(Reading time: 19 - 37 minutes)

" ப்பாடி , முடிச்சுட்டியா டீ ? இரு நான் பால் கொண்டு வரேன் , உனக்கு தாகமா இருக்கும் " என்றான் அவன் குறும்பாய் ..

" உன்கிட்ட சொன்னேன் பாரு , என்னை தான் அடிச்சுக்கணும் ..போடா " என்று நொந்து கொண்டவளின்  முகத்திலும் புன்னகை பரவியது ..

" தேனுவுக்கு  தான் தேங்க்ஸ் சொல்லணும் ஷக்தி .. என் கூடவே இருந்து என்னை எப்படி பார்த்துகிட்டா தெரியுமா ?  " என்றாள்  சங்கமித்ரா ..

" அவங்க மட்டும் இல்லைடீ .. மதி அண்ணாவும் தான் " என்றான் அவன் ஆத்மார்த்தமாய் .. கணவனின் குரலில்  தொனித்த  உணர்வுகளை படித்தவளாய்

" ஆமா கேட்கனும்னு நினைச்சேன் .. நீ என்ன திடீர்னு மதி அண்ணா, மதி அண்ணான்னு அவர் பக்கம் சாயஞ்சுட்டே  " என்று ஆவலாய் கேட்டாள்  மித்ரா ..

" ஆஹான்  , சொல்லி ஆகணுமா " என்று கண் சிமிட்டினான் அவன் ..

" சொல்லுடா "

" சரி அப்படியே மேல பாரு "  (ப்ளேஸ்  பேக் டைம் )

சங்கமித்ராவின் போனில் இருந்து ஷக்தியின்  எண்களை  தேடி மதியழகனுக்கு அனுப்பி வைத்தாள்  நிலா ..

" நாம தப்பு பண்ணுறோமா மது ?"

" ஆமான்னும் சொல்ல முடியாது இல்லைன்னும் சொல்ல முடியாது "

" யோவ் ஏன்யா நீ வேற குழப்புற ?"

" ஹா ஹா ..இததான் எதிர்பார்த்தேன் .. பேபி , உன்னை பார்த்துக்கத்தான் நான் இருக்கேன்ல ? அப்பறம் நீ ஏன் ஓவரா மூளையை கசக்குற ? போ போயி பாக்கியம் அத்தை கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி சாக்லேட் வாங்கி சாப்டு .. மாமன் அதுக்குள்ள ஷக்திக்கு  வேப்பிலை அடிச்சிட்டு வரேன் " என்று போனை வைத்தான் மதி ..

ஒருமுறை தன் மனதில் இருக்கும் எண்ணங்களை ஆராய்ந்து கொண்டான் மதி .. என்னதான், மிக குறைவான நாட்களாக பழகி இருந்தாலுமே கூட, மித்ராவின் மனதில் இருக்கும் காதலை நன்கு உணர்ந்தே இருந்தான் மதி .. அப்படி இருக்கையில் ஷக்திக்கு  மட்டும் எப்படி இது தெரியாமல் இருக்கும் ?  இவள்தான் சிறுபிள்ளைத்தனமாய்  விலகி சென்றாலும் , காதல் கொண்டவன் தேடி அல்லவா வந்திருக்க வேண்டும் ? என்பது மதியின் கருத்து .. என்னத்தான் நடக்குதுன்னு பார்போம் என்றும் யோசித்தபடியே போனை ஷக்திக்கு  போன்  போட்டான் மதியழகன் .. முதல் ரிங் அடித்த உடனே போனை எடுத்திருந்தான் ஷக்தி ..

" போனை கையிலேயே வச்சு இருக்கான் போல .. ஒருவேளை  மித்ராவுக்காக  தான் காத்திருக்கிறானோ ?" என்று  ஆராய்ந்தபடியே போனில் கவனம் செலுத்தினான் மதியழகன் ..

" ஹெலோ ...." - ஷக்தி .

" ..."

" ஹெலோ "

".."

" மிது , மிது நீதானே இது ?" என்றவனின் குரலில் இருந்தது மொத்தமும் பரிதவிப்பு தான் .. இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவனா மித்ராவை தேட போகிறான் .. எதையும் பார்த்தவுடனேயே ஆராய்ந்துவிடும் மதியின் செவிகளுக்கு சக்தியின் தவிப்பான குரலே அவனுக்காக வாதாடியது !

அவனை அதிகம் தவிக்க விடாமல் பேசினான் மதியழகன் ..

" ஷக்தி நான் அண்ணன் பேசுறேன் " என்றான் உரிமையாய் .. குழம்பித்தான் போனான் ஷக்தி ! வீட்டிற்கு முதல் பிள்ளை, பெற்றோருக்கு அடுத்தபடியாய் கடமை சுமப்பவன்! எனக்கிது வேண்டுமென்று அவனிடம் பலர் கேட்க  , உனக்கென்ன வேண்டுமென அவனுக்கு மேல் நின்று யாரும் கேட்காத ஒரு வாழ்க்கையை வாழ்பவன்  அவன் ! இதுவரை பேச்சிற்கு கூட யாரையும் "அண்ணா " என்றழைக்கும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை .. அப்படி இருக்கையில் இத்தனை உரிமையாய்  " நான் அண்ணா பேசுறேன் " என்று சொல்பவன் யார்  ?  யார் என்றே கேட்க தோன்றாமல் மௌனமாய் இருந்தான் ஷக்தி ..

