(Reading time: 40 - 80 minutes)

ம்மா விரும்பும் ஒன்றை இவன் ஏன் நடக்காது தடுக்க வேண்டும்...? இவன் பார்த்துக்கொள்ள மாட்டானா இவன் வேரியை. அவளுக்கு கர்ப்பம் சம்பந்தமான எந்த சிக்கல்களும் இல்லை என்றுதான் மருத்துவரும் தெரிவித்திருக்கிறார். 

அதோடு தன் தாய்தான் என்றாலும் கூட அடுத்தவர் எவரிடமும் தன் மனைவியின் பொறுப்பை விட்டுத்தர இவன் தயாராயில்லை.

கடவுளுக்கு அடுத்தபடியாய் தன்னவளுக்கு அத்தனையும் செய்வது நானாயிருக்க வேண்டும்... மை ஸ்வீட்டி பை... மனதிற்குள் மனைவியை சீராட்டிக் கொண்டவன் அம்மாவை சந்தோஷமாய் ஈரோப் சென்றுவர சொன்னான்.

காலையில் எழுந்த உடன்  வேரி கேட்டது இதைத்தான்.

“அத்தைட்ட எப்ப சொல்லப் போறீங்க...? காலைல சீக்கிரமே எழுந்திருப்பாங்கன்னு சொன்னீங்கள்ல... நான் தூங்கிறப்பவே சொல்லிட்டீங்களோ? எப்ப வர்றாங்க...?...நிறைய நாள் நம்ம கூட  இருக்க சொல்லிருக்கீங்கதானே....பெரியவங்க கூட இருந்தா இந்த டைம்ல ரொம்ப தைரியமா இருக்கும்... அவங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு நிறைய தெரிஞ்சி வச்சிருப்பாங்க... ஃபர்ஸ்ட் த்ரி மன்ந்த்ஸ் ரொம்ப டெலிகேட் பீரியட்னு சொல்றாங்க...அது முடியுற வரையாவது இருக்க சொல்லுங்க.... என்னட்ட பேசனும்னு சொன்னாங்களா...? இல்ல நேர்ல வந்தே பேசிப்பாங்களா...? “

பரபரத்தாள்.

பாசமாய் அவளைப் பார்த்தான் கவின்.

மௌனமான அவனது பார்வையே வேரிக்கு விஷயத்தை விளக்கிவிட்டது. மோப்ப குளையும் அனிச்சத்தைவிடவும் வேகமாக அவன் பார்வையிலேயே வலியோடு முகம் கவிழ்ந்தாள்.

“உண்மையிலேயே அவங்களுக்கு என்னை பிடிக்கலைதானே...”

நடந்ததை சொல்லிமுடித்தான் கவின்.

அவனது சந்தோஷத்திற்காக சம்மதமாக தலையை ஆட்டி வைத்தாலும் மனதிற்குள் அடுத்த உறுத்தல் பதிவு.

எத்தனைதான் கவின் இவளைப் பார்த்துக்கொள்வான் என்றாலும், ஒரு அனுபவபட்டவர் உடனிருப்பது அதற்கு ஈடாகுமா?

தன் சொந்த குழந்தையின் நலத்தைவிட அவன் அம்மா ஈரோப் டூர் போவது அவனுக்கு முக்கியமாக படுவது சரியா?

ஏதோ ஒரு வகையில் இந்த குழந்தை கவினுக்கு மிக முக்கியமான ஒன்றாக படவில்லை போலும்...

உண்மையில் விரும்பி குழந்தை வைத்துக் கொண்டிருந்தால் இதற்குள் அவன் குதித்து கொண்டாடி கொட்டடித்து அறிவித்து  இருக்க மாட்டானா?

முதலிலேயே இப்பொழுது குழந்தை வேண்டாம் என்றானே...கருவுற்ற செய்தியை சொன்ன போதும் இவள் எதிர்பார்த்தது போல் அவன் ஆர்ப்பரிக்கவில்லையே....

மருத்துவமனையிலும் உடனே மருத்துவரை சந்திக்க வழி இருந்தும்... மருத்துவரை சந்திக்க துரிதபடாமல் காத்திருப்போம் என்றானே... அதன்பின்பும் குழந்தைக்கென இவள் சொன்ன அனைத்தையும் அசட்டை செய்தானே...

அவன் சந்தோஷத்திற்கு குறுக்கே வந்துவிட்டது என்ற நினைப்பாலா?

ஆனால் எந்த மனிதரையும் தன் சுயலாபத்தை முன்னிட்டு அசட்டை செய்வது அவன் சுபாவமே கிடையாதே...அதுவும் குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவதாவது...அந்த ஆசிரம குழந்தைக்ளிடம் இவன் பழகும் விதம் என்ன? அதிலும் ஷர்மிலியை தாங்கும் முறை என்ன?

இவள் விஷயங்களை சரியாகத்தான் புரிந்து கொள்கிறாளா?

இவள் மீதுள்ள மோகத்தினாலா அவன் தன் குழந்தையை அசட்டை செய்கிறான்...? நம்பவே முடியவில்லையே....

