(Reading time: 23 - 46 minutes)

டக்கென எழுந்து விட்டாள் அருந்ததி. 'சும்மா குழப்பிக்காதே வசி. தேவை இல்லாம நிம்மதியை கெடுத்துக்காதே பேசாமே தூங்கு' நகர்ந்து சென்று வேறு பக்கம் திரும்பி நின்றுக்கொண்டாள்.

மெல்ல எழுந்து அவள் அருகில் வந்தவன் அவள் முகம் பார்த்து இடம் வலமாக தலை அசைத்தான் 'குழப்பிக்கலே தெளிவாத்தான் இருக்கேன்..... தள்ளி தள்ளி சிதறி கிடக்குற புள்ளியெல்லாம் ஒண்ணு சேர்த்து பார்த்திட்டு இருக்கேன் அருந்ததி. புள்ளி சேர சேர மனசு உடையுது.'

அவள் உடலும் மனமும் படபடப்பின் எல்லையை தொட்டிருந்தன. 'வசி தூங்குப்பா. எதுனாலும் காலையிலே பேசிக்கலாம் ..' என்றாள் அவள் தளர்ந்த குரலில்.

'எப்படிடி தூக்கம் வரும்...' அவன் குரல் உயர, அவள் தவிப்புடன் அவன் முகம் பார்க்க  அவளது அப்பட்டமான முக மாற்றம் அவனுக்கு இன்னுமொரு விடையாக இருந்தது.

'ஸோ.. எல்லாம் உண்மைதான். உனக்கும் எல்லாம் தெரியும் அப்படிதானே???' அதான் உன் முகமே சொல்லுதே.

'இல்...லை... வ...சி .... எனக்கு எதுவும்...' அவள் முடிப்பதற்குள்...

பொய் சொல்லாதே...' இரைந்தான் அவன்.

அவள் மொத்தமாக திடுக்கிட்டு போய் அவனை பார்க்க அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை  போய்விட்டான் அவன். அவன் கோபத்தில் உள்ள நியாயம் அவளுக்கு புரியாமல் இல்லை.

ங்கே ஜானகி அம்மா உறங்கிக்கொண்டிருக்க, அவர் அருகில் இருந்த நாற்காலியில் சென்று அவன் அமர்ந்துக்கொள்ள அவனருகில் சென்று அவளும் அமர்ந்துக்கொண்டாள். அவன் கையை பற்றிக்கொள்ள அவள் முயல, உருவிக்கொண்டு கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு இருக்கையின் பின்னால் சாய்ந்துக்கொண்டு கண்மூடிக்கொண்டான். அவன் இதயத்துக்குள் தொடர் பூகம்பங்கள்.

காலை விடிந்திருந்தது. இரவு முழுதும் ரிஷி அருந்ததி என இருவருமே உறங்கவில்லைதான். எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லைதான். அங்கே சஞ்சா விட்டு சென்ற உதவியாளர் மூலமாக அறைக்கு வந்தது காபி.

'காபி குடி வசி...'

'வேண்டாம்...'

'உனக்கு தலை வலிக்குது. எனக்கு தெரியும் குடி ....'

'பச்...' கோபமாக எழுந்து செல்ல முயன்றவனை தடுத்து ஏதேதோ சொல்லி நிறுத்தி, ஒரு வழியாக காபியை அவன் வாங்கி பருகிக்கொண்டிருந்த நேரத்தில் தட்டபட்டது அறையின் கதவு. மருத்துவராக இருக்குமோ என்ற எண்ணத்துடன் அருந்ததி சென்று கதவை திறக்க அங்கே நின்றிருந்தனர் ராமனும் சந்திரிக்காவும். அவர்கள் அருகில் தீக்ஷா.

குடித்த காபி கப்பை கீழே வைத்துவிட்டு மெல்ல திரும்பியவனின் கண்கள் அவர்களை அடைய அவன் இமைகள் கீழிறங்க மறுத்தே விட்டன.. அசைவற்று போனவனாக நின்று அவர்களையே பார்த்திருந்தான் ரிஷி. உடலின் ஒவ்வொரு அணுவிலும் வலிப்பது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு.

'நீங்க என் அப்பா இல்லையாப்பா???? எப்படி கேட்பானாம் அவன். 'நான் உன் வயித்திலே பிறக்கலையாமா??? அம்மாவின் முகம் பார்த்து கேட்டு விடவும் முடியுமா அவனால். நின்றிருந்தான் உணர்வுகளே அற்றுப்போனவனாக அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

அப்பா அம்மா இருவர் மனதிலும் ஒரே கேள்வி. 'இவனுக்கு ஒரு வேளை உண்மைகள் தெரிந்து விட்டதோ???

சட்டென தன்னிலை பெற்ற சந்திரிக்காவின் பார்வை நேராக அங்கே கட்டிலில் படுத்திருந்த ஜானகியை அடைந்திருந்தது. வேகமாக ஜானகியின் அருகில் சென்று பார்த்தார் சந்திரிக்கா. 'இதயம் வெடித்து சிதறாதது ஒரே குறை' மனைவியின் முக பாவமே ராமனுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தது.

இதற்கிடையில் ஒருவன் அவர்கள் இருவரின் முக பாவங்களையும் விழி அகற்றாமல்  படித்துக்கொண்டே நிற்கிறானே அவன் நிலையை என்னவென்று சொல்ல???? அந்த முக மாற்றங்களே அவனுக்கு பல நூறு விடைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறதே அதை எப்படி சொல்ல???

மூவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு தளர்ந்து போய் நின்றிருந்தாள் அருந்ததி.  ஜானகியின் முகம் பார்த்த மறுநொடி மகனின் முகம் தேடி ஓடுகிறது சந்திரிக்காவின் பார்வை.

'ரிஷி....  ஏன்டா.... இவ்வளவு டல்லா இருக்கே...???? கொஞ்சம் பயத்தோடு கலந்து வெளிவந்தது அம்மாவின் குரல்.

'ஆங்...  த... தலை.... வலி'  

'ஏன்டா ??? அருகில் வந்து அவசரமாக அவன் அருகில் வந்து தலை கோதினார் அம்மா. 'பாரு வேர்த்து வேறே போயிருக்கு என் பிள்ளைக்கு' ஏ.சி இல்லையா??? என்றார் அவரது முந்தானையால் அவன் நெற்றி துடைத்தபடியே.

'என் பிள்ளைக்கு...' அவனை ஏதோ செய்தது.. முப்பது வயது ஆண் மகன் தான். வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளை, பல எதிரிகளை சுலபமாக கடந்து வந்தவன்தான் . ஆனால் இது????. நான் மொத்தமாக உடைந்து விடுவேனோ????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.