" ஷாக் ஆகிட்டியா ஷக்தி ..?  வயசுப்படி நான் உனக்கு அண்ணா மாதிரி தான் .. " என்றான் மதி உற்சாகமாய் ..

" யாரிவன் ?" என்ற எண்ணம் மேலோங்க

" நீங்க ?" என்று பேச்சை இழுத்தான் ஷக்தி ..

" நான் மதியழகன் .. தேன்நிலாவுடைய வருங்கால கணவன் " என்றான் மதி .. அன்பெழிலன் ஏற்கனவே தேன்நிலா , மதியழகன் பற்றி தெரிந்து வைத்திருந்தான் .. அதனால் அவர்களின் பெயரை கேட்டதுமே ஷக்திக்கு  யார்  என்று புரிந்துவிட்டது ..

" ஹா சாரி , முதலில் உனக்கு தேன்நிலாவே  தெரியாதுல " என்று மதி பேச்சை தொடரும்முன்

" இல்லை .. எனக்கு தெரியும் .. ! மித்ரா எப்படி இருக்கா " என்றான் ஷக்தி .. மனதிற்குள் அவனை மெச்சி கொண்டான்  மதியழகன் .. அப்படி என்றால் , அவர்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறான் .. மித்ராவின் நலனுக்காக தவிக்கிறான் ?  மித்ராவின் காதல் தான் கண்ணாடி போல நேரடியாய் பிரதிபலிக்கிறது என்று பார்த்தால் இங்கு ஷக்தியின்  காதலும் அதே நிலையில் தான் இருக்கிறது .. கடவுளே இவங்க ரெண்டு பேரும்  பிரியவே  கூடாது  என்று மனதிற்குள் வேண்டினான்  மதி ..

" சார்  லைன்ல இருக்கிங்களா ?"

" ஹ ... ஹான் ....  ஹே என்னதிது சார் மோர்ன்னு .. நான் எவ்வளவு பாசமா அண்ணான்னு சொல்றேன் , நீ என்னடான்னா சார்ன்னு கூப்பிடுற ? ஏன் ஷக்திக்கு  தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை அண்ணா தானா ?" என்றான்  மதி குறும்புடன் .. ஓரளவிற்கு என்ன நடக்கிறது என்று மதிக்கே தெரியும் .. தெரிந்துமா இப்படி  இருக்கிறான் ? என்று வியந்தான் ஷக்தி ..

" அப்படி ஒன்னும் இல்லை அண் ....ணா  " என்று ஏதோ படபடப்புடன் சொன்னான் ஷக்தி .. ஒற்றை பிள்ளையாய் வளர்ந்த மதிக்குமே இவன் அண்ணா என்று உணர்ந்து , தம்பி போலவே பணிந்து அழைக்கவும் மனதிற்குள் ஏதோ சிலிர்ப்பு உண்டானது .. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்த்த மட்டிலேயே பல ஜென்மமாய் வாழ்ந்த உணர்வும் காதலும் வருவது சாத்தியம் என்றால், ஓர் ஆணுக்கு இன்னொரு ஆண் மீது சகோதரப்பாசம் சுரப்பது   சாத்தியம் இல்லையா என்ன ? இங்கேயும் அதுதான் நடந்தது .. அண்ணா என்ற அழைப்பில் அவன் பாரதனாகிவிட்டான் , தம்பி என்ற அழைப்பில் இவன் இராமானாகி விட்டான் ... ஏன் பரதன் ?? அருகில் இருக்கும் அண்ணனை பேணி காப்பதும் நேசிப்பதும்  ஒரு தனயனுக்கு சுலபமானது தான் .. ஆனால்  தமையன் அருகில் இல்லாதபோதும் அவன் மீது பற்றும் அன்பும் வைத்து மனதில் பூஜிப்பது  எத்தனை உத்தமம் ? அத்தகைய  அன்பு எத்துனை பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் ?

அப்படித்தான் துளிர்த்தது இங்கும் ஷக்தி- மதியின் பாசப்பிணைப்பு .. !

" மிது எப்படி இருக்கா அண்ணா ?"

" கல்யாணம்னு போனில் சொல்லிட்டிங்க , அப்பறம் எப்படி சந்தோஷமா இருப்பா ஷக்தி ? எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன் என்ற உரிமையில் கேட்குறேன் , நீங்க ரெண்டு பெரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ உயிரா இருக்கிங்கன்னு உங்களுக்கே தெரியுது தானே ? அப்பறம் ஏன் ஷக்தி இந்த கண்ணாமூச்சி "

உண்மையை சொல்லி விட நினைத்தான் ஷக்தி .. இருந்தும் முகம் தெரியாவிடினும் அக்கறையாய் உரிமை எடுத்து கொண்டு பேசும் மதியின் பேச்சு அவனை கட்டி போட்டது .. மித்ராவும் இப்படித்தானே  " ஒழுங்கா சாப்டுன்னு சொன்னா கேட்குறியா ?", " ஏன் இன்னும் விழிச்சிருக்க " ," காய்ச்சல்ன்னா  என்கிட்ட சொல்ல மாட்டியாடா நீ " என்று அவள் மிரட்டும்போதெல்லாம் சிரித்து கொள்வான்.." சொல்லிட்டா மட்டும் அடுத்த ப்ளைட்  புடிச்சு இங்க வருவியா " என்று குறும்பாய் கேட்பான் .. இப்போது மதி பேசுவதும் அவனுக்கு இதெல்லாம் நினைவூட்ட , வேண்டுமென்றே அமைதி காத்தான் ஷக்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.