(Reading time: 13 - 25 minutes)

"நீங்கள் ஏதாவது பொது தொண்டு நிறுவங்களின் மூலம் உதவ முடியும் என்று டாக்டர் கிரிதரன் கூறினார்...எப்படியாவது எங்களுக்கு உதவுங்கள் டாக்டர்" என குரல் தழுதழுக்க கூறியவள் சட்டென்று டாக்டரின் கால்களில் விழ எத்தனிக்க,

கால்களின் அருகே குனிந்த துளசியை பற்றி தூக்கி,

"என்ன பெண்ணம்மா நீ! இப்படியா காலில் விழுவது? முதலில் அழுகையை நிறுத்து. எந்த நிலையிலும் பெண்கள் அழக் கூடாது. உட்கார் முதலில்" என்றார் கண்டிப்பாக.

அவர் கட்டளைக்கு பணிந்து அமர்ந்தவளை, "இதோ பாரும்மா.... நீ என் மகள் வயதில் இருக்கிறாய் ...ஒன்று செய்கிறேன் என் டாக்டர் நண்பரை போன் செய்து கேட்கிறேன்.. அவர் ஃபீஸைக் குறைத்தாலும், மற்ற செலவுகள் இருக்கிறதே உனக்கு எப்படி உதவுவது"....

"என் மைத்துனன் உன்னைப் பற்றி கூறினான்... என்ன செய்வது, நல்லவர்களுக்குத் தான் ஆண்டவன் சோதனையைக் கொடுக்கிறான். பணக்காரர்களுக்கு வர வேண்டிய வியாதி ஏழைகளுக்கு வரக் கூடாது".

"நீ இரண்டு நாட்கள் கழித்து வா. அதற்குள் உனக்கு எப்படி நாங்கள் உதவ முடியும் என்று பார்க்கிறேன்".

"என்ன தான் டாக்டர் ஃபிஸை குறைத்தாலும், எங்களால் முடிந்த பண உதவி செய்தாலும், மொத்தமாக உதவுவது கஷ்டமே. உன்னை மாதிரி நிறைய பேருக்கு உதவ வேண்டி இருக்கிறது. பார்க்கலாம், முழு முயற்சி செய்கிறேன்".

நம்பிக்கையற்று அவரையே நோக்கிக் கொண்டிருந்த துளசிக்கு,

"கவலைப் படாமல் போம்மா, எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம்... நாங்களும் மனிதர்கள் தான். நாளை கிரிதரனுக்கும் போன் செய்கிறேன்" என ஆறுதலாக கூறினான்.

மெல்ல தலையாட்டிய துளசி, "ஒ.கே. டாக்டர். ரொம்ப தாங்க்ஸ்". என்று கூறி வெளியே சென்றவள், தலையை ரொம்ப வலிக்கிறதே... காஃபி குடித்துவிட்டு வீடு திரும்புவோம் என எண்ணி, அங்கிருந்த காண்டீனுக்குள் நுழைந்தாள்...

ந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்தவுடன் இறங்கிக் கொண்ட கரண், " சரண் நீ அலுவலகம் சென்றுக் கொள். நான் காருண்யாவை மீட் செய்வதாக சொல்லியிருந்தேன்."

"நான் வீட்டிற்கு போன் செய்து காரை அனுப்பச் சொல்லுகிறேன்" என்று கூறியவன் " பை டா, சீ யூ லேட்டர்" என சொல்லி படிகளை கடந்து உள்ளே சென்றான்.

கரணும் காரை கிளப்பி தன் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

உள்ளே டான்ஸ் ஃப்ளோர் அருகே போடப்பட்டிருந்த டேபிள்களில் ஒன்றில் உட்கார்ந்திருந்த காருண்யாவை பார்த்த கரண் வேகமாக அவளருகில் நெருங்கியவன்,

"ஹாய் டியர்" என்று கூறி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

"ஹாய் டார்லிங் ...என்ன இவ்வளவு லேட், எனக்கு உங்க மேலே ஒரே கோபம்",.என்றவள், அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கூட அவகாசம் கொடுக்காமல்,.

"சில நாட்களாக நீங்கள் சொன்னால் சொன்ன நேரத்திற்கு வருவதில்லை.... அதிகமாக ஃபோனும் செய்வதில்லை...

நான் ரொம்ப பயந்து போனேன் தெரியுமா?" என சின்ன பெண் மாதிரி கீச்சு குரலில் கொஞ்சலாக கூறி பட படவென கண்களை கொட்டி , பயப் பார்வை பார்ப்பது போல் பாவனை காட்டினாள்.

'அட ஆண்டவா, இவளுக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதோ? இப்படி செயற்கையாக பேச வேண்டாம் என பல தடவை சொல்லியும் அதையே செய்து தொலைக்கிறாள், சகிக்கவில்லை', என்று எண்ணியவன்....

