(Reading time: 19 - 37 minutes)

 

ப்படியா? என்றான் நிதானமாக. எதிலேடா போனே ஹாஸ்பிடலுக்கு.?

பொய் சொல்லக்கூட தனி திறமை வேண்டுமோ? தெரியவில்லை. 'ஏன்? என் ஸ்கூட்டிலே தான்' கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லி விட்டிருந்தாள் அவள்.

அவனுக்குள்ளே ஏதோ ஒன்று சட்டென  நொறுங்கியது போலே ஒரு உணர்வு.

சில நொடி மௌனம். அதன் பின் மெதுவான குரலில் சொன்னான் அவன் 'என்கிட்டே பொய் சொல்றியே பொண்டாட்டி'

மொத்தமாய் குலுங்கி நிமிர்ந்தாள் அபர்ணா.

க...கண்ணா ...

நான் உன் ஹாஸ்டல் வாசலிலே நிக்கறேன்டா. உன் ஸ்கூட்டி என் கண் முன்னாடி இருக்கு.

இல்லைபா..... அது.....

ப்ளீஸ் அபர்ணா. வர பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு நேரடியா சொல்லிடு. பொய் சொல்லாதே.

பிடிக்காம எல்லாம் இல்லை கண்ணா....நான்

'இன்னைக்கு நீ நம்ம வீட்டுக்கு வரணும்னு எனக்கு ஒரு ஆசை. இன்னைக்கு எது நடந்தாலும் அது வருஷம் பூரா நிலைச்சு நிக்கும்னு ஒரு நம்பிக்கை. அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன். அதுக்கு மேலே வர்றதும் வராததும் உன் இஷ்டம். நான் கிளம்பறேன்டா.' சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டு காரை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டிருந்தான் பரத்.

கைப்பேசியையே பார்த்தபடி துவண்டு போய் அமர்ந்தாள் அபர்ணா. வருத்தமும் ஆற்றாமையுமாக ஒலித்த அவன் குரல் அவளை திரும்ப திரும்ப படுத்தியது. 'என்கிட்டே பொய் சொல்றியே பொண்டாட்டி'

எத்தனை முயன்றும் அவளால் தன்னை சமாதான படுத்திக்கொள்ள முடியவில்லை. திடீரென்று பரத்  அவளை  விட்டு வெகு தூரம் போய் விட்டதை போல் ஒரு எண்ணம். 

அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி. அழைத்தது விஷ்வா.

அம்மாவை பார்க்க கிளம்பறேன்டா.

ம். சரி விஷ்வா என்றாள் அவள்.

என்ன? ம். சரி? அவ்வளவுதானா?

புரியலை வேறே என்ன சொல்லணும் ?

எல்லாம் நல்லபடியா நடக்கும். சந்தோஷமா போயிட்டு வான்னு சொல்லு அப்பூ.

தனது மன அழுத்தங்களை ஒரு நிமிடம் ஒதுக்கி விட்டு நிறைவான மனத்துடன் சொன்னாள் எல்லாம் நல்லபடியா நடக்கும். சந்தோஷமா போயிட்டு வா விஷ்வா.

தேங்க்ஸ்டா என்றான். போயிட்டு வந்து உன்னை கூப்பிடறேன் சரியா?

சரி விஷ்வா. அழைப்பை துண்டித்து விட்டு, தனது உள்ளங்ககைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்தாள் அவள்

தனது வீட்டிலிருந்து கிளம்பி விட்டிருந்தான் விஷ்வா. பெசன்ட் நகரை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தது அவனது வண்டி.

வீட்டை அடைந்திருந்தான் பரத். விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர துவங்கி இருந்தனர். எல்லாரையும் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார் மைதிலி. உதடுகளில் புன்னகை ஓடிக்கொண்டிருந்த போதும், அவர் எண்ணங்கள் மட்டும் எங்கோ தொலைந்து தொலைந்து திரும்பிக்கொண்டிருந்தன.

பரத்தின் வீட்டை சுற்றி இருந்த அந்த அழகான பெரிய தோட்டத்தில் ஏற்பாடு ஆகியிருந்தது விருந்து. தாத்தா, அஸ்வினி உட்பட எல்லாருமே தோட்டத்தில் இருந்தனர்.

