(Reading time: 18 - 36 minutes)

விடியல்…

வாழ்க்கையில் பலரை எழ வைப்பதே இந்த விடியல்தான்…

இன்று ஏதேனும் நிகழ்ந்து இதுவரை இருந்த நிலைமை மாறிடாதா என்ற எண்ணமும், முயற்சியும் தான் ஒவ்வொரு நாள் விடியலையும் சாதாரண மனிதன் எதிர்பார்க்க காரணம்…

இருக்கும் நிலை அப்படியே நீடிக்க வேண்டுமென மறுநாள் விடியலை எதிர்பார்ப்பது வசதி படைத்த மனிதனின் குணம்…

இந்த விடியல் நான் சந்தோஷமா இருக்குறேன்… அடுத்த வேளை என்னாகும் என்று தெரியாது… என அடுத்த விடியலை மிக எளிதாக எடுத்துக்கொள்பவன் தான் ஒவ்வொரு சராசரி ஏழை மனிதனும்…

ஆனால்,.. குயில்களின் ஓசை மத்தியில், இளங்காற்றின் வருடலில், அன்பானவர்களின் அரவணைப்பில் மலரோடு மலராய் வளரும் அந்த மழலைகளுக்கு ஒவ்வொரு விடியலும் இறைவன் அளித்த வரப்பிரசாதம்…

இன்று தன்னுடன் ஒரு குழந்தை உறவாக வந்தால், நாளை அது இன்னொன்றாக கூடும் என்ற உற்சாகத்தில் அந்த இல்லத்தில் வளர்கின்றனர் அவர்கள் அனைவரும்…

அது போன்ற ஒரு விடியல் அவர்களை எழுப்ப, கடவுளுக்கு அந்த நாள் இனிதாக பிறந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு தத்தமது வேலைகளை இனிதே தொடங்கினர் மழலைகள்…

“ஏண்டி… நதி… என்னாச்சு உனக்கு?... ஏன் இன்னும் வேலைக்கு கிளம்பாம இருக்குற?... சொல்லுடி… என்னடி ஆச்சு நதி?...” என கோகிலவாணி ருணதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க,

“ஒன்னும் இல்ல கோகி… சும்மா சாமி ஆடாம போ… போயி வேலையைப் பாரு…” என கண்டுகொள்ளாமல் பதில் சொன்னாள் ருணதி…

“அடியே… கிராதகி…. என்ன வார்த்தை சொல்லிட்டடி… இங்க பாருடி… நீ இப்போ என்னாச்சுன்னு சொல்லலண்ணு வை, நிஜமாவே நான் சாமி ஆடிடுவேன்… பார்த்துக்கோ…..”

“சரி… ஆடு… நானும் பார்க்குறேன்… எனக்கும் நேரம் போகும்….”

“அடிப்பாவி…” என வாயைத்திறந்த கோகியிடம்,

“போ… போய்… சாப்பாடு ரெடி பண்ணு…” என நகர்ந்தவளிடம்,

“நதி… நீ பண்ணுறது, பேசுறது, நடந்துக்குறது எதுவும் எனக்கு சரியாப்படலைடீ… இன்னைக்கு உனக்கு என்னமோ ஆகிடுச்சுடீ நதி….”

“அய்யோ… கொஞ்சம் அந்த நதின்னு சொல்லுறதை நிறுத்திறீயா?... போதும்….” என கையமர்த்தி தடுத்தவள், அவர் அவளை ஏதோபோல் பார்ப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் சட்டென்று…

குளியலைறக்குள் புகுந்து கதவை சாத்தியவளுக்குள், மகத் நேற்று நதிகாவை நதி என அழைத்தது நினைவு வர, தன்னையே நொந்து கொண்டாள்…

ரு மணி நேரத்திற்குப் பிறகு,

அவள் வேலைக்கு செல்ல தயாரான போது, “ஹ்ம்ம்மா…” என்றபடி வந்த துருவை தூக்கிக்கொண்டவள், அவனுக்கு முத்தமிட்டு விட்டு, கீழே இறக்க முயற்சி செய்த போது,