இது அவன் உணர்ந்து செய்வதாய் இல்லாமல் இருக்கலாம்....அவனை அறியாமல் அவனது  ஏமாற்றம் இப்படி வெளிப்படுகிறது போலும்....நாள் பட சரியாகிவிடும்...

அன்பு மனித உருகொண்டால் கவினாகத்தான் பிறக்கும்....அப்படி பட்டவன் தன் சொந்த குழந்தையை கொண்டாடாமல் போவானோ...?

தெய்வமே பிறப்பது பெண்ணாக இருக்கட்டும்....பெண் வாரிசு இல்லாத வீட்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தை என்ற வகையில் அனைவரும் என் மகளை ஆசையாய் சேர்த்துக் கொள்வார்களே....என்னைப்போல் தவிர்க்கப்பட்ட தள்ளிவைக்கப்பட்ட நிலை என் குழந்தைக்கு வரகூடாது....

நாட்கள் நர்ந்தன. கர்ப கால மசக்கை வேரிக்கும் வந்தது. பூமி இடைவிடாது சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதில் இவளுக்கு நம்பிக்கை இன்றி போய்விட கூடாது என்பது போல் எல்லா நேரமும் சுற்றியது தலை.

அதுவும் ஏனோ மாலை நேரங்களில் பூமி சாய்ந்தபடி வேறு சுற்றியது. உள்சென்ற அத்தனை உணவும் திரவமும் உடனுக்குடன் திரும்பி வந்தன.. சிக்கன் ஃபிஷ் என்ற வார்த்தைகளே வயிற்றில் உள்ளதை வெளிநடப்பு செய்யவைக்க போதுமானதாக இருந்தது.

எழும்ப முடியாமல் கிடந்தாள் அவள். கணவனின் அத்தனை கரிசனையையும் தாண்டி உள்ளுக்குள் அவன் மீது கோபம் வளர்ந்து கொண்டு போனது...ஒன்று அவளது அம்மாவுடன் சேர அனுமதிக்க வேண்டும்....இல்லை அவனது அம்மாவையாவது வர வைத்திருக்க வேண்டும்...நானே பார்க்கிறேன் என்று விழுந்து விழுந்து கவனித்தாலும்...அவன் செய்யும் எதாவது இவளது நிலையை சரி செய்கிறதாமா?

இதில் பாதிநேரம் இவளை வீட்டில் வேலைக்காரர்களிடம் விட்டு வேலைக்கு வேறு செல்கிறான்....வேண்டாத பிள்ளைதானே  அதனால்தான் வேலைக்காரியிடம் விடுகிறான் போலும்...இப்படியாய் இருந்தது அவள் குமுறல்.

ஏனோ யார் வந்து என்ன செய்தாலும் மசக்கையை தான்தான் அனுபவித்து ஆகவேண்டும் என்பது அவளுக்கு தோன்றவே இல்லை.

ஆனால் மனதில் இத்தனை குமுறல் அவன் மீது இருந்தாலும்...அவனிடம் அதை அவள் சொல்லவே இல்லை. காரணம் அவன் அருகில் இருக்கும் தருணங்களில் இப்படி கோப உணர்வுகள் எதுவும் அவள் மனதில் தோன்றுவது கூட இல்லை. தனிமையில் இருக்கும் போதுதான் தாறுமாறாய் நினைவுகள்.

உண்மையில் கூடுமான வரை வேரியுடன் தான் இருந்தான் கவின். ஆனால் அந்த எரிபொருள் தொழிற்சாலை விஷயம் சம்பந்தமாக அவன் வெளியே செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்த நேரங்களில் அவளுடன் இருக்கவென ஒரு நர்ஸை நியமித்து இருந்தான்

கருவுற்ற நேரம் பெண் மனம் சதுப்பு நிலம். கையாளுவதில் கவனம் வேண்டும். இதை எத்தனைதான் உணர்ந்து கவின் நடந்து கொண்டாலும் அவளின் தனிமையிடம் அவனின் அன்பும் அக்கறையும் தோற்றுகொண்டுதான் இருந்தன தொடர்ந்து.

வியனின் பிறந்தநாளை எந்த வால்த்தனமும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தாள் மிர்னா. காரணம் இல்லாமல் இல்லை.  தாவணி போட்டு ரிபண்டன்ஸ் பார்ட்டி இவள் கொடுத்த நாள் அவனிடம் வாங்கி கட்டிய பிறகு நிகழ்ந்த நிகழ்ச்சியின் பின்விளைவு இந்த வால்சுருட்டல்.

அன்று அவன் கொடுத்த கொடையில் அமைதியாய் தன் அறைக்கு சென்றவள் உடை மாற்றும் எண்ணம் கூட இல்லாமல் தன் கட்டிலின் குறுக்காக குப்புற விழப் போனாள். ப்ச்...உனக்கு பொண்னு மாதிரி நடந்துக்கவே தெரியலை....அதான் எல்லாம் ப்ராப்ளமாகுது... இனி கொஞ்சமாவது திருந்த வழியப் பாரு

என தன்னை தானே சொல்லிக்கொண்டு மெதுவாக படுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.