(Reading time: 19 - 38 minutes)

தே தினத்தில், தனது பிறந்தநாளுக்காக கணவர் வாங்கி தந்த, ஜாதி மல்லி நிற புடவையை அணிந்து மாடியில் இருந்து இறங்கி வந்தார் அந்த பெரியவீட்டின் மகாராணி ஜானகிதேவி. வயது 48 என்பதை அவரே சொல்லாதவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அழகான தோற்றம் கொண்டவர் .. மனதவிலும் இளமையானவர் தான் .. அதற்கு காரணம் அவரின் அன்பான குடும்பம் தான் என்று சொன்னாலும் மிகையாகாது..

 எப்போதும் போல அன்றும், தனக்கொரு நல்ல குடும்பத்தை அமைத்து தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த பூஜை அறையை நோக்கி நடைபோட்டார் ஜானகி. அவருக்கு முன்பே, அவர்களது வீட்டுத் தோட்டத்து பூக்களை பறித்து வந்து பூஜைக்கு தயாராய் வந்து நின்றாள்  சைந்தவி. அந்த வீட்டின் மூத்த மருமகள் என்று பெருமையாய் சொல்வதற்கான அத்தனை லட்சணங்களும் கொண்டவள் . திருமணம் ஆகி வந்த ஒரே வருடத்தில் மாமியார் மாமனாரின் மனம் அறிந்து நடப்பவள் என்று பெயர் பெற்றவள் .. தற்பொழுது அந்த வீட்டின் முதல் வாரிசை சுமைந்து கொண்டு இருக்கும் ஐந்து மாத கர்பிணிப்பெண் ..

" பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை "

" தேங்க்யு சைந்தும்மா " என்று அவளது நெற்றியில் முத்தமிட்டவரின் முகம் சட்டென கருத்தது ..

" என்னாச்சு அத்தை ?"

" எத்தனை தடவை சொல்றது சைந்து, நெற்றி வகிட்டில் திலகம் இடாமல் இருக்கக் கூடாதுன்னு ?" என்று அதட்டியவருக்கு அதற்கான காரணம் ஒன்றும் தெரியாமல் இல்லை .. " எங்க உன் புருஷன் ?" என்று அவர் கேட்கவும், அவரின் அதட்டலுக்கு எதிரொலியாய் ஓடி வந்து நின்றான் சுபாஷ்..

" சாரி மம்மி .. ..சாரி சைந்து  நான்தான் ...என்னால லேட் " என்று வார்த்தையை கோர்க்க தெரியாமல் விழித்தவன், பூஜை அறைக்குள் நுழைந்து சைந்தவிக்கு திலகமிட்டான் .. இது சைந்தவியின் ஆசை .. அவர்கள்  திருமணம் ஆன தினத்திலிருந்து இன்று வரை அவன்தான் அவளுக்கு நெற்றி வகிட்டில் திலகமிட வேண்டும் . வேலைக்  காரணமாக அவன் வெளியூர் சென்றால் கூட அவனிடம் போனில் பேசிவிட்டுதான் திலகமிட்டு கொள்வாள் சைந்தவி .. கணவன்- மனைவி இருவரின் அன்பை பார்த்து நெகிழ்ந்து தான் போனார் ஜானகிதேவி .. பின்ன, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணமானவர்கள் இப்படி மனம் ஒத்து வாழ்வது ரசிக்க கூடிய காட்சி அல்லவா ? மனைவியின் பார்வையின்  பொருள் அறிந்து, அவளுடன்  இணைந்து நின்று தாயாரின் பாதம் பணிந்து ஆசி பெற்றான் சுபாஷ் ..

" நல்ல இருங்க கண்ணா ரெண்டு பேருமே ... ஆமா உங்க மாமா எங்க ?"

" அதுக்கு முன்னாடி என் செல்ல மம்மிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான் சுபாஷ் .. அவனுக்கு போட்டியாய்  மறுகன்னத்தில் முத்தம் பதித்தாள்  சைந்தவி...

