(Reading time: 20 - 39 minutes)

'நீ... என்... அம்மா இல்லை...' சில மாதங்கள் வரை சந்திரிக்காவை பார்க்கும் போதெல்லாம் இப்படியே சொல்லிக்கொண்டிருந்தான் ரிஷி. ஆனால் மெல்ல மெல்ல அவனை மாற்றியது இவர்களது பாசம். வளர வளர ஜானகியை பற்றிய நினைவுகளும் அவனை விட்டு நீங்கி போயிருந்தன.  இவர்களையே பெற்றவர்கள் என நம்ப துவங்கி இருந்தான் அவன்.

அதன் பிறகு சந்திரிக்கா பல வருடங்கள் ஜானகியுடன் தொடர்பில் இருந்ததும் நிஜம். இது  ஜானகிக்கு அந்த விபத்து நேரும் வரை ....

'அவர்கள் ரிஷியை தங்கள் மகனாக ஏற்றுக்கொள்ள வைத்தது எது? என்ன காரணம்??? ' என்று இந்த நிமிடம் வரை புரிந்ததில்லை ராமனுக்கும் வைதேகிக்கும். அதன் பிறகு அவர்களுக்கென குழந்தை பிறக்கவில்லை. ஒரு வேளை இதை முன்னமே அறிந்து தான் அந்த இறைவன் ரிஷியை தங்களுடன் அனுப்பி வைத்தானோ என்று பலமுறை சந்திரிக்கா யோசிப்பது உண்டு.

இதோ தன்னை பற்றிய இந்த உண்மைகள் எதையுமே அறியாமல், அந்த வீட்டினுள்ளே தன்னை பெற்ற ஜீவன் தனக்காக காத்திருப்பதை அறியாமல். சஞ்சாவின் வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.

சஞ்சா வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்க... 'டாடி...' அவனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டது அவனது பட்டுச்செல்லம்.

வீடு உறவினர்களால் நிரம்பிக்கிடந்தது. சிரிப்பும் கும்மாளமும், கிண்டல்களும், கால் வாரல்களும் அங்கே தொடர்ந்துக்கொண்டிருக்க சமையலறையில் நின்றிருந்த ஜானகியின் காதிலும் இவை எல்லாம் விழுந்துக்கொண்டே இருந்தன.

ஒரு கட்டத்தில் ரிஷியின் கலகல சிரிப்பொலி தனித்துக்கேட்க பெற்றவளின் இதயத்தில்  சந்தோஷ சாரல். அதன் அடையாளமாக இதழ்களில் குளிர் புன்னகை. சமயலறையில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து சற்றே எட்டிப்பார்த்த நொடியில் மகனின் முக தரிசனம். அவர் முகத்தில் நிறைவின் சாயல்.

வாழ்கையின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ரிஷியை தனது மகன் என்று சொல்லிக்கொள்ள போவதில்லை என்பது அவர் எடுத்துக்கொண்ட உறுதி. இருந்த போதும் அவனை சுமந்து பெற்ற  தாயாக அவரது  மனதின் மறைவான பிரதேசத்தில் சின்னதாக ஒரு ஆசை.

'ரிஷியின் அடி மனதில் எங்காவது என் முகம் பதிந்து இருக்குமா? நான் அவனுக்கு பரிச்சியமானவளாக தோன்றுவேனா? என்னை பார்த்ததும் ஏதாவது ஒரு உந்துதல் அவனுக்குள் ஏற்படுமா? ஒரு என்னை பார்த்து ஒரு புன்னகையாவது செய்வானா? படபடத்துக்கொண்டே இருந்தது ஜானகியின் இதயம். ஒரு பெருமூச்சுடன் மறுபடியும் சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டார் அவர்.

எல்லாரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்க அங்கிருந்து நழுவி, எல்லாவற்றையும் சுற்றி சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டே நடந்தது அந்த சின்ன முயல் குட்டி தீக்ஷா. அடுத்த சில நிமிடங்களில் நடந்தது அதன் சமையலறை பிரவேசம்.

குழந்தைகள் என்றாலே அழகு. அதிலும் பெண் குழந்தைகள் இன்னமும் அழகு. பிங்க் நிற ஸ்கர்ட்டும் டாப்ஸுமாக, இரண்டு பக்கமும் சிறகுகள் இல்லாதாது ஒன்றே குறையாக,  கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு பெரிய மனித தோரணையுடன் தனது துறுதுறு விழிகளை சுழல விட்டுக்கொண்டிருந்த அந்த குட்டி தேவதையை முதலில் பார்த்தது. ஜானகி. மகிழ்ச்சியின் உச்சம் என்றால் இதுதானா? கண்ணெதிரில், இதோ கைக்கெட்டும் தூரத்தில்  அவருடைய பேத்தி!!!!

அள்ளி உச்சி முகர துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்  ஜானகி. அவர் அருகில் மற்ற வேலைக்காரர்களும் இருக்கும் நிலையில் தேவை இல்லாமல் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல், மெல்ல நடந்து தீக்ஷாவின் அருகில் வந்தார் அவர். எதுவும் பேசாமல் அதன் முன்னால் மண்டியிட்டு அமர...

'பாட்டி..' அழைத்தது அந்த புல்லாங்குழல். அவர் வானத்தில் சிறகடித்து பறக்காதது ஒன்றே குறை.

விரல்கள் தன்னாலே பேத்தியின் கன்னம் தொட்டு வருட 'என்ன வேணும்டா செல்லம்???' அவர் குரல் கரைந்து குழைந்து ஒலித்தது. சில நொடிகள் ஆள்காட்டி விரல், தனது கன்னம் தட்ட பலமான யோசனை பட்டு செல்லத்திடம்

'எனக்கு ஒண்ணு வேணும். ஆனா அது உன் கிட்டே இருக்காது. ம்ஹூம்...' உதட்டை பிதுக்கி அது தலையசைக்க, மயங்கித்தான் போனார் பாட்டி. இந்த அழகு ஒன்றிற்காகவே நிலவையே கூட கொண்டு வந்து அவள் காலடியில் கொண்டு வந்து போடலாம்.

'அப்படி என்னதான் வேணும்... சொல்லேன்...'

'அது.. க..ட..லை... மி....ட்....டா......ய்...'  புன்னகையுடன் விரிந்தது ஜானகியின் முகம். அவரது இரண்டு மகன்களுக்குமே சின்ன வயதில் கடலை மிட்டாய் ரொம்பவும் பிடிக்கும்.

'இங்கே எல்லாம் சாக்லேட் தான் இருக்கும். கடலை மிட்டாய் இருக்காது.' இடம் வலமாக தலை ஆட்டிய படியே சொன்னது தேவதை.

அதே பாவத்துடன் சொன்னார் பாட்டி 'என்கிட்டே இருக்கே...' 

'ஹை... எங்கே???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.