(Reading time: 14 - 28 minutes)

டடா… என்ன ருணதி… இன்னும் இங்கேயா இருக்குற?... பாரு இருட்டிட்டு…” என்றபடி காவேரி வர,

“அதெல்லாம் ஒன்னுமில்லை மேடம்… இந்த குழந்தைங்களோட இருந்தது நேரம் போனதே தெரியலை…” என சிரித்துக்கொண்டே அவர்களை விட்டு வந்தாள் ருணதி மனதே இல்லாமல்…

அந்த நேரம் ஓடி வந்து ஒரு குழந்தை தரையில் பட்டென்று “துருவ்…” என விழ, சட்டென்று ஓடிச்சென்று தூக்கினாள் ருணதி அந்த குழந்தையை…

“துருவ்….” என அந்த மழலை அழ ஆரம்பிக்க,

“ஒன்னுமில்லம்மா… ஒன்னுமில்ல…. தரையை அடிச்சிடலாம்… இந்த தரை தான குட்டியை கீழே விழ வச்சிட்டு… அடிச்சிடலாம் என்ன…” என குழந்தையோடு குழந்தையாய் பேசியவள், தரையை பட்டென்று அடிக்க,

குழந்தை அவளை வழிந்த கண்ணீரோடு ஏங்கியபடி பார்க்க,

“அச்சோ… குட்டிம்மா… கண்ணீர் எல்லாம் வந்துட்டே… ஹ்ம்ம்… அழக்கூடாது…” என்றபடி குழந்தையின் முகத்தை தன் முந்தானையால் துடைத்துவிட்டாள் ருணதி…

ப்போது….

“நதி…. இங்க பாரு… யாரு வந்திருக்கான்னு….” என சொல்லிக்கொண்டே பவித்ரா வந்தாள் குழந்தையின் அருகே…

“அங்க பாரு… நதி… அங்க பாரு…” என காவேரியும் சிரிப்புடன் கைகாட்ட, குழந்தை அவர் கைகாட்டிய திசையில் பார்த்து கண்கள் விரிய, புன்னகை மலர,

“துருவ்…..” என சந்தோஷத்துடன் கத்த…

“நதி…… நான் வந்துட்டேன்….” என்ற ஆணின் குரலும் கேட்க, அனைவரின் பார்வையும் குரல் வந்த திசையை நோக்கி செல்ல…

அங்கே மகத் நின்றிருந்தான்…

குழந்தை அவனை பார்த்து “துருவ்….” என மீண்டும் கத்த….

யாரது என்ற பார்த்த ருணதியின் பார்வையில் அவனின் முகம் பதிய, மூச்சுவிடக்கூட மறந்து போனாள் சற்று நேரம்…

விழிகளில் நீர் சுரக்க, யாரும் பார்த்துவிடுவார்களோ என அஞ்சியவள், சட்டென்று கண்ணீரை மறைத்து, அவனை மீண்டும் பார்க்க,

அவனோ, குழந்தையை “வா…” என கண் அசைத்து, இரு கை விரித்து சொல்ல, ருணதி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மனதில் எழுந்த சிறு வலி, பெரும் உவகையுடன்…

அவளின் ஆழ்மனம் ஏனோ எழுந்து கொள்ள, அவள் அப்படியே அதில் அடங்கி போனாள்…

“துருவ்…..” என்றபடி ஓடிச்சென்றவள், அவனின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து கொள்ள, “நதி….” என அவனும் அவளை அணைத்துக்கொண்டான்…

அவனின் முகத்தினை தன் பிஞ்சு கைகளால் வருடி, கன்னத்தில் முத்தம் கொடுத்தவள்…

“ஏன் துருவ் காலையிலேயே வரலை நீ?... உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு தெரியுமா?... போ… உனக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறை இல்ல….” என குழந்தை அவனை விட்டு விலகி நிற்க,

“சாரிடா… நிறைய வேலை… அதான் வர முடியலை… நீ எந்த அளவு மிஸ் பண்ணியோ, அதே அளவு நானும் உன்ன மிஸ் பண்ணினேன் தெரியுமா?...” என அவனும் அவளிடம் விளக்கம் சொல்ல

“டாக்டரா இருந்துட்டு பொய் சொல்லக்கூடாது துருவ்… நீ என்னை மிஸ் பண்ணினியா?... நிஜமாவா?... அப்படின்னா ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணலை?...” என அவள் மீண்டும் முறுக்கிக்கொள்ள,

“நான் பொய் சொல்லலைடா ப்ராமிஸ்… இதோ பாரு… உன் போட்டோ… இதை என் பர்ஸில வச்சு டெய்லி சொல்லிப்பேன் தெரியுமா? ஐ மிஸ் யூன்னு…” என அவன் அவள் போட்டாவை எடுத்து பர்ஸில் இருந்து எடுத்துக் காட்ட…

அவள் கொஞ்சம் சமாதானமானாள்… “ஹ்ம்ம்… சரி… ஓகே… நீ என்ன மிஸ் பண்ணிருக்க… நம்புறேன்…” என்றவள் அவனை முறைத்துக்கொண்டே திரும்பி கொள்ள,