" இப்போ பதில் சொல்றேன் மம்மி .. அப்பாதானே ? அவரின் காதல் மனைவிக்கு பிறந்தநாள் இல்லையா ? அதை நாம மட்டும் கொண்டாடினால் அவருக்கு தூக்கம் வருமா ? அதான் நம்ம வீட்டுல வேலை செய்யுற எல்லாருக்கும் ஒரு மாதம் சம்பளத்தை போனஸா  தந்துகிட்டு இருக்காரு .. வாங்க காட்டுறேன் " என்று தாய், தாரம் இருவரின் தோளிலும்  கை போட்டுக் கொண்டு நடந்து வந்தான் சுபாஷ் .. ஆனால் அவர்கள் கண்ட காட்சியோ வேறு ..

நூல் வேஷ்டியும், பனியனும் அணிந்து கொண்டு பணியாட்களோடு நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் ஜானகிதேவியின் கணவர் ரகுராமனுடன் வழக்காடி கொண்டிருந்தான் ..

" இது பாரு தம்பி உன்னை பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்கு " - ரகுராமன்

" அதுக்காக வீட்டு வேலை செய்ய கூடாதுன்னு இருக்கா ? "

" அப்படி இல்லை தம்பி ..எங்க வீட்டுல தேவைக்கு அதிகமாவே பணியாட்கள் இருக்காங்க .. உன்னை எல்லாம் வேலை சேர்த்துக்க முடியாது "

" அதைதான் நானும் கேட்குறேன் ..இவ்ளோ பேரு இருக்குற வீட்டில் எனக்கொரு வேலை போட்டு தந்தாதான் என்னவாம் ? "

" என்னடா சுபாஷ் இதெல்லாம் ? " என்று அவர்களை சுட்டிக்காட்டி கேட்டார் ஜானகி ..

" இன்னைக்கு இந்த நாடகம் போல .. இருங்க மம்மி ..என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் " என்றான் அவன் புன்னகையோடு ..

" இதுக்கு மேல பேசிகிட்டு இருந்தா சரி வராது ... ஸ்டார்ட் மியுசிக் " என்ற அந்த இளைஞன்  தன் வசீகரக் குரலாலேயே பாட ஆரம்பித்து விட்டான் ..

மாடி மேல மாடி கட்டி

கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே

ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன் சீமானே

ஆளு அம்பு சேனை வெச்சு 

காரு வெச்சு போரடிக்கும் கோமானே

ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன் கோமானே

ரகுராமன் வேலை வேணும் .. ரகுராமன் வேலை வேணும் ...ரகுராமன் வேலை வேணும்

என்று உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தவனின் முதுகிலே இரண்டி வைத்தார் ஜானகி ..

" டேய் .. என்னடா அப்பாவை பேரு சொல்லி கூப்டுற ? "

" கூப்பிடத்தானே என் தாத்தா பாட்டி இவருக்கு பேரு வெச்சாங்க மை டியர் பேர்த்டே  பேபி " என்று அவரின் கன்னத்தை கிள்ளினான் அவன் ..

" ஆனாலும் சந்தோஷ் .. சும்மா சொல்ல கூடாது இந்த கெட் அப்புல சும்மா கலக்குறிங்க " - சைந்தவி ..

" தேங்க்ஸ் அண்ணி "

" ஆமாம்டா ... அப்படியே தோட்டக்காரர் மாதிரியே இருக்கே " என்று வாரினான் சுபாஷ் ..

" டேய் அண்ணா .. ஏதோ இன்னைக்கு நம்ம ஜானு குட்டிக்கு பிறந்தநாள் என்பதால உன்னை சும்மா விடுறேன் " என்றவன் " ஜானுகுட்டி " என்று அழைத்ததற்காக ரகு துரத்தவும், இன்னொரு புறம் சுபாஷ் துரத்தவும் அவர்களுக்கு போக்கு காட்டி ஓடினான் .. அவனது அசுர வேக ஓட்டமும், தாவலும், கணீர் சிரிப்பும் கண்டு அவனுக்காக பெருமூச்சு விட்டு  கொண்டார் ஜானகி ..

" ஹா ஹா என்ன அத்தை இப்படி மூச்சு விடுறிங்க ? "

" இந்த பையனை நெனச்சு தான் சைந்தும்மா .. ஒரு இடத்தில் அடங்கி இருக்கானா பாரேன் ? ஒரு படத்தில் சொல்லுவாங்களே 'இதை இட்லின்னு சொன்னா சட்டினியே நம்பாதுன்னு ' அந்த மாதிரி இவனுக்கு 24 வயசுன்னு சொன்னா பெத்த தாய் நானே நம்ப மாட்டேன் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.