(Reading time: 36 - 72 minutes)

துவரை இவளது வலது காலில் வைத்துக் கொண்டிருந்தவன் அதை சற்று தள்ளி வைத்துவிட்டு இடக்காலுக்கு நகர்ந்தான்.

“இன்னும் ஐம்பது அறுபது வருஷம் அவர் கூடதான இருக்கப் போறேன்….அப்ப பேசிக்கிறேன்னு மாப்ளைக்கு பதில் சொன்ன…எனக்கு என்ன சொல்லுவ….? இன்னும் முழுசா மூனு நாள் கூட என் கூட இருக்கப் போறது இல்லையே…அப்றம் என்னை விட்டுட்டுப் போய்டுவியே…..” இவள் காலில் விழுந்த துளி விழிநீர் அகதனுடையதா இல்லை இவளுடையதா என ஒரு கணம் புரியவில்லை….

“டேய் அகி….” கண்களிலிருந்து கண்ணீர் சிந்தாமல் அடக்கி குரலை அதட்டலாக்கி தன் அண்ணனை கூப்பிட்டாள்….  இந்த ‘டேய் அகி’ வெகு அபூர்வம்தான் அவள் வரையில்…..உணர்ந்தவனாய் அகதன் இப்போது நிமிர்ந்து இவளைப் பார்த்தான்…

“ என்ட்ட அடி வாங்கப் போற பாரு…..நான் என்ன ஸ்விஸ்கு 120 வருஷமா போகப் போறேன்….மிஞ்சிப் போனா  ஒரு மாசம்…..அப்றம் இதே சென்னைல தான இருக்கப் போறேன்….எனக்கு நல்லா தெரியும்….கண்டிப்பா நீ போய் உன் மாப்ள வீடைப் பார்த்துட்டு வந்துறுப்ப…..எனக்கு அது இன்னும் எங்க இருக்குன்னு கூட தெரியாதுன்றது வேற விஷயம்….இதுல நான் உன்னைவிட்டுட்டு என்னமோ அடுத்த ப்ளனட்டுக்கு குடி போக போறமாதிரி….விட்டுட்டுப் போய்டுவியேவாம்….நீ போய் அவர் வீட்ல விட்டாத்தான் எனக்கு அவர் வீடே தெரியும் அறிவு ஜீவி……..இதுல நீ அங்க வந்து போறதுக்கு என்ன?”

“உன் மாப்ள போட்ட ட்ராமக்கு எனக்காகத்தான் நீ தலையாட்டிறுப்பன்னு எனக்கும் தெரியும்…இருந்தாலும் என்ட்ட சொல்லனும்னு உங்க ரெண்டு பேருக்கும் தோணலைல….?”

இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக இடையிட்டான் அகதன்…

“அது நீ கோபமா இருக்க வேண்டிய அவசியம் இருந்துச்சு மகி……. எங்க ரெண்டு பேருக்குமே உன்னால நடிக்க முடியும்னு தோணலை…. “ என ஆரம்பித்தவன் “எனிவே இந்த கதையை நீ மாப்ளைட்ட கேட்டுகிறதுதான் நல்லது…. இல்லைனா என் அண்ணன் கூட சொல்லிட்டான்…நீங்க என்ட்ட சொன்னீங்களான்னு அவரையும் காய்ச்சு எடுப்ப….என்னைவிட எல்லாத்தையும் அவரே உன்ட்ட சொல்றதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லதுன்னு எனக்கு படுது…உனக்கு அவரைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு….அது அடுத்தவர் வாயிலிருந்து கேட்கிறதைவிட….அவர் மூலமா கேட்டன்னாதான் அவர் மனமும்…அவருக்கு எது முக்கியம் முக்கியம் இல்லைன்றதும் உனக்கு புரியும்…”

அகதன் விளக்கிக் கொண்டு போக….” சோ நான் அவரை காய்ச்சுடக் கூடாதுன்னு விஷயத்தை எனக்கு சொல்ல மாட்டேன்னு சொல்ற…… ஆனா நீ செய்றதெல்லாம் என் நல்லதுக்காகத்தானாம்…. அவருக்காக எதுவுமே இல்லையாம்….. அவரே கூட என் வழியாத்தான் உனக்கு சொந்தமாம்….” என கொக்கியிட்டு நிறுத்தினாள் மனோகரி…

‘ஐயையோ திரும்பவும் ஆரம்பிக்காளே’ என பரிதாபமாய்ப் பார்த்தான் அகதன் இப்போது…..

