(Reading time: 12 - 24 minutes)

பூஜை முடிய ஒரு மணி நேரம் ஆகிவிட,அங்கேயே அமர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.

‘பூவை வாங்கின உடனே காசை கொடுக்கணும்னு பெரிய ஜமீன்தாரரா இருந்தாலும் தோணறதில்லை.இந்த சாரதி மாமா பேச்சைக் கேட்டு வந்த என்னை அழுகிப் போன தக்காளிலையே அடிக்கணும்.அப்போ தான் திருந்துவேன்’சலித்துக்கொண்டவள் பார்வையை அப்போது தான் வாயில் பக்கம் திருப்ப,பூஜையை முடித்துக்கொண்டு தாமரை மகனை அழைத்துக்கொண்டு கிளம்பியிருந்தார்.

இடுப்பில் கை வைத்து அவள் சாரதியை முறைக்க,அப்போது தான் பணம் கொடுக்காதது அவருக்கும் ஞாபகம் வர,அவசரமாய் தலையை சொரிந்தார்.

“போய் கேட்டு வாங்கி கொடுங்கோ மாமா”கண்ணாலையே கதக்களி ஆடியவள்,பணத்தை வாங்கி கொடுக்காவிட்டால் தன்னுடைய ஆத்துக்காரியிடம் போட்டுக் கொடுத்துவிடுவாள் என்பது புரிந்து போக அவர்களிடம் செல்ல போனார்.

அதற்கு முன்னாதாகவே காரிலிருந்து இறங்கிய தாமரை செவ்வந்தியை தான் இருந்த இடத்திலிருந்து கை நீட்டி அழைத்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

பணத்தை வாங்க வேண்டும் என்று அவள் அவரிடம் வர,தன்னிடம் இருந்த கவரில் இருந்த பூஜை சாமான்களை கொடுத்த தாமரை,”நீ கொடுத்த பூவை விட இதோட விலை பத்து மடங்கு அதிகம்.நீ இதை வித்து காசு பார்த்துக்க.இன்னைக்கு உனக்கு நம்ம வருமானம் தான்”என்று அவர் சொன்னது பிழையில்லை.

சொன்ன விதம் பிழையாய் போயிற்று!

காசுக்காக எல்லாரும் அன்றாடும் போராடுபவர்கள் தான்.அதில் பூ விற்பவள் தானே என்று இளக்காரமாக அவர் பேசியதும் அவர் முக பாவனையும் செவ்வந்தியின் தன்மானத்தை உசுப்பிவிட,

“அம்பாளுக்காக தான வாங்கிட்டு வந்தீங்க.அப்போ போகும் போது வேற கோவில்ல அம்பாளுக்கு மாலையை சாத்திட்டு போங்க.அதுவும் முடியலைன்னா ஒரு நாலு மணி நேரம் இதே கவர்ல வைச்சிடுங்க.பூவோட மதிப்பும் அதோட போயிடும்.வாடாமல் இருக்க  வரைக்கும் தான் எல்லாத்துக்குமே விலை இருக்கும்”என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யஸ்வந்த் காரில் இருந்து இறங்கி,அவள் முன்னே பணத்தை நீட்டினான்.

பணத்துக்காக தான் சண்டை போடுவதாக அவன் நினைத்தது அவளுக்கு புரிந்து போயிற்று.

அப்படியே நினைத்துக்கொள்ளட்டும்.அதனால் எனக்கு என்னவாகிவிடப் போகிறது  என்று எண்ணியவள் பணத்தை வாங்கிக்கொண்டாள்.அது அவளது உழைப்பிற்கான பணம்.வேண்டாம் என்று விட்டுக்கொடுக்க அவள் என்ன பிழை செய்தாள்!

முறைத்துக்கொண்டிருந்த தாமரையிடம்,”ரொம்ப நன்றி”என்று உரைத்துவிட்டு கையிலிருந்த மொத்த பணத்தையும் அவர்கள் முன்னேயே உண்டியலில் போட்டாள்.

சாரதி,’வடை போச்சே’என்பது போல பார்க்க,’மாமிகிட்ட இருக்கு உங்களுக்கு கச்சேரி’என்று அவருக்கு சேதி சொல்லிவிட்டு இன்னும் காருக்கு அருகிலையே நின்றவர்களை கண்டுகொள்ளாமல் எப்படி துள்ளலோடு வந்தாளோ,அதே துள்ளலோடு கிளம்பிவிட்டாள்.

சாரதி தாமரையிடம் மன்னிப்பு கேட்டார்.

“சின்ன பொண்ணு.கொஞ்சம் வாய்த்துடுக்கு அதிகம்”என்று சொல்ல,

“நீங்க அதுக்கு என்ன பண்ணுவீங்க”சாந்தமாக அவரிடம் சொன்ன தாமரை மகனை அழைத்துக்கொண்டு கிளம்பவும் தான் சாரதி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

பெண்களுக்கு பெண்கள் மட்டுமே எதிரி!

எங்கு சண்டை நடந்தாலும் அதற்கு முக்கிய காரணமாய் பெண்கள் தான் இருப்பார்கள் என்று எண்ணம் போக,அம்பாளை பார்த்து கன்னத்தில் நான்கு முறை தட்டிக்கொண்டவர் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினார்.

NSTகல்லூரி நுழைவாயில்

தன் அருகில் நின்று கல்லூரி நுழைவாயிலையே வெறித்துக் கொண்டிருந்த சரணை எதையெடுத்து அடிக்கலாம் என்று கொலைவெறியோடு யஷ்வந்த் பார்த்துக் கொண்டிருந்தான்.

கல்லூரி முடிந்து அரைமணி நேரமாகியும் சரண் எதிர்பார்த்து காத்திருக்கும் அவனது காதலி வந்தபாடில்லை.

அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது என்பதை பைக்கின் உறுமலில் வெளிப்படுத்தினான் யஷ்வந்த்.

பைக்கிலிருந்து சாவியை பிடுங்கிய சரண்,”கொஞ்ச நேரத்தில அவந்திகா வந்துடுவாடா.ப்ளீஸ்”என்று கெஞ்ச யஷ்வந்த் குழம்பி போனான்.

“உன்னோட ஆளோட பேர் ஹாசினின்னு தானே சொன்ன”

“ஆமாம்.இந்த அவந்திகா என்னோட அத்தை பொண்ணு”எனவும் நண்பனின் பின்னந்தலையில் இரண்டு தட்டு தட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.