைகள் பாய, ரத்தம் உறைந்துபோகும் அந்த அதிர்ச்சியில் அலறியே விட்டிருந்தாள் மாதங்கி. அவள் அப்படியே பின்நோக்கி நகர....

அந்த உருவம் அவளை நோக்கி முன்னேற அதிர்ந்து அலறி துடித்து பின்னால் சாய்ந்து விழப்போனவளை அப்படியே தாங்கிக்கொண்டான் முகுந்தன். கொஞ்சம் இடைவெளி விட்டு அவள் பின்னாலேயே நடந்து வந்த முகுந்தன்

அவன் அங்கே வந்த மாத்திரத்தில் ஏமாற்றத்துடன், கோபத்துடனும் அந்த உருவம் சரேலென நீருக்குள் பாய்ந்தது.

அதே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த பூனை ரயிலில் அடிப்பட்டு அப்படியே தூக்கி எறியப்பட்டு 'தொம்' மென்ற சத்தத்துடன் அவள் அருகில் வந்து விழுந்தது.

திடுக்கிட்டு குலுங்கி திரும்பினாள் மாதங்கி உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் நடுக்கம் மட்டுமே இருக்க , அவனை பார்த்ததும் நின்று போயிருந்த அவள் இதயம் மறுபடியும் துடிக்க துவங்கியது போல் உணர்ந்தாள்,

அதிர்ச்சியின் எல்லையில் நின்றவளை ஆதராவாய் தாங்கிக்கொண்டு சொன்னான்  'ஒண்ணுமில்லைடா. பயப்படாதே. பூனைதான்.' ட்ரைன்லே அடிப்பட்டிருக்கும் போலிருக்கு.

இ...இல்... அந்த .. அங்க..பே. பேய்... கிணற்றை நோக்கி கை காட்டினாள் மாதங்கி.

எங்கே....? கண்களை சுழல விட்டான் அவன்.

கிணத்திலே...

கிணற்றின் அருகே சென்று உள்ளே பார்த்தவனின் கண்களில் இருட்டை தவிர வேறெதுவுமே தென்படவில்லை.

பொதுவாக அவனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைதான்.

‘ஒண்ணுமில்லையேமா இங்கே. நீ பூனையை பார்த்து பயந்திருப்பே. ஊரிலே இருக்கறவங்க சொல்ற கதையெல்லாம் நம்பி பயப்படாதே நீ. நான் கொஞ்ச நேரம் முன்னாலே வரைக்கும் இங்கேதான் உட்கார்ந்து இருந்தேன் அப்படி எதுவுமே இல்லை இங்கே’ என்றான் அவன்.

எதையுமே யோசிக்கும் நிலையில் இல்லை அவள். தலை சுற்றியது. உடல் கனத்து நடக்கவே முடியாதது போல் உணர்வு. கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தாள் அவள்.

‘எனக்... எனக்கு ரொம்.... பய....மா  என். னை வீட்டிலே விட்டு...ட...’ தடுமாறியது அவள் குரல்.

துடித்துதான் போனான் போனான். ‘அய்யோ... என் கண்மணியே!!!!!!  நான் விளையாட்டு தனமாய் உன்னை அழைத்தது இப்படியா முடிய வேண்டும்?

‘ஒண்ணும்மில்லைடா. ஒண்ணுமில்லை... நான் இருக்கேன். உன்னை வீட்டிலே விட்டுடறேன் வா.

அவள் தோளை அணைத்து தாங்கி அழைத்து சென்றான் முகுந்தன்.

அவள் நகர, நகர ,அந்த கொலுசொலி தன்னை விட்டு விலக விலக துடித்தது அந்த உருவம்.

‘இந்த கொலுசொலி கேட்காதா என எத்தனை நாள் தவமிருந்தேன். இன்றைக்கு இந்த கொலுசொலி என்னை அழைத்ததே.!!!!!! மறுபடி அது என்னை விட்டு போகிறதே.!!!!!

கிணற்றை விட்டு வெளியே வந்தது அது. என் உருவத்தைப்பார்த்து பயப்படுகிறாளே அவள். அய்யோ நான் என்ன செய்வேன் ?

அங்கே கிடந்தது அந்த அடிப்பட்ட பூனை. அடுத்த நொடி சரேலென மேலெழும்பிய அந்த புகை வடிவம் அந்த பூனைக்குள் பாய்ந்தது.

