(Reading time: 26 - 51 minutes)

சோ வந்தனாவின் வாகனத்திலிருந்து ரேயா இறங்கும்போது அங்கு அவளை எதிர்க் கொண்டது சரித்ரனும் தான். அவர்களைத் தொடர்ந்தே வந்து இறங்கினான் ஆதிக். எது எப்படியோ ஆதிக்கைப் பார்வையால் ஸ்பரிசிப்பதே ஓரான்ந்த விடுதலையாய் உயிர் வரை தித்திப்பாய் உணர்ந்தாள் ரேயா.

அதுவும் அவளது வீட்டு வளாகத்திற்குள் அவளவனாய்….அவளுக்கே அவளுக்கு உரியவனாய்…..அனவைரையும் மறந்து அவள் பாதங்கள் அவன் புறமாய்…..வரவேற்பாய் புன்னகையோ முகம் முழுவதுமாய்… அவனுமே மலர்ந்து சிரித்தான் அவளைப் பார்வையில் வாங்கியவுடன். அவள் கண்கள் அவன் இதழில் புன்னகை ஆரம்பிக்கும் இடத்தில்….

“வாங்க மேம்…..வாங்க ஆதிக்” சரித்ரன் தான் நடப்பு உலகிற்கு இருவரையும் கொண்டு வந்தான். வந்தனா சிறு தலையாட்டலுடன் அதை ஏற்று திரும்பிப் பாராமல் வீட்டு வாசல் நோக்கிச் செல்ல, சரித்ரன் நீட்டிய கை பற்றி குலுக்கினான் ஆதிக்.

“அத்தான் இவங்க ஆதிக்….ஆதிக் இவங்கதான் என் அத்தான் சரித்ரன்…” தன் பங்குக்கு இருவரையும் பரஸ்பர அறிமுகம் செய்தாள் ரேயா. சரித்ரனின் கண்கள் ரேயாவின் மீதே இருந்தன. ரேயாவின் கண்களோ ஆதிக்கின் மேல்.

சிறு சிரிப்புடன் சரித்ரனும் இப்பொழுது திரும்பி வீட்டு வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்குத் தெளிவாகவே புரிந்துவிட்டது ரேயாவின் விருப்பம்.

ரேயா இப்பொழுதும் ஆதிக்கைத்தான் பார்க்கிறாள். மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அவள் கண்களுக்கு மையிட்டன. “வாங்க ஆதிக்…” அவள் குரலிலும் அதே உணர்வுகள். வந்திருக்கும் சூழல் எதுவாயினும் அவன் வந்திருப்பது அவளைப் பெண் கேட்க அல்லவா?

சிறு துள்ளலும் சற்று வெட்கமுமாக ஆதிக்குடன் இணைந்து தன் வீட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆயிரமாயிரம் விஷயமிருக்கிறது அவனிடம் பேச…ஆனால் எதைப் பேச? மனவெளியில் இடைவெளி என எதுவுமில்லை இருவருக்கும். ஆரம்பித்தவுடன் அணைக்க முடிந்ததே அவளால் அவனை…..ஆனால் இப்பொழுது இங்கு இவள் என்ன பேச வேண்டும்?

“என்ன திடீர்னு யூனிஃபார்ம்ல இருந்து கேஷுவல்ஸுக்கு மாறிட்டீங்க?” இயல்பாய் இருக்கட்டும் தொடக்கம்.

“யூனிஃபார்ம்ல SP யா இருந்துகிட்டு உன்ட்ட ப்ரொபோஸ் பண்றது சரியா படலை…அதான்..” உண்மையை உள்ளபடியே சொன்னான் அவன். இயல்பாய் பேசும் நிலையில் இல்லையா அவன்? அல்லது இயல்பே இப்படித்தானா? ஜிவ்வென்றது ஏதோ ஒன்று அவளுள். சிறு உதடு கடிப்பால் தன் உணர்வுகளை சமன படுத்தினாள் அவள்.

“அங்கிள மீட் பண்ண இது ஓகேவா?”

