(Reading time: 18 - 36 minutes)

சில மணி நேரத்திற்கு பிறகு, அருள் இல்லத்தில்…

“என்ன ஆச்சு துருவ்?... இன்னும் தூங்காம இருக்குற?...” என நதிகா மகத்தை தேடி வந்தாள்….

“ஒன்னுமில்லடா… சும்மாதான்….” என்றபடி அவளை தூக்கி பெட்டில் வைத்தவன், அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டான்…

“துருவ்… நான் உங்கிட்ட ஒன்னு கேட்கவா?....”

“கேளுடா….”

“நீ என் அப்பாதான?....” என நதி கேட்க, அவன் அவள் கையைப்பிடித்துக்கொண்டு

“என் நதிக்குட்டிக்கு என் மேல எதோ பெரிய கோபம் போல இருக்கே…. உண்மையா?....” எனக் கேட்டான்…

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு துருவ் நீ… நீ என் அப்பாதான?...” என அவள் சற்றே சீரியஸாக கேட்க

அவனும், “நான் என் செல்லப்பொண்ணோட அப்பாதான்…. இப்போ ஓகேயா?...” என சிரித்தவண்ணம் அவனும் சொல்ல, அந்த சிரிப்பு அவள் அடுத்து கேட்ட கேள்வியில் மறைந்தே போனது…

“அப்போ என் அம்மா யாரு துருவ்?...”

சட்டென்று அவள் கேட்டுவிட்டாள்… ஆனால் அவனுக்கு தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…

இத்தனை நாள் அப்பா அப்பா என தன் காலை சுத்தி வந்த மகள் இன்று தனது தாய் யார் என்று கேள்வி கேட்டதும் ஒரு தகப்பனாக அவன் தடுமாறித்தான் போனான்…

இந்த கேள்வியை இன்றில்லாவிடினும், ஒரு நாள் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் தான்… ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவன் எதிர்பார்க்கவில்லை… அந்த அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிய,

“நான் உன்னைக் கஷ்டப்படுத்துறேனா துருவ்?... நேத்து சாயங்காலம் நான் இங்க விளையாடிட்டிருந்தேன்… அப்போ, ஒரு குட்டிப்பையனும், இன்னொரு ஆன்ட்டியும் வெளியே விளையாட்டிருந்தாங்க… அந்த ஆன்ட்டி அவனுக்கு சாப்பாடு குடுத்தாங்க… நான் பாட்டிகிட்ட அந்த ஆன்ட்டி அவனுக்கு யாருன்னு கேட்டேன்… பாட்டி அந்த ஆன்ட்டி அவனோட அம்மான்னு சொன்னாங்க… அப்போ இன்னொருத்தர் உன்னை மாதிரி நல்லா வளர்த்தியா வந்தார்… அவர் வந்ததும் அந்த பையனை தூக்கிகிட்டார்… நான் அவரையே பார்க்குறதை பார்த்து பாட்டி அவர் அவனோட அப்பான்னு சொல்லிட்டு என்னை உள்ளே கூட்டிட்டு வந்துட்டாங்க….” என அவள் சொல்லி முடிக்கவும் அவனுக்கு விஷயம் தெளிவானது….

சிறு பிள்ளை மனம் தாயைத்தேடுவதை அவன் புரிந்து கொண்டான்….

“துருவ்… இன்னைக்கு ஒரு ஆன்ட்டி வந்திருந்தாங்க பார்த்தியா?... அவங்க பேரு தெரியலை… ஆனா, நீ வந்திருந்தப்ப, காவேரி பாட்டி கூட நின்னுட்டிருந்தாங்கள்ள, எனக்கு அவங்களைப் பார்த்ததும், நேத்து அந்த பையனோட பார்த்த அந்த ஆன்ட்டி நியாபகம் வந்துடுச்சு… இந்த ஆன்ட்டி எங்கிட்ட கொஞ்ச நேரம் தான் பேசினாங்க… எனக்கு அவங்களை பிடிச்சிருந்துச்சு… ஆனா, நான் தான் அவங்ககிட்ட எதுவுமே பேசலை… ஏன் துருவ் என் அம்மா கூட இன்னைக்கு பார்த்த அந்த ஆன்ட்டி மாதிரி தான் இருப்பாங்களா?... அவங்களை மாதிரி தான் எங்கூட பேசுவாங்களா?... நான் அழுதா அப்படித்தான் என்னை சமாதானம் செய்வாங்களா?... சொல்லு துருவ்…. ப்ளீஸ்….” என நதிகா கெஞ்ச… அவன் சற்று நேரத்தில் ஆடித்தான் போனான்….

“நதி….” என அவளது பெயரை உச்சரித்தவனிடத்தில், “நான் உன் பொண்ணு நதி தானே… உன் செல்லம் தானே… அப்ப சொல்லு துருவ்….”

“……”

“நான் உன்னை அப்பான்னு எப்பவும் சொல்ல மாட்டிக்குறேன்னு தான் அம்மாவப்பத்தி சொல்லமாட்டிக்குறீயா?... சொல்லுப்பா…. அப்பா…. சொல்லுப்பா….” என அவன் கையைப் பிடித்து அவள் அழ, அவனுக்கு கண்கள் நிறைந்துவிட்டது….