சில நொடிகளில் உடலில் இருந்த காயங்கள் ஆறிப்போக சிலிர்த்து எழுந்தது அந்த பூனை.

அவர்கள் இருவரும் நடக்க நடக்க அவர்களை மெதுவாய் பின் தொடர்ந்தது அது.

அவள் வீட்டை அடைந்தனர் இருவரும். முன் பக்க கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது

பின் பக்க கதவு திறந்துதான் இருக்கு’’ மெல்ல சொன்னாள் அவள்

வீட்டில் மற்றவர்கள் எல்லாரும் உறங்கிவிட்டிருந்தனர். அவள் இருக்கிறாளா? உறங்கினாளா? என்ற கவலைக்கூட வீட்டில் யாருக்கும் எப்போதும் இருந்தது இல்லை.

பின் பக்க கதவு வழியே வீட்டுக்குள் நுழைந்தனர் உள்ளே நுழைந்தும் பின் பக்க கதவை சாத்தினான் முகுந்தன். வீட்டுக்குள் நுழைய முடியாமல் அங்கேயே நின்றது அந்த பூனை.

அவளது அறைக்குள் சென்றனர் இருவரும்.  அங்கே சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டாள் மாதங்கி.

சின்ன பெருமூச்சு எழுந்தது அவனிடம் ‘ நான் கிளம்பட்டுமா மாதங்கி ? தூங்கிடுவியா நீ?

ம் .மெல்ல தலையசைத்தாள் அவள்.

வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் நீ என்னுடனே இருந்துவிடேன் என்று அவள் மனம் ஏனோ அவனிடம் கெஞ்சத்தான் செய்தது.

அவனுக்கு அவள் குடும்ப நிலைமை தெரியும் என்பதால் அங்கே தங்கி அவளுக்கு பிரச்சனைகளை கொடுக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. அதே நேரத்தில் அவளை தனியே விட்டு செல்லவும் மனமில்லை,

ஏதோ யோசித்தவன் ‘சரி நீ தூங்கு நான் அப்புறம் கிளம்பறேன்  அதுவரைக்கும் இங்கேயே இருக்கேன்’.

நிஜமாவா..?

ம்..... என்றான் அவன்.

வேகமாய் தலையசைத்தவள் சட்டென பாயை விரித்துப்படுத்துக்கொண்டாள்

வெறிப்பிடித்ததை போல் வீட்டை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தது அந்தப்பூனை..

சுவற்றில் சாய்ந்துக்கொண்டு தரையில் அமர்ந்தான் அவன். ‘கட்டில் கூட இல்லாத அறை அவளது. அவள் தந்தை எத்தனை வசதிப்பபடைத்தவர் என்றும் கேள்விப்படிருக்கிறான் அவன். எல்லாம் அவளை சுற்றி இருப்பவர்கள் செய்யும் வேலை’

கவலைப்படாதே கண்மணி நிச்சியாதார்த்தம் முடிந்த கையொடு உனக்கு தாலிக்கட்டி அப்படியே என்னுடன் கூட்டி சென்று விடுகிறேன்.

கண்களை இறுக மூடிக்கொண்டுப்படுத்தாள் அவள். அவன் அருகிருக்கும் தைரியத்தில் சில நிமிடங்களிலேயே உறங்கிப்போனாள் மாதங்கி.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.’ ச்சே! இன்று நிறையவே தவிக்க வைத்துவிட்டேனோ என் கண்மணியை. நாளை ஒரு பரிசுடன் அவளுக்கு சொல்கிறேன் நான் யாரென்று.

அவள் கள்ளமில்லா முகம் அவனை ஈர்த்தது..

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

அவள் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவள் கன்னத்தில் மென்மையாய் இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் முகுந்தன்.

பின் பக்க கதவை சாத்திவிட்டு நகர்ந்தான்.  அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தது அந்த பூனை.

அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து அவள் அறை ஜன்னலின் மீது மெது மெதுவாய் ஏறியது அது.

சில நொடிகள் அந்த ஜன்னலின் மீதே அமர்ந்திருந்தது  காற்றில் ஆடிக்கொண்டிருந்த அந்த திரைச்சீலைகளின் பின்னாலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்குள் குதித்தது. அது. மெல்ல நடந்து உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றது.

அதன் கண்களில் சிவப்பேற அவளையே வெறித்துப்பார்த்தது அது. 

தொடரும்...

Episode # 01

Episode 03

{kunena_discuss:781}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.