(Reading time: 19 - 37 minutes)

 

றைக்குள் நுழைந்தனர் இருவரும். கதவை மூடி விட்டிருந்தாள் இந்துஜா. அவன் சிறிது நேரம் இங்கேயே இருக்கட்டும் என்று தோன்றியது அவளுக்கு.

'உட்காரு விஷ்வா.' அவனை கட்டிலில் அமர வைத்தாள் அவள். அறையை சுற்றி பார்வையை சுழல விட்டான் விஷ்வா.

'பாரு விஷ்வா. ரூமை அப்படியே தான் வெச்சிருக்கேன். சின்ன வயசிலே நீ ஒட்டி வெச்ச சச்சின் டெண்டுல்கர் படத்திலேர்ந்து, உன் கிரிக்கெட் பேட் வரைக்கும் எல்லாம் அப்படியே இருக்கு பார்த்துக்கோ பா.' மனம் நிறைந்த சிரிப்புடன் சொன்னாள் அவள்.

பார்க்கவில்லை அவன். அவளை தவிர வேறெதையுமே பார்க்க தோன்றவில்லை அவனுக்கு.

அவள் ஏதேதோ பேசிக்கொண்டே போக, எதுவுமே காதில் விழாதது போல், இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான் விஷ்வா.

ஒரு முறை மொட்டு விட்டு மலராமல் போன வலியில், மறுபடி மலர்ந்து விட தயங்கி, பயந்து ஒளிந்துக்கிடந்த அந்த மொட்டு அவனே அறியாமல் அவனுக்குள்ளே சட்டென மலர்ந்தே விட்டிருந்தது.

ஏதேதோ பேசிக்கொண்டே போனவள் ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி அவன் பக்கம் திரும்ப அவனது பார்வையில் கொஞ்சம் தடுமாறிப்போனவளின்  முகத்தில் கொஞ்சமான வெட்க ரேகைகள்..

அதற்கு மேல் ஏனோ வார்த்தைகள் வெளிவரவில்லை அவளுக்கு,

புன்னகையுடன் எழுந்து அவள் அருகில் வந்து நின்றான் விஷ்வா. 'நிலா...பொண்ணு.... உனக்கு வெட்கமெல்லாம் பட தெரியுமாடா? கொஞ்சமாக குனிந்து அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

சுவாசம் தடுமாறியது அவளுக்கு. 'சும்மா இரு விஷ்வா.' அழகாக தலை குனிந்து சிரித்தாள் அவள். 'என்னமோ பேசிட்டிருந்தேன் எல்லாம் மறந்து போச்சு'. மலர்ந்து சிரித்தான் அவன்.

சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்தவன் 'எம் மேலே இப்படி உயிரையே வெச்சிருக்கியேடா'. என்றவன் ஏதோ தோன்ற அங்கே கட்டிலின் மீதிருந்த ஸ்வீட் பாக்சை அவளிடம் எடுத்து அவளிடம் நீட்டினான். எடுத்துக்கோ எல்லாம் உனக்குதான்.

'ஹாப்பி நியு இயர்டா நிலாப்பொண்ணு. இந்த வருஷம் நீ நினைச்சது எல்லாம் நடக்கணும்.

புன்னகையுடன் வாங்கிக்கொண்டு சேம் டு யூ விஷ்வா என்றவள் 'நான் நினைக்கறது ஒண்ணே ஒண்ணுதான். அது நடந்திடுமா விஷ்வா?' மெல்ல கேட்டாள் இந்து.

அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று புரிய பதில் சொல்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

சொல்லு விஷ்வா. நடக்கும் தானே.? எப்பவும் நீ என் கூட இருப்பேதானே.?

அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள். மனதிற்குள் பரத் வந்து போக, நான் ஆசைப்படுவது சரிதானா? என்று கூட ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. அதே நேரத்தில் கண்ணெதிரே அவன் அன்புக்காக மட்டுமே ஏங்கி நிற்கும் அவள் மனதையும் முறித்துப்போடும் தைரியம் வரவில்லை அவனுக்கு.

கண் மூடி ஆழமாக சுவாசித்து, ஒரு தீர்மானத்துக்கு வந்து 'நடக்கும் விடுடா. வர்றது வரட்டும். எது நடந்தாலும் உன்னை நான் விட மாட்டேன். தைரியமா இரு.' அழுத்தம் திருத்தமாக சொன்னான் விஷ்வா.

மகிழ்ச்சியின் எல்லைக்கு போனவளாக கையிலிருந்த இனிப்பில் ஒன்றை எடுத்து அவன் வாயில் திணித்தாள் இந்து. 'இது போதும் விஷ்வா. எனக்கு'

பின்னர் அவன் கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் 'வா விஷ்வா கீழே போய் எல்லாரையும் பார்க்கலாம்.  எது நடந்தாலும் சரி. ரெண்டு பெரும் சேர்ந்து face பண்ணுவோம் வா.

ருவரும் கீழே இறங்கி தோட்டத்துக்குள் நுழைந்தனர். பலர் சாப்பிட துவங்கி இருக்க, கையில் தட்டுடன் உலவிக்கொண்டிருந்தனர் அனைவரும்.

முதலில் எதிர்பட்டவர் தாத்தா. அவர் எதிரில் நின்றனர் இந்துவும்,விஷ்வாவும்.

சில நொடிகள் திகைத்துப்போய் நின்றவர், விஷ்வாவையும் அவன் தோளை உரசியபடி நின்ற இந்துவையும் மாறி மாறி பார்த்தார்.

