(Reading time: 18 - 35 minutes)

'.. சி... வந்.....தி.....ருக்....கேன்டா'. 'வசி' அந்த வார்த்தையை அவன் உச்சரித்த அந்த நொடியில் அவள் உடல் அப்படியே மொத்தமாய் குலுங்கி ஓய்ந்தது.

திடுக்கிட்டு, வியந்து போனான் ரிஷி. அந்த வார்த்தையில்தான் அவள் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்ன? அவன் கண்களில் நீர் பிரவாகம்.

'வசி வந்திருக்கேன்டா' மறுபடி சொன்னான் ரிஷி. இப்போது எந்த மாற்றமும் இல்லை. மறுபடியும் முயன்றான் பழைய நிலையிலேயே படுத்திருந்தாள் அவள்.. 'எழுந்து வந்து விடு ரோஜாப்பூ. எழுந்து வந்து விடு' கெஞ்சியது அவனது உள்ளம்.

கண்ணீரை துடைத்துக்கொண்டு தாலியுடன் அவளை நெருங்கினான் ரிஷி. ஒரு முறை கண்முன்னால் அவனது அப்பாவும், அம்மாவும் வந்து போயினர். 'அம்மா இதை எப்படி எடுத்துக்கொள்வாள்?' புரியத்தான் இல்லை. ஆனால் அது எதையுமே யோசிக்கும் மன நிலை இப்போது இல்லை.

ஒரு தீர்கமான சுவாசத்துடன் தாலியை கட்டினான் அவளுக்கு. 'இனி என் உயிர் முதற்கொண்டு அத்தனையும் உனக்கே சமர்ப்பணம். இனி எது வந்த போதும் உன் பாதையிலேயே என் பயணம். எழுந்து வந்து விடுவாய் நீ! ஒரு வேளை விதி வேறு மாதிரி முடிவெடுத்தால் அந்த நிலையிலும் உன்னை தனியாக விடுவதாக இல்லை.' அவன் மனதிற்குள் ஒரு சங்கல்ப்பம்!!!!

ஒரு முறை மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டவன் மெல்ல சொன்னான் 'உனக்கு தாலி கட்டிட்டேன் பொண்டாட்டி. சீக்கிரம் எழுந்து வந்திடுடா.' இந்த செய்தி அவளை சேர்ந்திருக்குமா? தெரியவில்லை.

குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க விழைந்தது உள்ளம். 'இன்பெக்ஷன் ஆக நிறைய சான்ஸஸ் இருக்கு.' டாக்டரின் வார்த்தைகள் பயமுறுத்தின. சற்று தள்ளியே நின்றவன் இமைக்க மறந்து சில நிமிடங்கள் அவளையே பார்த்திருந்தான். 'தப்பா பேசிட்டேன்டா உன்னை.. என்னை மன்னிச்சுக்கோடா. சீக்கிரம் எழுந்து வந்திடு'

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவனை ஒன்றாக அணைத்துக்கொண்டனர் சஞ்சீவும், அருந்ததியின் தந்தையும். 'சரியாயிடும் பார். இனிமே எல்லாம் சரியாயிடும்' என்றார் அப்பா.

சில நொடிகள் கழித்து அவர் விலகி சென்று நின்று கண்ணீரை துடைத்துக்கொள்ள நண்பனின்  தோளை மறுபடி அணைத்துக்கொண்டான் சஞ்சீவ்.

'ரொம்ப சந்தோஷமா இருக்குடா. எனக்கும் எல்லாம் சரியாயிடும்ன்னு தோணுது. சரியாகணும்.' என்றான் கண்கள் மூடி 'என் கதையிலே தான் எதுவும் சரியா வரலை. உனக்காவது எல்லாம் சரியா நடக்கணும்.' ஏதோ நினைவில் சஞ்சீவ் சட்டென சொல்ல மெல்ல விழி நிமர்த்தி நண்பனின் முகம் பார்த்தான் ரிஷி.

தான் சந்தித்த ஏமாற்றத்தை யாரிடமும் வெளிக்காட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது சஞ்சீவிடம். எப்போதுமே உற்சாகத்துடன் உலா வருபனின் ஆதங்கம் ஒரு சில நேரம் ரிஷியிடம் மட்டும் இது போல வெளிப்படும்.

'சரி விடுடா' ரிஷியின் இமைக்காத பார்வையில் சட்டென இயல்பானான் சஞ்சா.

'சஞ்சீவ் நீ மட்டும் கொஞ்சம் என் கூட வா' ஏதோ ஒரு முடிவுடன் அழைத்தார் இந்திரஜித். நகரப்போனவர் ரிஷியிடம் திரும்பி 'எல்லாருக்கும் சொல்லிடலாமாபா?' என்றார்.

'தனது மகள் மறுபடி கண் விழிக்கும் போது ரிஷியின் மனைவியாகவே விழிக்க வேண்டும். அதன் பின் எது நடந்தாலும் இருவரும் கணவன் மனைவி என்பதில் மட்டும் எந்த மாற்றமும் வந்து விடக்கூடாது'. அவர்கள் திருமணத்தை ஊர்ஜித படுத்திவிடும் அவசரம் அவருக்குள்ளே

சில நொடி யோசனைக்கு பிறகு அமோதிப்பாக தலை அசைத்தான் ரிஷி. 'சரி அங்கிள். சொல்லிடுவோம்'

'நீ இங்கேயே இருப்பா. நீ வந்தேனா உன்னை குடைஞ்சு எடுத்திடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம். அருந்ததி எழுந்தப்புறம் நீ பேசிக்கலாம்' என்றபடி வாசலில் இருந்த பத்திரிகையாளர்களை நோக்கி நடந்தார் இயக்குனர்.