 “இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லா இருக்குது ஆதிக்…..உங்க ட்ரெஸிங் சென்ஸ் எனக்கு எப்பவுமே பிடிக்கும்….” சிறு வெட்க உணர்வு இருந்தாலும் மனதில் பட்டதை சொல்ல முடிகிறதுதான் அவளுக்கு. உன்னைப் போலத்தான் நானும் இன்னும் ஒளித்து மறைத்து உறவாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை என்பதன் குறியீடு இது.

“எனக்கு நீ செய்ற எல்லாமே பிடிக்கும்…” அவன் சொல்ல….சிலீர்…அவள் வயிற்றில் பனி மழைக் காலம். ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் பார்வையை வீட்டு வாசல் புறம் திருப்பிக் கொண்டாள் ரேயா. என்ன முயன்றும் கன்னம் சிவப்பதைத்தான் அவளால் தடுக்க முடியவில்லை.

“ஒவ்வொரு தடவை உன் வாட்டர் டேங்க் ஐஸை உருட்டி நீ பார்க்கிறப்பவும் எல்லாத்தையும் உளறிடுவனோன்னு ஒரே டென்ஷனா இருக்கும்…”

முன்பு அவனோடு கொண்டாடிய அந்த பிறந்த நாளில் அந்த ஜுவல்லரி ஷாப்பில் வைத்து  இவள் கண் பார்த்துவிட்டு அவன் தன் தலையை சிலுப்பி தான் சொல்ல வந்ததை சொல்லாமல் போனது ஞாபகம் வருகிறது ரேயாவிற்கு.

“நான் உளறி அதக் கேட்டு நீ எங்கப்பாட்ட சொல்லிக் கொடுப்பேன்னு அழுதுட்டன்னா…….” அவன் விளையாட்டாய் சொல்லிக் கொண்டு போக..

“நிஜமாவே நான் அப்டி செய்வேன்னு நினச்சீங்களாப்பா…?” அவன் கண்களைப் பார்த்து நேரடியாக கேட்டு வைத்தாள்.

“விஷயம் அது இல்ல ரேயு…உனக்கு என்னைப் பிடிக்கும்னு  தெரியும்…பட் நானும் ஸ்டூடண்ட்….நீயும்…..அதுவும் ஸ்கூல் கோயிங் கேர்ள்….நான் எப்டி ப்ரபோஸ் செய்றதாம்? அது தப்பு…அப்ப நானே எங்கப்பாவ டிபென்ட் ஆகி இருந்தேன் …” இப்பொழுது அவன் விளையாடவில்லை. அக்மார்க் உண்மை இருந்தது அதில்.

“நான் கோர்ஸ் முடிக்கவும் கூட உன்ட்ட ப்ரபோஸ் செய்றதா ப்ளான் இல்லை….நீயும் உன் ஸ்டடீசைக் கம்ப்ளீட் செய்யனும்….நானும் அதுக்குள்ள பிஸினஸில் எஸ்டாப்ளிஷ் ஆகிடனும்…அதுக்குப் பிறகுதான் எல்லாம்னு யோசிச்சுருந்தேன்…”

அப்புறம் எதுக்கு இடையில வந்து இப்டி செய்தானாம்? விழி உயர்த்தி வேதனையோடு அவனைப் பார்த்தாள். விளக்க யாசகம் அவள் கண் எனும் காதல்சாலை எங்கும்.

“உன் அப்பா தன்னோட மூத்த பொண்னு ரேயாவுக்கு மாப்ள பார்க்றதா தேவநேசன் அங்கிள்ட்ட சொல்லி அனுப்பி இருந்தாங்க….நம்ம பக்கம் பையன் வீட்ல இருந்துதான முதல்ல ப்ரபோசல் ஆரம்பிக்கனும்னு உனக்கு தெரியும் தானே…அதனால உங்கப்பா எங்கப்பாட்ட நேரடியா பேசாம எனக்கு ரேயாவ டேவியோட மகனுக்கு கொடுக்க இஷ்டம்…பட் அவங்க வீட்ல அப்டி எண்ணம் இருந்தா பொண்ணு கேட்டு வரச் சொல்லுனு  தேவ நேசன் அங்கிள்ட சொல்லிருந்தாங்க… தேவ நேசன் அங்கிள், எங்கப்பா, உங்கப்பா எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ்மேட்ஸ்னு  உனக்குத் தெரியும் தானே…”

“ம்….. ஆனா அப்பா ஷாலுவத்தான் ரேயானு கூப்டுவாங்க…” பரிதாபமாய் சொன்னாள் ரேயா.