“நானும் உங்கூட வரவாம்மா?... ப்ளீஸ்ம்மா… கூட்டிட்டு போறீயாம்மா?...” எனக்கெஞ்சிய மகனிடம்,

“இல்லடா கண்ணா… அம்மா இன்னைக்கு சீக்கிரமே வந்துடுவேன்… நீ அம்மாவோட செல்லம் தானே… சமத்து கண்ணா தானே… சொன்னக்கேட்கணும்… என்ன?....” என அவளும் கொஞ்சி கேட்க,

“சரிம்மா…. நான் வரலை…” என்று கீழே இறங்க முயற்சி செய்தவனை அவள் இறக்கிவிட்டதும், ஒரு ஓரமாய் தத்தி தத்தி நடந்தபடி சென்ற மகனை வைத்தகண் வாங்காமல் பார்த்தவள், கோகிலவாணியின் திட்டினை முழுமையாக வாங்கினாள்…

“பாவி… பாவி… பச்ச புள்ள எவ்வளவு மனசு சங்கடத்தோட போதுது பாரு… உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையாடீ?... சும்மாவாச்சும் அம்மா இப்போ போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லித்தொலைக்க வேண்டியது தானேடீ… கிராதகி… பாவம் புள்ள முகம் வாடிப்போச்சுடீ… எருமைமாடே… உனக்கெல்லாம் என்னைக்கு தான் புத்தி வரப்போகுதோ தெரியலை… சே….” என அவளை வாய் வலிக்கும் வரை திட்டிவிட்டு, பேரனைத் தேடி சென்றார் கோகிலவாணி….

அவர் சென்றதும், ருணதி காவேரிக்கு போன் செய்தாள்…

“சொல்லு ருணதி… என்னம்மா விஷயம்?.... காலையிலேயே போன் பண்ணியிருக்குற?....”

“ஒரு சின்ன உதவி மேடம்… என் குடும்பத்தை நான் இன்னைக்கு இல்லத்துக்கு அழைச்சிட்டு வரலாமா மேடம்?... அவங்களும் இல்லத்தைப் பார்க்க ஆசைப்படுறாங்க…. அதான்….”

அவள் கேட்டதும், சற்று நேரம் யோசித்த காவேரி… “சரி ருணதி… அழைச்சிட்டு வா…” என்று சொல்ல

“தேங்க்ஸ் மேடம்….” என்றபடி நன்றி சொன்னவள், மகனைத் தேடிச்சென்றாள்…

“இல்ல பாட்டி… அம்மா மேல கோபம் இல்ல…. அம்மாகூட இருக்கணும்னு தோணுச்சு… நீ என் அம்மாவ திட்டாத… புரியுதா?...” என தன் சின்னக்கையை வைத்து கோகிலவாணியை மிரட்டிக்கொண்டிருந்த மகனை பெருமையுடன் பார்த்தாள் ருணதி…

“துருவ் கண்ணா…. கிளம்பலாமா?....” என கேட்டுக்கொண்டே வந்த ருணதியை கேள்வியாக பார்த்தார் கோகிலவாணி…

“போயிட்டு வாம்மா… டாட்டா….” என தன் பிஞ்சுக்கரம் கொண்டு டாட்டா காட்டிய துருவின் முன் மண்டியிட்டவள்,

“அம்மாகூட என் துருவ் குட்டியும் வரணும்… அம்மா சொன்னா என் துருவ் கண்ணா கேட்பானா?....” என தன் காதினை பிடித்துக்கொண்டே “அம்மாவ மன்னிச்சிடு கண்ணா… சாரி துருவ் குட்டி….” என மன்னிப்பு கேட்க,

“அம்மா… உன்மேல எனக்கு கோபமே வராது… நீ என் செல்ல அம்மா….” என்றபடி அவளின் கன்னத்தில் முத்தமிட்டான் குட்டி துருவ்….

