(Reading time: 12 - 24 minutes)

14. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

unakkaga mannil vanthen

விஷ்ணுவிடம் கூறிவிட்டு இருவரும் தன் ஸ்கூட்டியில் வீட்டிற்குக் கிளம்பினர். திவ்யா வண்டி ஓட்ட அனு பின்னால் அமர்ந்திருந்தாள்.

கிளம்பியதில் இருந்து “பாவம் இல்ல அவர். பார்க்க நல்லவராகத்தான் இருக்கிறார். இந்த மாதிரி நல்லவங்களுக்கு இந்தக் கடவுள் ஏன் இப்படி சோதனையை கொடுக்கிறார். அவரைப் பார்த்தியா நம்மிடம் பேசும் போது நம் கண்களை தாண்டி வேறு எங்கும் பார்க்கவே இல்லை, பக்கா ஜெண்டில் மேன் இல்ல. நமக்கு எல்லாம் ஒரு நாள் வீட்டில் அப்பா, அம்மா இல்லை என்றாலே எப்படி கஷ்டமா இருக்கும், ஆனால் அவருக்கு யார் என்று தெரியாது னு சொன்னார் இல்ல ரொம்ப பாவம்” என்று சின்ன குழந்தை போல் விஷ்ணுவைப் பற்றியே பேசிக்  கொண்டு வந்தாள் அனு.

திவ்யாவிற்கே அனுப் பேச்சை இப்போது நிறுத்துவாள், அப்போது நிறுத்துவாள் என்று பொறுத்துக் கொண்டு வண்டி ஓட்டிப் பார்த்தாள், அவளும் நிறுத்துவதாக இல்லை.

கோபத்தின் எல்லையைத் தாண்டிய திவ்யா, வண்டியை ஓரமாக நிறுத்தி அனுவைப் பார்த்து “கொஞ்ச நேரம் அமைதியா வர மாட்டியா, தொன தொன ன்னு. அடிக்கிற வெயிலில் ஏற்கனவே தலை வலிக்குது, நீ வேற காது கிட்ட விடாமல் பேசிக் கிட்டே வர” என்று அவள் பேசிக் கொண்டே போக, அனுவின் முகம் சுருங்கிப் போனது. கண்களில் இருந்து கண்ணீர் வருவதுதான் பாக்கி.

சிறு குழந்தை போல் அவள் முகம் வாடியதைப் பார்க்க திவ்யாவிற்கு கஷ்டமாக இருந்தது. “ஏய் லூசு, அப்படி முகத்தை வெச்சிகாத. பார்க்க சகிக்கல” என்று திவ்யா கூற, மேலும் அனுவின் முகம் வாடியது. கண்கள் கலங்கி சிறு நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

அனு எப்போதுமே இப்படிதான். சிறு குழந்தை போல் எந்த ஒரு விஷயத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டாள். யாரவது சின்னதாக அதட்டினாள் கூட பயந்து ஒளிய இடம் தேடுவாளே தவிர எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டாள். இது திவ்யாவிற்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவள் வாழ்வில் எந்தத் தவறும் நடந்து விடக் கூடாது என்று திவ்யா அவள் மேல் அப்படி ஒரு அக்கறை காட்டுகிறாள்.

அவள் கண் கலங்கியதும் உடைந்தே போனாள் திவ்யா. அவள் கோபம் எங்கே பறந்தோடியது என்றே தெரியவில்லை. கோபத்தை மறந்து சாதாரணமான குரலில் “மச்சி ஸாரி டா, காலையில் இருந்து வெயிலில் திரிந்தது டயர்டா இருக்கு. அதான் அப்படி பேசிட்டேன். அதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழர” என்றாள்.

அதற்குள் அனு கண்களில் ஓரத்தில் இருந்த கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டே “யார் அழுதா? நான் ஒன்னும் அழல. அது வெயிலுக்கு வேர்க்குது” என்று சிறு குழந்தை போல் சற்று விசும்பலான குரலில் கூறினாள்.

அனு அப்படி குழந்தை தனமாகச் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த இடத்தில் வாலியோ, வைரமுத்துவோ, இருந்திருந்தால் இந்நேரம் ஆயிரம் கவிதைகள் பிறந்திருக்கும். திவ்யா மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் இவள் சிறு குழந்தைத் தனத்திற்காகவே என்றோ இவள் கழுத்தில் கட்டாய தாளியாவது கட்டிருப்பாள் என்ன செய்வது பாவம் பெண்ணாக பிறந்து விட்டாளே.

இனி முயன்றாலும் திவ்யாவினால் கோபப்பட முடியாது. அனுவின் கண்ணின் ஓரத்தில் மீதம் இருந்த கண்ணீரை துடைத்த வாரே “ ஆமாம் நீ அழல னு பிபிசி நியுஸ்ல கூட சொன்னாங்க” என்று கூறிவிட்டு மீண்டும் ஸ்கூட்டியை கிளப்பினாள் திவ்யா.

அனு அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.

ஆனால் திவ்யாவிற்கோ மண்டைக்குள் குடைய ஆரம்பித்தது. கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை போல் ஆகிவிட்டதே. இன்றோடு பேசி, அவனை இவள்ப் பின்னால் வீணாக சுத்தாதே என்று கூறலாம் என்று பார்த்தால், பின்னால் சுத்தாதே நேராக வந்து பேசு என்று கூறிவிட்டாள். ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டால் அதற்கும் அழுவாள் என்ன செய்வது என்று தன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அனு வீட்டு வாசலில் வண்டி நின்றதும், அனு திவ்யாவிடம் “வாடி உள்ள” என்று கூறிவிட்டு தான் பர்ச்சேஸ் செய்த பொருள்களை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“ஒரு நிமிசம் நில்லு” என்று வீட்டை நோக்கி நடந்தவளை நிறுத்தினாள் திவ்யா. ஏன் என்பதைப் போல் நின்று திரும்பிப் பார்த்தாள் அனு.

“ஏன் டீ அப்படிச் சொன்ன” புரியாமல் கேள்வி கேட்பதில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தாள் திவ்யா.

“என்ன டி பேசுற. நீ கேட்ட கேள்வியில் தல வால் எதாவது இருக்க?” திவ்யா கேட்பது தனக்குப் புரியவில்லை என்பதை மற்றொரு கேள்வியின் வாயிலாகவே அவளிடம் கூறினாள் அனு.

“நான் என்னக் கேட்கிறேன் என்று உனக்கு புரியல?” மீண்டும் புரியாத மாதிரியே கேட்டாள் திவ்யா.

இல்லை என்பதைப் போல் தலை ஆட்டினாள் அனு.

“அந்த  விஷ்ணு கிட்ட என்ன சொன்ன?” என்று தான் கேட்க வந்ததை நேரடியாகவே கேட்டாள் திவ்யா.

அனுவிற்கு இப்போது புரிந்தது, திவ்யா என்ன கேட்கிறாள் என்று. அதோடு அவள் கோபமாகவும் இருக்கிறாள் என்று புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.