சில நிமிடங்களில் பறந்தன செய்திகள் .'அருந்திக்கு தாலி கட்டினார் நடிகர் ரிஷி!!!!!. விழித்தெழுவாரா அருந்ததி???' ரிஷியின் ரசிகர்களிடையே வியப்பும் மகிழ்ச்சியும் பரவ துவங்கியது. அருந்ததி விழித்தெழ வேண்டுமென சிலர் பிராத்தனை செய்ய துவங்கிய நேரத்தில் ஊருக்குள் இருந்த வேறு சில உள்ளங்களில் மட்டும் ஆத்திரம் பரவிக்கிடந்தது.'

நேரம் இரவு ஒன்பதை எட்டிப்பிடித்திருந்தது. அருந்ததி அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.. நேற்றிலிருந்தே ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் சஞ்சீவை வறுப்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தான் ரிஷி.

அருந்ததியின் திருமண செய்தி வெளியானதிலிருந்து விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த கைப்பேசியை அணைத்து விட்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்தார் அவளது தந்தை.

அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஜன்னலோரத்தில் நின்று வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் ரிஷி. அவன் கண்ணில் தென்பட்டன சப்தரிஷி மண்டலத்தின் நட்சத்திரங்கள். வானத்தில் வசிஷ்டரும் அருந்ததியும் மின்னிக்கொண்டிருக்க, தனது அருந்ததியையே ஒட்டிக்கொண்டிருந்தது இவன் மனம்.

'வசி' என்ற ஒற்றை வார்த்தையில் அவள் குலுங்கிய விதம் இன்னமும் அவன் கண்முன்னே....

'உன் பேரை சொல்லிகிட்டே நான் வாழ்க்கையிலே எதை வேணும்னாலும் கடந்து வந்திடுவேன் வசி'  முன்பொருமுறை சிரித்துக்கொண்டே சொன்னாளே அவள்.

ப்போது இவர்கள் இருவரும் நடித்த அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சி. ஒரு இருபது மாடி கட்டிடத்திலிருந்து கதாநாயகி தப்பித்து செல்வது போல் ஒரு காட்சி. சுவற்றை பிடித்துக்கொண்டு ,ஜன்னல்களின் இடைவெளியில்  கால்வைத்து அவள் கீழிறங்க வேண்டும்.

அந்த படத்தின் இயக்குனருக்கே அவளை அந்த அந்த காட்சியில் நடிக்க வைக்க உடன்பாடு இல்லை. 'நீ என்ன ஸ்பைடர் மேனா? உனக்கு ஏதாவது ஆச்சுனா உங்கப்பா என்னை கொன்னுடுவாரு சும்மா இரு' என்றார் அவர்.

'ஏன்? ஹீரோதான் சாகசம் பண்ணனுமா என்ன? நான் நடிக்கத்தான் போறேன் இந்த சீன்லே' பிடிவாதம் அவளிடம்.

ரிஷிக்கும் இதில் அவளை ஈடுபடுத்துவதில் துளிக்கூட விருப்பம் இல்லை.. 'எதுக்கு ரிஸ்க் எடுக்குறே. டூப் ஏதாவது போட்டு மானேஜ் பண்ணிக்கலாம்.' சொன்னான் அவன்

கேட்கவில்லை அவள். 'ஏன்? டூப் போடறவங்க மட்டும் மனுஷங்க இல்லையா? நான் ட்ரை பண்ணத்தான் போறேன்' ஏதேதோ பேசி எல்லாரையும் சம்மதிக்க வைத்திருந்தாள் அவள்.

எல்லாரும் மேல் தளத்துக்கு வந்துவிட, ரிஷியும் வந்து நின்றான். தேவையான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காட்சியின் படப்பிடிப்பு துவங்கியது.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள் அவள். ரிஷியின் மூச்சு இறுகிக்கொண்டது. அதில் அமைக்க பட்டிருந்த கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு ஜன்னலின் இடைவெளியில் அவள் கால் வைக்கும் போதும், அவன் இதயம் தாறுமாறாக துடித்தது. ஒரு கட்டத்தில் கொஞ்சம் தடுமாறி அந்தரத்தில் ஊஞ்சலாடி அவள் சமாளித்துக்கொள்ள உயிர் போய் திரும்பியது அவனுக்கு.

ஆனால் மிக தைரியமாக இயங்கிக்கொண்டிருந்தாள் அவள். பயத்தின் சாயல் கூட தென்படவில்லை அவளிடம். ரிஷிதான் வியர்த்துபோய் இருந்தான். காட்சி முடிந்த பிறகும் அவன் இயல்புக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன.

எல்லாரும் சுற்றி நின்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் அவளை. சத்தியமாய் அவளை பாராட்ட  தோன்றவில்லை அவனுக்கு. அவளை இழுத்து வந்து கன்னத்தில் நாலு அறை அறைந்தால் என்ன? என்றே தோன்றியது.

சில நிமிடங்கள் கழித்து தனியாக நின்றிருந்தவனின் எதிரில் வந்து நின்று கண் சிமிட்டி சிரித்தாள் அவள் ' எப்புடி?'

'அறிவு கெட்டவளே. உயிர் போயிடுச்சுடி எனக்கு.' வேறு பக்கமாக திரும்பிக்கொண்டு முணுமுணுத்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.