“ஏண்டி… என்னடி நடக்குது இங்க…. அவன் என்னடான்னா என் அம்மாவ எதும் சொல்லாதன்னு சொல்லுறான்…. நீ என்னடான்னா கிளம்பலாமான்னு கேட்குற?... விஷயத்தை தெளிவாதான் சொல்லித்தொலையேண்டி நதி….” என கோகி தன் தலையில் கைவைக்க,

குட்டி துருவோ, “கிளுக்….” என்று சிரித்தான் அழகாய்…

“நானும் என் துருவ் குட்டியும் இப்போ இல்லத்துக்கு கிளம்புறோம்…. நீ வர்றதுன்னா வா, இல்ல இங்கேயே இரு… சொல்லு… இப்போ என்ன செய்யப்போற?...” என கேட்டுக்கொண்டே துருவின் கைப்பிடித்துக்கொண்டு சென்றவளின் பின் கிட்டத்தட்ட ஓடினார் கோகிலவாணி….

வாம்மா… ருணதி…. வா…” என வரவேற்ற காவேரியின் பார்வையில், கோகிலவாணியும், குட்டி துருவ்-ம் பட, அவர் அவர்களை ஆர்வமுடன் பார்த்தார்…

“மேடம்… இவங்க என் பாட்டி கோகிலவாணி… இவன் என் மகன் துருவன்….” என அவள் சொன்னதும்,

அவளை ஆச்சரியமாக பார்த்தார் காவேரி…

அவளுக்குத் திருமணம் முடிந்திருக்கும் என்று அவர் எண்ணியிருக்கவில்லை என்பது அவரின் ஆச்சரியத்தில் இருந்து ருணதிக்கு புரிந்தது…

மேலும் தான் தனது பயோடேட்டாவில், Marital status என்ற ஒன்றையே தந்திடாததும் அவளுக்கு நினைவு வர, காவேரியிடம் பேசினாள்…

“சாரி மேடம்… நீங்க என்ன நினைக்குறீங்கன்னு புரியுது….” என சொல்ல ஆரம்பித்தவளை இடைமறித்த காவேரி,

“உன் கணவர் என்ன பண்ணுறார் ருணதி?.... அவர் எங்க இருக்குறார் இப்போ?...” என இயல்பாக காவேரி கேட்டதும், என்ன பதில் சொல்ல என்று ருணதி அமைதியாய் இருந்த போது,

“அவர் வெளிநாட்டுல வேலை பார்க்குறார்மா…” என கோகிலவாணி சட்டென சொல்லிவிட, காவேரியும் “ஓ… நல்லது…” என்றபடி வாங்க போகலாம் என அவர்களை அழைத்துச் சென்றார்…

“வாவ்… க்யூட் குட்டி பையன்… குட்டி உன்னோட பேரு என்ன?...” என பவித்ரா துருவிடம் கேள்வி கேட்க,

அவனோ ருணதியின் முந்தானையின் பின் ஒளிந்து கொண்டு பவித்ராவை பார்த்தான்…

“துருவ் கண்ணா… இவங்க பவித்ரா… ஹாய் சொல்லு ஆன்ட்டிக்கு… வா….” என ருணதி அவனுக்கு அவளை அறிமுகம் செய்து வைக்க, மெல்ல முந்தானை மறைவிலிருந்து வெளிவந்தவன், “ஹாய் ஆன்ட்டி….” என சொல்ல, அவள் அவனின் கைப்பிடித்து குலுக்கினாள்…

“தெரியாதவங்கள்ள அதான் கொஞ்சம் பயப்படுறான்… வேற ஒன்னும் இல்ல…” என கோகிலவாணி சமாதானம் சொல்ல…

“அதனால என்ன பாட்டி… சின்னப்பசங்க அப்படித்தானே இருப்பாங்க…” என்று சொல்லி சிரித்தாள் பவித்ரா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.