ஏதோ புரிந்தது போலே இருக்க, மெல்ல மெல்ல புன்னகை எழுந்தது அவரிடத்தில். எப்படியோ எல்லார் மனதிலும் இருக்கும் விரிசல் சரியாகி விட்டால் போதுமென்றே தோன்றியது அவருக்கு.

'ஹாப்பி நியூ இயர் தாத்தா' என்றவன், சட்டென அவர் பாதம் தொட்டு நிமிர, அவன் முகத்தை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டார் அவர் 'நல்லா இரு டா ராஜா. நல்லா இரு.' எத்தனை நாள் ஆச்சுடா உன்னை பார்த்து. என்றார் அவர்.

'இனிமே அடிக்கடி பார்க்கலாம் தாத்தா' என்று புன்னகைத்தவன் 'அம்மா எங்கே தாத்தா?' என்றான்.

அந்தப்பக்கம் எங்கேயோ இருந்தா பாரு என்றவர், இப்பவே போய் பார்க்க போறியாடா? எல்லாரும் கிளம்பட்டுமே.  ஏதாவது பிரச்சனை வரப்போகுதுடா என்றார்.

'இல்லை தாத்தா. நான் போய் பார்க்கத்தான் போறேன். நடக்குறது நடக்கட்டும். எத்தனை நாள் இப்படியே இருக்கறது.' என்றபடி நடந்தான் விஷ்வா.

அடுத்து கண்ணில் பட்டது அஸ்வினி. அவள் முதுகுக்கு பின்னால் சென்று நின்று 'ஹாப்பி நியூ இயர் தங்கா...ச்சி' என்றான் விஷ்வா.

அவன் குரல் கேட்டு வியந்து திரும்பினாள் அஸ்வினி.

அடப்பாவி.!!!!! என்றாள் அவள். இங்கேயே வந்துட்டியா? என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறே. என்ன தைரியம் உனக்கு.?

ஹை! இது நல்லாருக்கே என்றாள் இந்து. நீ வரலாம். உங்க அண்ணன் வரக்கூடாதா?

'அது சரி' என்றபடி விஷ்வாவின் அருகே உரசியபடியே நின்ற இந்துவை ஏற இறங்க பார்த்தாள் அஸ்வினி. இது எத்தனை நாளா நடக்குது.?

இது ரொம்ப நாளா நடக்குது. என்றாள் இந்து. உனக்கு இன்னைக்கு தான் தெரியும் .

மலர்ந்து சிரித்தபடியே விஷ்வாவை பார்த்தாள் அஸ்வினி. அவன் முகத்தில் நிறையவே சந்தோஷம். அவளை பார்த்து புன்னகைதான் விஷ்வா.

'எப்பவும் இப்படியே இருந்திடு விஷ்வா நீ 'நிறைவாக சொன்னாள் அஸ்வினி.

மெல்ல நிமிர்ந்து தனது அம்மாவை தேடி கண்களை சுழற்றினான் விஷ்வா.

சற்று தூரத்தில் நின்றிருந்தார் அவர். அவர் அருகில் இருந்த ஒரு சில விருந்தினர்களுடன் பேசியபடி நின்றிருந்தார் அவர். அவர் அருகிலேயே நின்றிருந்தான் பரத், பேசிக்கொண்டிருந்த மைதிலியின் மனம் அலைப்பாய்ந்துக்கொண்டேதான் இருந்தது.

மாலையிலிருந்து அவருக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு வந்துக்கொண்டே இருந்தன அந்த வார்த்தைகள் 'அம்மா சொல்றதை கேட்க மாட்டே உனக்கு அம்மா கையாலே சாப்பாடு மட்டும் வேணுமா? நீ பரிகாரத்துக்கு ஒத்துக்கற வரைக்கும் என் கையாலே உனக்கு சாப்பாடு போட மாட்டேன்.’

அது அவர் விஷ்வாவிடம் அவன் வீட்டை விட்டு கிளம்பும் முன் கடைசியாக பேசிய வார்த்தைகள். மாலையிலிருந்தே அவர் மனமெங்கும் விஷ்வாவின் ஞாபகம். ஒரு நொடி ஏனோ சட்டென்று தோன்றியது. ‘என் மகன் என் முன்னால் திடீரென்று இப்போது வந்து நின்றால் எப்படி இருக்கும்’.?

அதே நொடியில். சரியாய் அதே  நொடியில் அவர்கள் அருகில் வந்து நின்றான் விஷ்வா.

எல்லார் கண்களும் அவன் பக்கம் திரும்ப கற்சிலையாகிப்போனார் மைதிலி. வந்து விட்டானா? என் மகன் விஷ்வாதானா அது?. எப்படி வந்தான்? நான் நினைத்தவுடன் எப்படி வந்து நின்றான் இவன்.?

கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் பரத்.. அவன் கண்களில் தீவிரம். அதே நேரத்தில் அவன் மனதில் அபர்ணாவின் முகம் வந்து போனது. அன்று மாலையின் நிகழ்வுகள், 'நா..ன்.. பார்டிக்கு... வர முடியாது...' தயங்கி தயங்கி ஒலித்த அவள் குரல், அவள் சொன்ன பொய்,....எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வர மனதில் தனித்தனியாக சிதறிக்கிடந்த கேள்விப்புள்ளிகளை இணைத்துக்கொண்டிருந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.