(Reading time: 6 - 12 minutes)

13. கிருஷ்ண சகி - மீரா ராம்

குட்டி துருவனைத் தூக்கி கொண்டு உள்ளே வந்த மகத், நேரே அவனை நதிகாவிடம் அழைத்துச் சென்றான்…

“ஹை…. துருவ்…. எப்படி இருக்குற?....”

“திகா....” என்றழைத்துக்கொண்டே அவன் மகத்திடம் இருந்து கீழே இறங்க, அவனருகில் ஓடி சென்று நின்று கொண்டாள் நதிகா…

krishna saki

“என்னையா கூப்பிட்ட?...”

“ஆமா, திகா… ஏன்?...”

“இல்ல புதுசா பேரெல்லாம் சொல்லுற…”

“ஆமா, அம்மா பேரு அதான் உனக்கு வேற பேரு வச்சிட்டேன்…”

“ஹை… சூப்பர்… ஜாலி… ஜாலி…” என கைத்தட்டி அவள் சிரிக்க, அவளையே சிரித்த முகத்துடன் பார்த்தான் குட்டி துருவ்…

“சாப்பிட்டியா துருவ்?...”

“சாப்பிட்டேன்…. நீ?...”

“சாப்பிட்டேன்… இட்லி…”

“ஹை… நானும் இட்லி தான்…”

“ஹை… அப்போ சேம் ஸ்வீட்…”

“சாக்லேட் தான வேணும்… கண்டிப்பா தரேன்….”

“நீ அப்புறம் தா… நான் இப்போ தரேன்… இந்தா…” என அவனிடம் ஒரு பெரிய சாக்லேட்டை நீட்டினாள் நதிகா…

அதனை வாங்கிக்கொண்டு “நீ ஒரு நாளைக்கு எத்தனை சாக்லேட் சாப்பிடுவ திகா?...” என கேட்டான் துருவ்….

“ஹ்ம்ம்… அது….” என யோசித்தவள், “மூணு சாக்லேட் துருவ்…” என்றாள்…

“த்ரீ சாக்லேட்???...”

“ஹ்ம்ம் யெஸ் துருவ்….”

“இப்படி சாப்பிட்டன்னா பல்லுல பூச்சி வந்துடும்… இனி கம்மியா சாப்பிடு சரியா?...”

“அய்யோ… துருவ்… என் அப்பா டாக்டர் தான்… சோ பல்லுல பூச்சி வராது…” என அவள் சிரிக்க, அவன் மௌனமாக இருந்தான்…

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்தவள், “சரி இனி கம்மியா சாப்பிடுறேன்… உனக்காக… ஓகேயா?... இப்போ சிரிப்பியா?...” எனக் கேட்டதும் தன் அழகிய புன்னகையை வெளிக்காட்டினான் குட்டி துருவ்…

“திகா… வா… விளையாடலாம்…” என அவன் அழைக்க, அவளும் அவன் பின்னாடியே நடந்து சென்றாள்…

You might also like - Maasa... A mystery story...

கத் அதனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்போது,

“என்ன சிரிக்குறீங்க?...” என்றபடி வந்தாள் ருணதி…

“ஒன்னுமில்லை…” என்றவன் அவளிடம் அடுத்து என்ன பேச என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது,

“எதும்பேசணும்னு நினைக்குறீங்களா?...” என்று அவள் கேட்டதும்,

ஆம் என்றும் சொல்ல முடியாமல் இல்லை என்றும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான் அவன்…

அவனின் அமைதியைக் கண்டவள், தானாகவே அவனிடம் பேச ஆரம்பித்தாள்…

“உங்க வாழ்க்கைக்கு முன்னாடி என்னோடது ஒன்னுமே இல்லை… ரொம்ப சாதாரணம் தான்…” என அவள் சொல்ல

“உனக்கென்ன பைத்தியமா?... என் வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்?... அதான் பார்க்குறல்ல… நான் நல்லாதான இருக்குறேன்…”

“அதே மாதிரி நீங்களும் என்னை கண் முன்னாடி பார்க்குறீங்கல்ல, நானும் நல்லாதான இருக்குறேன்… அப்புறம் என்ன?...” என அவள் கேள்வி கேட்க, அவன் முறைத்தான் அவளை…