அவனது மாட்டிக் கொண்ட முழியைப் பார்க்கவும் சிரித்தே விட்டாள் மனோ. “போ போ…பிழச்சுப் போ….” இவள் சொல்லவும்தான் ஹப்பாடா என்று இருந்தது அகதனுக்கு….

“நீ ஒன்னும் அவங்களை மாப்ளன்னு கூப்டனும்னு இல்லை அகி….மித்ரன்னு கூப்ட்டு அவங்களுக்கு நல்ல ஃப்ரெண்டா இருந்தா போதும்….அவங்களுக்கு உண்மையிலேயே சொந்தம்னு யாரும் இருக்ற மாதிரியே தெரியலை…..நம்ம வீடாவது அவங்களுக்கு முழுசா கிடைக்கனுமேன்னு இருக்கு எனக்கு….” இதைச் சொல்லும் போது மனோவின் குரலில் இருந்த கிண்டல் கேலி கோபம் எல்லாம் காணமல் போய் பார்வையில் இல்லாத தன்னவன் மேல் நின்ற பரிவும் பாசமும் ஆழ் காதலும் மட்டுமே அதில் நிறைந்து நின்றது.

இப்போது அகதன் மருதாணி தொடாத தன் இடக்கையால் தன் தங்கையின் உச்சந் தலையைப் பிடித்து பரிவாய் ஆட்டினான்….”இதுதான் என்னோடோ மகிக் குட்டின்றது….”

“ஓய் அதுக்காக உன் மேல இருந்த கோபம் முழுசா போய்ட்டுன்னு இல்லை…..கால்ல முடிச்சுட்டல்ல….இப்ப ஒழுங்கா கைல வச்சுவிடு…..அப்பதான்  முழுசா மன்னிப்பேன்…இல்லைனா பாதி தான் ஆமா…”

இப்பொழுது தங்கையின் கையில் மருதாணி வைக்க ஆரம்பித்தான் அகதன்….

“நீ என்ட்ட சொல்லாம அவங்க கூட சேர்ந்துட்டன்னு எனக்கு கோபமாதான் இருந்துது அகி…..ஆனாலும் நீங்க ரெண்டு பேரும்  ஒரு டீம்ன்ற அளவு சேர்ந்துக்கிறது…..உங்களுக்குள்ள அவ்ளவு ஒத்துப் போறது எல்லாம் எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு…..” இவள் சொல்லிக் கொண்டு போக இவளை முறுவலுடன் நிமிர்ந்து பார்த்தான் அண்ணன்.

“ஆனாலும் என் கண்ணு முன்னால அவங்க நிக்கிறப்ப அவங்களுக்கு மட்டும்  ஃபோன் பண்ணி பேசிட்டு காலை கட் பண்ணிடாத பின்னால….உண்மையிலேயே எனக்கு கடுப்பாகிடும் பார்த்துக்கோ….” இவள்  அந்த காட்சியை கற்பனையில் பார்த்த படியே சொல்ல அகதன் வாய்விட்டு சிரித்தான்…

“கழுத….” என்ற அகதனின் ஒற்றை வார்த்தையில் அழகாய் முடிவுக்கு வந்தது அந்த பேச்சு வார்த்தை…

“என்னடா….மாப்ள வீட்டைப் போய் பார்த்துட்டு வந்ததை பத்தி பேசிட்டு இருந்தீங்களே…” என்றபடி இப்போது உள்ளே வந்தார் அம்மா… கையில் அண்ணன் தங்கை இருவருக்குமாய் பிசைந்திருந்த சாப்பாடு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.