“ம்…அது இப்போதான் கொஞ்சம் முன்னால புரிஞ்சிது….. வெரி ஸ்ட்ரேஞ் பழக்கம்..…கண்டிப்பா இப்டி இருக்கும்னு என்னால யோசிக்க கூட முடியலை…”

“அது…ஷாலுவோட நேம் ஷாலோம் ஸ்ரேயா…அவ பிறந்ததுல இருந்து அவள அப்பா ரேயான்னு கூப்டு பழகிட்டாங்க…ஏன்னா அந்த ரேயா அப்பாவோட அம்மா ஞாபகமா வச்ச பேர்,மத்தபடி  எல்லோரும் அக்காவ ஷாலுன்னு கூப்டுவாங்க….. அப்றம் நான் பிறக்கவும், எனக்கு என்னோட இறந்து போன சித்தப்பா ஞாபகமா அந்திரேயான்னு பேர் வச்சாங்களாம் எங்கம்மா…சித்தப்பா நேம் ஆன்ட்ரூ அதை தமிழ்ல அந்திரேயானு சொல்வாங்கல்ல..அதை வச்சு அம்மா வச்சுட்டாங்க போல… அப்பாவுக்கு அம்மா ஆசைக்கு நோ சொல்ல இஷ்டம் இல்லை…பட் அந்திரேயா மேல் நேம் இல்லையா…அதான் டெடிகேஷன்ல அந்திரேயான்னு வச்சுட்டு….ஸ்கூல்ல ரேயான்னு கொடுத்துட்டாங்க….சோ எல்லோரும் என்னை ரேயான்னு கூப்டுவாங்க…பட் அப்பா ஷாலுவ ரேயானு கூப்டுறதால என்னை அன்றில்னு கூப்ட ஆரம்பிச்சாங்க போல…..அதான் ”

“ஓ…..எங்க வீட்ல ஃபார் இயர்ஸ் உங்க ஃபேமிலி கூட ரொம்ப டச்ல இல்ல இல்லையா…சோ ரொம்ப டீடெய்லா இதுலாம் தெரியாது…அதோட ராஜ்குமார் அங்கிள் என்ட்ட பேசுறப்ப எங்க மேரேஜாகி ஃபைவ் இயர்ஸுக்குப் பிறகு ரேயா பிறந்தா…அதி எங்களுக்கு சன், ரேயா எங்களுக்கு டாட்டர்னு ஒரு முழுமையான குடும்பமா ஃபீல் பண்ணோம்னு சொன்னாங்களா….சோ மூத்த பொண்ணு ரேயா….அது நீன்னே மனசுல பதிஞ்சுட்டு……ஃபோட்டோல வேற ஷாலு …சாரி அண்ணினு சொல்லனும்…ஷாலு அண்ணி ரொம்ப குட்டியா இருந்தாங்க….நீ யும் தப்பித் தவறி கூட அவங்கள அக்கான்னு சொன்னது இல்ல…..இதெல்லாம் சேர்ந்து நான் புரிஞ்சு வச்சுருக்க விஷயம் தப்பா இருக்கும்னு தோணவே முடியாம செய்திருச்சு….”

“அவ காலேஜ்லயும் நான் ஸ்கூல்லயும் படிக்றத வச்சு எப்டி யோசிக்காம போனீங்க….?”

“ஷாலு ஹாஸ்டல்ல இருக்கா அப்டின்னுதான் நீ சொல்லிருக்க…அது காலேஜா ஸ்கூலான்னு எனக்கு எப்டி தெரியும் ரேயு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.