“நீங்க முறைச்சாலும் இதான் உண்மை…” என்றாள் அவள் அமைதியாக…

“நீ புரிஞ்சி தான் பேசுறீயா?... என் நிலை வேற?... உன் நிலை வேற ருணதி….” என அவன் சற்றே அதங்கத்துடன் சொல்ல,

“என்ன பெரிய நிலைமை… புடலங்காய் நிலைமை… நீங்க ஏன் இன்னைக்கு கோவிலுக்கு போனீங்க அப்படிங்கிற விஷயம் வரைக்கும் எனக்கு தெரியும்…” என அவள் சொல்ல, அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்…

“பவித்ரா மதர் கிட்ட என்னைப் பத்தி பேசினத எதேச்சையா ஒருநாள் நான் கேட்டுட்டேன்… அப்பதான் நீங்க இதுல இன்வால்வ் ஆகியிருக்கீங்கன்னும் புரிஞ்சது… சரி உங்களுக்கு எதுக்கு கஷ்டத்தை குடுக்கணும்… நாமளே சொல்லிடலாம்னு நினைச்சப்பதான், உங்க வாழ்க்கை முறை எனக்கு தெரிய வந்துச்சு… அன்னைக்குன்னு பார்த்து உங்க கூட வீட்டுக்கு போற நிலையும் வந்துச்சு… அதான் அன்னைக்கே நீங்க தெரிஞ்சிகிட்டா தேவை இல்லாம அடுத்து உங்களுக்கு அலைச்சல் இருக்காதுன்னு பாட்டி இருக்கும்போதே எல்லாம் பேசி, உங்ககிட்ட பாட்டியை தனியா பேச விட்டுட்டு நான் போயிட்டேன்… பட் நான் அன்னைக்கு எதிர்பார்க்காதது ஜிதேந்தர் அங்க வந்து நீங்க இரண்டு பேரும் சந்திக்க நேர்ந்ததைத்தான்…” என அவள் இலகுவாக கைகளைக் கட்டிக்கொண்டு சொல்ல, அவன் அவளை அதிசயமாக பார்த்தான்…

“பாட்டி சொன்னதை நானும் கேட்டேன்… அது உங்களுக்கு கொஞ்சம் தான் புரிஞ்சிருக்கும்… அதை முழுதா தெரிஞ்சிக்கத்தான் நீங்க இன்னைக்கு வைஜெயந்தி அத்தையை பார்க்க கோவிலுக்குப் போயிருக்கீங்க… அந்த நேரம் பார்த்து பாட்டியும் அங்க வந்தது உங்களுக்கு வசதியா போச்சு… ஒரளவுக்கு விஷயத்தை தெரிஞ்சிட்டிருப்பீங்க… என்ன சரியா?...” என அவள் புருவம் உயர்த்தி கேட்க, அவன் வாயடைத்துப்போனான்…

“இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு கேட்குறீங்களா?... நடந்ததையோ, நடக்கப்போறதையோ, இல்ல நடக்குறதையோ சொல்லுறதுக்கு நான் ஒன்னும் ஞானி இல்லை… ஆனாலும் எனக்கு உங்களைத்தெரியும்… ஒரு விஷயத்தை நீங்க எப்படி எதிர்கொள்வீங்கன்னும் எனக்கு தெரியும்… அதை வச்சு தான் சொன்னேன்… ஹ்ம்ம்… என் கெஸ் சரிதானா?... சொல்லுங்க…”

அவள் சொல்லிவிட்டாள்… கேட்டும் விட்டாள்… அவனால் தான் பதில் சொல்ல முடியவில்லை…

“இப்பவும் சொல்லுறேன்… என் வாழ்க்கை ஆராய்ச்சியை விட்டுட்டு உங்க வாழ்க்கையை பாருங்க… நதிகா பாவம்… அம்மா பாசத்துக்கு ஏங்குறா… அவளை முதலில் பாருங்க…” என அவள் சொன்னதும், அதுவரை அமைதியாக இருந்தவன் வாய் திறந்தான்…

“நதிகாவுக்கு அம்மா இருக்குறா… அதனால அவளைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம்…” என்றான் அவன் அழுத்தத்துடன்…

“ஓ… ஒகே… அதே மாதிரி துருவனுக்கும் அவன் அப்பா இருக்குறாரே… அப்புறம் எதுக்கு நீங்க கவலைப்படுறீங்க?... அவனுக்காக… அவன் அம்மாவான என் மேலயும் இவ்வளவு அக்கறை காட்டவேண்டிய நிர்பந்தம் தான் என்ன?...”