இந்துவால் மட்டும் இரண்டு நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. விஷ்வாவுக்காகவே தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக்கொண்டிருந்தாள் அவள்.

இளம் நீல நிற புடவையும், அதற்கேற்றார் போல் காதில் மின்னிய நீல நிற கல் தோடும், க்ளிப்பிற்குள் அடங்கி இருந்த கூந்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த மல்லிகை சரமும், அவனுக்காகவே அலைப்பய்ந்துக்கொண்டிருந்த கண்களுமாய் சுற்றிக்கொண்டிருந்தாள் அவள்.

வருகிறேன் என்றானே விஷ்வா. வருவானா? வந்தே விடுவானா? வந்து விட்டால் என்னவாகும்? சந்தோஷமும், படபடப்பும் மாறி மாறி அவளை சரியாக சுவாசிக்க கூட விடாமல் செய்துக்கொண்டிருந்தது.

வீட்டு வாசலுக்கு வந்து நின்றான் விஷ்வா. வண்டியை நிறுத்தி விட்டு கையில் ஸ்வீட் பாக்சுடன் கீழே இறங்கினான். வீட்டின் கேட் பெரிதாக திறந்தே இருந்தது . இவ்வளவு தூரம் வந்து விட்டவனால் ஏனோ சட்டென்று உள்ளே நுழைந்து விட முடியவில்லை.

ஏதோ ஒரு தயக்கம் தடுக்க மனதை அழுத்திய பழைய நினைவுகளுடன் வீட்டையே பார்த்தபடி அவன் நின்று விட, அடுத்த சில நொடிகளிலேயே முகம் நிரம்பிய மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி ஓடி வந்து விட்டிருந்தாள் இந்துஜா.

புன்னகையுடன் சொன்னாள் 'வா விஷ்வா'

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அவன் உதடுகளிலும் புன்னகை ஓட, அவனே எதிர்பார்க்காத நொடியில் 'உள்ளே வா விஷ்வா' என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தாள் இந்து.

யார் கண்ணிலும் படவில்லை அவர்கள் இருவரும். 'அம்மா எங்கே?' என்றபடியே அவளுடன் நடந்தான் விஷ்வா.

'அவங்க எல்லாம் தோட்டத்திலே இருக்காங்க. நீ முதல்லே உள்ளே வா.' அவனையும் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்.

தெரியவில்லை அவளுக்கு. தோட்டத்திற்கு சென்றால் என்ன நடக்கும் என்று அவளுக்கு புரியவே இல்லை. அதற்கு முன்னால் அவன் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் இருந்து விடட்டுமே என்ற தவிப்பு அவளுக்கு.

பல நாட்களுக்கு பிறகு அந்த வீட்டு கூடத்தில் வந்து நின்றான் அவன். பெரிதாக எந்த மாற்றமும் இல்லை அந்த வீட்டில்.

அவன் கண்கள் அந்த கூடத்தின் ஒவ்வொரு மூலையையும் காதலுடன் வருடின. ஒவ்வொன்றும் அவன் ஓடி, சிரித்து ஒளிந்து விளையாடிய கதைகளை அவனுக்கே சொல்லின.

உன் ரூமை பார்க்கலாம் வா விஷ்வா என்றபடி அவனை இழுத்துக்கொண்டு மாடி ஏறினாள் இந்து.

என் ரூமா?

ஆமாம். அது எப்பவுமே உன் ரூம் தான் விஷ்வா. நான் இப்போ அதை திருடி என் ரூம்னு சொல்லி வெச்சிருக்கேன். நீ திரும்ப வரும்போது அதை உன்கிட்டேயே கொடுத்திடனும்னு. கண் சிமிட்டி சிரித்து சொன்னாள் அவள்.

உச்சக்கட்ட சந்தோஷத்துடன் அவனது அறையை நோக்கி அவள் நடக்க, அவளுடனே நடந்தவனை வியப்பு மொத்தமாக ஆட்க்கொண்டிருந்தது..

என் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு தேவதையா இவள்? இவள் அன்பிற்கு பதிலாக நான் அவளுக்கு என்ன தந்து விட முடியும்? என் அன்பை தவிர........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.