“சொல்லுப்பா… ஒரு தடவை மட்டும் சொல்லு அம்மாப்பத்தி… நான் அப்புறம் எப்பவுமே அம்மாப்பத்தி கேட்கமாட்டேன்… சொல்லுப்பா… உன் நதிக்காக சொல்லுப்பா…. ப்ளீஸ்ப்பா….” என அவள் திக்கி திணறி அழ,

“நதி…. அழாதடா… ப்ளீஸ்டா… நீ அழக்கூடாது… சொன்னாக்கேளுடா… அழாத….” என அவன் அவளை சமாதானம் செய்ய,

அவளோ, “நீ ஒருதடவை மட்டும் சொல்லுப்பா… இனி நான் கேட்கவே மாட்டேன்ப்பா… ப்ராமிஸ்ப்பா…. சொல்லுப்பா….” என அவள் அழுதுகொண்டே ஏங்க ஆரம்பிக்க,

சட்டென்று அவளை அணைத்துக்கொண்டவன், “சொல்லுறேண்டா… ஆனா, நீ… நீ… அழக்கூடாது… ப்ளீஸ்டா… நீ அழுதா அப்பாவால தாங்கிக்க முடியாதுடா… ப்ளீஸ்டா… என் நதில நீ… என் பொண்ணுல… அழக்கூடாது…. சரியா?...” என மகத் தன் அவளின் முகம் பற்றி கண்ணீரை துடைத்துவிட்டு மகளின் நெற்றியில் முத்தமிட்டான்…

“ஹ்ம்ம்… சரிப்பா… அப்போ சொல்லுப்ப்பா….” என அவளும் பிடிவாதமாய் அதிலேயே நிற்க,

ஒரு நிமிடம் கண் மூடி தனக்குள் போராடியவன், பின், விழி திறந்தபோது ஏக்கத்துடன் நின்றிருந்த மலரை பார்த்தவனுக்குள் வலி பெருகியது…

ஒரு நெடிய மூச்சை வெளியேற்றவன், “உன் அம்மா என் கூட இல்லடா…” என சொல்லி முடித்ததும்,

“அம்மா சாமிகிட்ட போயிட்டாங்களா துருவ்?....” எனக் கேட்ட மகளின் முன் மண்டியிட்டவன், அவளின் வாயைப்பொத்தி, அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் கண்ணீருடன்…

தகப்பன் அழுவது பொறுக்காத மகளோ, “சாரி துருவ்…. உன்னை அழவைச்சிட்டேன்ல… சாரிப்பா… இனி அம்மா பத்தி எதுவும் கேட்கமாட்டேன்… அம்மாப்பத்தி தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்… அம்மா சாமிகிட்ட போனா என்ன?... நீ என் கூட இருக்குறல்ல… எனக்கு அது போதும்… என் துருவ் அப்பா மட்டும் எனக்கு போதும்… வேற யாரும் வேண்டாம்… நீ மட்டும் போதும்…” என்றபடி மகத்தின் கைகளுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து அவன் முகத்தினைப் பார்த்த நதியின் முகத்தில் அவனது கண்ணீர்த்துளி விழ,

“அம்மாவ மிஸ் பண்ணுறீயா துருவ்?... நீ அழாத…. இனி அம்மாப்பத்தி பேசி உன்னை கஷ்டப்படுத்தமாட்டேன்… சாரிப்பா… என் துருவ் அப்பாக்கு நான் இருக்கேன்… என் அப்பா அழவேக்கூடாது இனி… அழமாட்டல்ல துருவ்?... உனக்கு நான் இருக்கேன் துருவ்…. எப்பவும் உங்கூட இருப்பேன்… நீ அழாத… ப்ளீஸ்…” என தன் பிஞ்சுக்கரம் கொண்டு மகத்தின் கன்னங்களைத்தொட்ட கண்ணீரை துடைத்தாள், தன் கண்களில் நிறைந்த நீரோடு…

தன் கன்னங்களை ஸ்பரிசித்த மகளின் தளிர் கரத்தினைப்பிடித்தவன், அதில் இதழ் ஒற்றி, “அப்பா இனி அழக்கூடாதுன்னா, என் நதிக்குட்டியும் அழக்கூடாது… சரியா?...” என அவளிடம் கேட்க,

“சரிப்பா….” என அவளும் தலை அசைத்து அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்….

ந்நேரம்,

“ஏன்மா அழற?...” என தன் தாயின் முகத்தினை வருடிக் கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தான் குட்டி துருவ்….

“ஒன்னுமில்ல கண்ணா… அம்மா கண்ணுல தூசி விழுந்துட்டு….” என அவள் சொல்லவும்,

“அப்போ நான் ஊதுறேன்…” என தன் அழகான வாயை குவித்து அவள் கண்களில் அவன் ஊத, அவள் கண்ணீரோடு சிரித்தாள்…

“தூசி போயிட்டாம்மா….” எனக்கேட்ட மகனிடத்தில், “போயிட்டு கண்ணா….” என்றவளுக்கு கண்ணீரை அடக்கவே முடியவில்லை…

“இல்ல… உனக்கு தூசி போகலை….” என்ற துருவ்-ம் அழ ஆரம்பிக்க, அவள் அவனிடத்தில் “என் துருவ் கண்ணனுக்கு என்ன ஆச்சு?... என் குட்டிப்பையன் அழலாமா?...” எனக்கேட்க

“என் கண்ணுலயும் தூசி விழுந்துட்டு….” என அவனும் கண்ணை கசக்கிக்கொண்டே சொல்ல, மகனைத்தூக்கி அணைத்துக்கொண்டாள் அவள்…

அவளின் கண்ணீரைத்துடைத்துவிட்டவன், “நான் தூசி விழுந்துட்டுன்னு சொல்லக்கூடாதுன்னா, நீ… நீ… அழக்கூடாது… நீ அழுதா எனக்கும் அழுகை வரும்… நானும் அழுவேன்ம்மா….” என்ற மகனின் முகம் பற்றி முத்தமிட்டாள் அவள் “இனி அழ மாட்டேன்…” என சொல்லிக்கொண்டே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.