“இது நிர்பந்தம் இல்ல… எனக்கு மனசு இருக்கு… அதுல மனிதாபிமானமும் இருக்கு… எல்லாத்துக்கும் மேல நான் ஒரு டாக்டர்… உயிரைக் காப்பாத்த வேண்டியது என் கடமை…”

“வெல்… இங்க யாருக்கும் உயிர் எதுவும் ஊசல் ஆடலையே… நான் நல்லாதான இருக்குறேன்… துருவனும் நல்லாதான் இருக்குறான்… அதும் இல்லாம, நீங்க நினைக்குற என்னோட பூதாகார பிரச்சினை என்னை பொறுத்த வரைக்கும் உயிரில்லாத ஒன்னு… அதுக்கு ஒரு மண்ணும் கிடையாது… அதனால என்னையும் துருவனையும் கவனிக்கிறத விட்டுட்டு உங்களையும் உங்க வாழ்க்கையையும் பார்த்தீங்கன்னா நல்லா இருக்கும்….”

“நல்லா இருக்கணும் அப்படின்னு தான் நான் எல்லாமே செய்ய நினைக்கிறேன்…” என்றான் அவன் அதீத அழுத்தத்துடன்…

“நாசமா போனது நாசமா போனது தான்… அதை சீவி சிங்காரிச்சு மறுபடியும், நடு வீட்டுல உட்கார வைக்க முடியாது நிச்சயமா… அதை நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கன்னா சந்தோஷம்….”

“என் சந்தோஷம் எதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”

“எது???… அடுத்தவங்களுக்கு உதவி செஞ்சு தன் வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குறதா?...”

அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லும் முன்னர், காவேரி அங்கே மகத்தினை தேடி வர, அத்துடன் அவர்கள் பேச்சை நிறுத்திக்கொண்டனர்…

சில மணி நேரங்களுக்குப் பிறகு,

“நதிகா… எங்க இருக்குற?... இங்க பாரு அத்தை உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன்னு…”

“நதிகா… நதிகா….” என்றபடி பவித்ரா கையில் பொம்மையுடன் அவளைத் தேடிக்கொண்டிருந்தாள்…

“என்ன பவித்ரா… இங்க தான் எங்கயாவது இருப்பா…. உங்கூட விளையாடுறா போல…” என்று சிரித்தபடி பவித்ரா நதிகாவை தேடுவதை வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தார் காவேரி…

“இல்லம்மா… நான் இவ்வளவு நேரம் கூப்பிட்டும் பேசாம இருக்க மாட்டாம்மா….” என அவள் சற்றே கலங்கியவாறு சொல்ல,

“என்ன பவித்ரா… உன் குரலில் ஏன் இத்தனை கவலை?...”

“தெரியலைம்ம்மா… ஆனா ஒரு பயம் மனசு முழுக்க ஓடுது… நதிகா வேற….”

“இரு இரு … அவசரப்படாத… இங்க எங்கயாவது தான் இருப்பா… இரு தேடி பார்க்கலாம்…”

“துருவ் கூடதான்ம்மா விளையாடிட்டிருந்தா… துருவையும் காணோம்…”

“என்ன சொல்லுற பவித்ரா…” என்ற காவேரிக்கும் மனம் சற்றே அடித்துக்கொள்ள,

அருள் இல்லம் முழுதும் தேடினார்கள்…

இறுதியில், நதிகாவும், துருவனும் காணோம் என்ற செய்தி தான் கிடைத்தது அவர்களுக்கு….

கடவுளே… என்ன இது கொடுமை… என்றபடி கண்களை இறுக மூடினார் காவேரி….

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.