“ஹ்ம்ம்… என் நதிக்கு இன்னும் கோபம் போகலையா… சாரிடா… நதி… ஐ அம் சாரி…. ப்ளீஸ்… கோபம் வேண்டாமே….” என அவன் தன் காதை பிடித்து கெஞ்ச…

“அய்யோ… துருவ்… நிஜமாவே உன் மேல எனக்கு கோபம் இல்ல… நான் சும்மா தான் நடிச்சேன்… பட் நீ க்யூட் தெரியுமா?... நான் சொன்னதை எல்லாம் அப்படியே நம்புற… அய்யோ… அய்யோ….” என கைத்தட்டி அவள் சிரிக்கவும், அவனும் அவளை அதே புன்னகையோடு பார்த்தான்…

அவன் சிரிக்கவும், “அழகா சிரிக்குற துருவ் நீ…  ஐ லவ் யூ சோ மச்….” என அவள் தன் பிஞ்சு இதழால் அவனின் கன்னத்தில் மீண்டும் முத்தம் கொடுக்க… அவன் அவளைத்தூக்கி சுற்றினான்…

சுற்றிக்கொண்டே இருந்தவனின் பார்வையில் இல்லத்தில் இருந்தோர்களின் வரிசையில் புதிதாக ஒருத்தியும் தெரிய, சுற்றுவதை மெதுவாக ஆக்கியவனின் பார்வையில் இப்போது அவள் முழுதாக தெரிய, கால்கள் தடுமாறி, கையிலிருந்த குழந்தையையும் நழுவ விட பார்த்தவன், சட்டென்று சுதாரித்து, நதியை இறுகப்பிடித்து அணைத்துக்கொண்டான் நெஞ்சோடு…

அவனின் படபடப்பு அவன் இதயம் வழியாக ருணதிக்கு கேட்டதோ என்னவோ… அவள் தன் இதயத்தில் கைவைத்துக்கொண்ட அதே நேரம்,

இங்கே, நதி துருவிடம், “என்னாச்சு, துருவ் உனக்கு?... உன் ஹார்ட் ஃபாஸ்ட்டா துடிக்குது… என்னாச்சு?... ஏன் ஒரு மாதிரி இருக்குற?... சொல்லு….” என அவள் கீழே இறங்க முயல, அவனும் அவளை கீழே இறக்கி விட்டான்…

“துருவ்… என்னாச்சு… சொல்லு….” என நதி அழாத குறையாக அவனிடம் கேட்க…

“அச்சோ… ஒன்னுமில்லைடா… சுத்திட்டே இருந்தேன்ல… அதான் ஹார்ட் ஃபாஸ்டா துடிக்குது… தலை சுத்துற மாதிரி இருக்கா, அதான் ஒரு மாதிரி இருக்குடா… வேற ஒன்னும் இல்லடா…” என அவன் அவள் பயத்தைப் போக்க

“தலை சுத்துதா?... இரு துருவ்… நான் இப்போ வந்திடுறேன்…” என்றவள், காவேரியைத் தேடினாள்…

“பாட்டி… சீக்கிரம் வாங்க… துருவிற்கு தலை சுத்துதாம்… லெமன் ஜூஸ் போடலாம்… வாங்க…” என அவரின் கைப்பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்றாள் நதி என்று மகத் அழைத்த நதிகா…

“இவ தான் எங்க எல்லாரோட செல்லம் நதிகா… மகத் சாருக்கு அவ தான் எல்லாம்…” என குழந்தையைப் பற்றி ருணதியிடம் சொன்னாள் பவித்ரா…

“இப்படி மொட்டையா சொன்னா எப்படி பவித்ராம்மா?... சாரோட பொண்ணு நதிகான்னு சொல்லுங்க… அப்பதான புதுசா வந்தவங்களுக்கு நம்ம நதிக்குட்டி யாருன்னு தெரியும்….” என்றபடி கை நிறைய பைகளை அள்ளிக்கொண்டு வந்த வாட்ச்மேன் மாணிக்கம் சொல்ல,

“அதுவும் சரிதான் மாணிக்கம் தாத்தா…” என்றவள் “இதெல்லாம் சார் வாங்கிட்டு வந்ததா வழக்கம்போல?....” எனக்கேட்க… அவரும் ஆம் என்றபடி அதனை கொண்டு சென்றார்…

“நீங்க வாங்க ருணதி… நாம போகலாம்….” என பவித்ரா அவளை அழைக்க, அவள் அப்படியே நின்றிருந்தாள்…

“பவித்ராம்மா… இங்க கொஞ்சம் வரமுடியுமா?....” என மாணிக்கம் உள்ளிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் மாணிக்கம் தாத்தா…” என்றபடி விரைந்து சென்றாள் பவித்ரா…

பவித்ரா சென்றதும், அங்கே ருணதி-மகத் தவிர வேறு யாருமில்லை அவ்விடம்…

அவன் அவளையே இமைக்காமல் பார்த்துவிட்டு, சில நொடிகளில் தன்னுணர்வு பெற, அவளோ அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்…

“துருவ் இதை குடி…. தலை சுத்தாது…” என நதிக்குட்டி அவனிடம் ஜூஸை கொடுக்க, அவன் சிறிது குடித்துவிட்டு, போதும் என்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.