"ஒன்றுமில்லை காயா, கொஞ்சம் வெளியே வேலை இருந்தது.... என்று கூறியவனை பார்த்தவள்...

"எப்பொழுதும் உங்களுக்கு வேலை தான்...அது சரி ஏதாவது புது கான்டிராக்ட் சைன் ஆகியிருக்கிறதா?....நமக்கு எவ்வளவு லாபம் வரும். அப்ப இன்னிக்கு எனக்கு ஸ்பெஷல் டீரிட் கட்டாயம் உண்டு" என்று பேராசையுடன் சொன்னவளை இடைமறித்தவன்,...

"இதோ பார் காருண்யா...... கொஞ்சம் பொறுமையாக இரு....ஏன் தான் இப்படி அலைகிறாயோ....உன்னிடம் நான் ஒரு விஷயம் முக்கியமாக பேச வேண்டும் என்று தான் அழைத்தேன்...நான் பேசி முடிக்கும் வரை ஏதும் நீ குறுக்காக பேச வேண்டாம் என்று கண்டிப்புடன் சொன்னவன்,

"இன்று நான் ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்தது"...என்று ஆரம்பித்தவனை,

"எதற்கு டார்லிங், உன் அம்மாவிற்கு ஏதாவது ப்ராப்ளமா? எதுவும் சீரியஸ்ஸா?", என்று கொஞ்சும் குரலில் கேட்டவளை,

எரிச்சலுடன் பார்த்தவன், "சே.. உன்னால் சற்று வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாதா? " எரிந்து விழுந்தான்...சில நிமிடங்கள் கழித்து, "காயா, எனக்கு டாக்டர் நாள் குறித்து விட்டார்" என்று அனைத்தையும் மட மட வென கூறி முடித்து விட்டான்.

திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த காருண்யா,..." அய்யைய்யோ,...நீங்கள் சீக்கிரமாக இறந்து போய் விடுவீர்களா? அப்பொழுது என் கதி.....நான் என்ன செய்வேன்?"...என்று கத்தி கண்ணீர் விட தொடங்கியவளை,

"காரு, கொஞ்சம் மெதுவாக....சுதாரித்துக் கொள்..எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள் பார். இதுதான் உண்மை... உன்னிடம் எனக்கு ஒர் அன்பும் காதலும் இருக்கத்தான் செய்கிறது... ஆனால் நான் என்ன செய்ய முடியும் ...காலம் கடந்து விட்டது...இனி நீ உன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். என்னை மறந்து புது வாழ்க்கை தொடங்கு", என்ற கரணை இடையிட்டு,

"உங்களை நான் எப்படி மறக்க முடியும்....மறக்க வேண்டும் என்றால் நானும் உங்களுடன் இறந்தால்தான் அது முடியும்...ஆனால் எவ்வளவு பாவம் நீங்கள், உங்களுடன் நானும் இறந்து விட்டால், நீங்கள் ஆசைப்பட்ட உங்கள் கனவுகள் எல்லாம் என்ன ஆவது? அதனால் நான் உயிரோடு இருந்து , உங்களை மணந்து கொண்டு அந்த கனவுகளை எல்லாம் நிறைவேற்றுகிறேன்....என் அம்மாவுக்கு ஒரே பெண் நான். நீங்கள் கவலைப் படாதீர்கள். முதலில் நம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்... ஒரு நாள் உங்களுடன் வாழ்ந்தால் கூட எனக்கு போதும். அதுவே எனக்கு பாக்கியம்." என்று உருக்கமாக கூறி கண்ணீர் சிந்தினாள் காருண்யா.

'இவள் கொஞ்சம் பணத்தாசை பிடித்தவள் என்று நாம் நினனத்தது தவறோ? இவளின் வெகுளியான பேச்சிலும் , அழகான தோற்றத்திலும் தான் இவள் மேல் நமக்கு ஒர் ஈர்ப்பை உண்டாக்கியது. போகப் போக இவள் டாம்பீக குணம் புரிபட்டாலும் நல்லவள் என்ற ஒரு காரணத்தினாலேயே , காதல் என்று கூறினேன் இவளிடம்... அது இன்று நிஜம் என் நிருபித்து விட்டாள் . பாவமாக இருக்கிறது. என்ன தியாக மனப்பான்மை இவளுக்கு....சாகக் கிடக்கும் என்னை போய் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறாளே!'....என்று வியந்தான் கரண்.

கரணின் மனம் ஏற்கனவே மிகவும் சோர்ந்து போய் இருந்ததால் அவனுக்கு காருண்யாவின் அதீத நடிப்பு புலப்படவில்லை..ஆசை கொண்ட மனசு எல்லா விஷயங்களையும் சாதகமாகவே நினைப்பதுபோல, அவள் பாவம் நல்லவள் என்று நம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.