(Reading time: 15 - 30 minutes)

"லிக்குதா டா, ரொம்ப சாரி என்னால தான.. ப்ச் பாவம் நீ வலில கஷ்டப்படற" என சொல்லிக்கொண்டே அந்த பெட்டியில் இருந்த மருந்துகளை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் கட்டு போட்டான்.

தான் காலையில் இருந்து நினைத்தது போலவே அவனும் தனக்காக யோசிக்கிறான் என்ற நினைப்பே ஸ்ரவந்திக்கு போதுமானதாய் இருந்தது. எழுந்து சென்று கை கழுவி வந்தவன், சாப்பிடும் வரையில் பேசாமல் அவள் செய்து வைத்திருந்த அனைத்தையும் காலி செய்தான்.

"பால் கொண்டு வரேன்' என எழுந்தவளை அடக்கி அவனுக்கும் அவளுக்கும் அவனே பாலை சுட வைத்து எடுத்து வந்தான். அவள் பருகும் வரை அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தவன் அவனும் அருந்தி விட்டு பேச தொடங்கினான்.

"மாத்திரை போட்டுக்கிட்டயா மா? வலி இப்போ பரவாயில்லை தானே?"

"ம்ம்ம் பரவாயில்லை"

"மறுபடியும் சாரி டா, காலையில ஏதோ கோவத்துல, கொஞ்சம் எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு அதான் ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டேன்"

"ஐயையோ பரவாயில்லை, என்னால உங்களுக்கு தான் கஷ்டம், தலைவலி ஏதாவது இருந்துதா? ஹாஸ்ப்பிட்டல் போற அளவுக்கு பண்ணிட்டேன்" அவள் குரலில் பதற்றமும் வருத்தமும்.

"ஹே ஹே ரிலாக்ஸ்.. நான் என்ன வேலை பார்க்கிறேன்னு கூட உனக்கு தெரியாதா?"

திருதிருவென விழித்தவள் இல்லை என தலை ஆட்ட, முதலில் சிரித்தவன் அவளை நெகிழ்வுடன் பார்த்தான்.

"உங்க பேர் கூட இங்க வந்து தான் எனக்கு தெரியும்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவளை குற்ற உணர்வுடன் பார்த்தவன் 'இவ கிட்ட எல்லாமே சொல்லி இருக்கனும்' நினைத்து கொண்டான்.

"நான் ஒரு டாக்டர் டா, நமக்கு சொந்தமா ஹாஸ்ப்பிட்டல் இருக்கு, அறுவை சிகிச்சை நிபுணர்" இதை சொல்கையில் ஒரு கசந்த புன்னகை அவனிடத்தில். வியப்பாக அவனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரவந்தி. விவரிக்க முடியாத உணர்ச்சிகள் அவள் முகத்தில்.

"இப்போ மனோதத்துவம் கூட படிச்சிட்டு இருக்கேன் டா, இந்த வருஷம் முடிச்சுடுவேன்" எதற்காக இந்த பிரிவையும் தேர்ந்துதெடுத்து படிக்கிறான் என்பது நியாபகம் வர கண்களை இறுக்கி மூடி அதை புறம் தள்ளினான்.

"உன் கால் சரி ஆனதும் கூட்டிட்டு போறேன், காலைல உன்ன பார்க்க வந்த டாக்டர் கூட நம்ம கிட்ட வேலை பார்க்கிறவங்க தான்.. நான் தான் அனுப்பி வெச்சேன்"

"ம்ம்ம்ம்" அதற்கு மேல் அவள் எதையும் கூறும் நிலையில் இல்லை. அவள் மனம் எதையோ எண்ணிக் கொண்டிருந்தது.

"ஒரு முக்கியமான ஆபரேஷன் இருந்தது இன்னைக்கு அதை முடிக்க லேட் ஆகிடுச்சு.. அதும் இல்லாம பெசன்ட் ஓட கண்டிஷன் என்னன்னு பார்த்து அவங்களை ஐ.சி.யூ-வில் இருந்து நார்மல் வார்ட்க்கு மாத்திட்டு வந்தேன்"

"ம்ம்ம்ம் அசதியா இருக்கும் தூங்கலாம் வாங்க" அவள் எழுந்திருக்க, அவன் எழுந்து அவளை கைகளில் தூக்கி கொண்டான்.

"ஐயோ கீழ..."

"ஷ்ஷ்ஷ்ஷ் எதுவும் பேசாத, கால் வலிக்கும் பேசாமல் வா" என அவளை அடக்கியவன் அவர்கள் அறையில் சென்று அவளை கட்டிலில் படுக்க வைக்கும் வரையில் அவள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.

இன்று காலையில் இருந்த வெட்கமோ, தவிப்போ, சிலிர்ப்போ எதுவும் இல்லை.

"குட் நைட் மா" என அவள் கன்னங்களை தட்டியவன் விளக்கை அணைத்து அவனும் படுத்து உறங்கி போனான். ஆனால் வெகு நேரம் தன வாழ்வில் நடந்தவற்றை எண்ணி கவலையில் உழன்றவள் தூக்கத்தில் அவள் புறமாய் புரண்டு படுத்து அவள் மேல் கை போட்ட படி தூங்கும் மிதுர்வனை அவன் அருகாமையை பாதுகாப்பை உணர்ந்த படி உறங்கி போனாள்.

பூஜை அறையில் கண்மூடி அமர்ந்திருந்தார் கனகாம்பாள். அதிகாலையே எழும் வழக்கம் உடைய அந்த காலத்து மனுஷி. விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க, ஊதுபத்தி மனமும் சாம்பிராணி மனமும் புகையும் அந்த அரை முழுவதும் நிரம்பி இருக்க, ஆளுயர முருகன் படமும் மற்ற தெய்வங்களின் படமும் பூக்களுடன் சிரித்து கொண்டிருக்க, கண்ணீருடனும் கனத்த மனதுடனும் வேண்டிக் கொண்டிருந்தார்.

தன் பேரனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமென்று எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் இப்படி வீணாய் மண்ணோடு மண்ணை போவதில் அவர் மனம் கலக்கம் கொண்டிருந்தது. அவனுடைய அம்மா மட்டும் அவனுடன் இருந்தால்? நினைத்தவர் மீண்டும் அழுது விட்டு, அந்த முருகனின் மேல் பாரத்தை போட்டு விட்டு பூஜையை முடித்து கொண்டு எழுந்து வந்தார்.

வெளியே கணக்கு பிள்ளை நின்று கொண்டிருந்தார். காலையில் பூஜை முடியும் வேலையில் சரியாக வந்து விடுவார். கனகாம்பாள் இந்த வீட்டிற்கு கல்யாணம் ஆகி வந்த புதிதில் வேளைக்கு சேர்ந்தவர். இன்னமும் அந்த குடும்பத்திற்காக உழைக்கிறார். அந்த கால பழக்க வழக்கங்களை பின்பற்றும் அந்த குடும்பத்தில் இன்னமும் கணக்கு பிள்ளையை அவர் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

மேனேஜர் தான் இந்த சுந்தரம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் இருந்தே இந்த குடும்பத்துக்கு மேனேஜர் ஆதலால் கனகாம்பாளின் மாமனார் கணக்கு பிள்ளை என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்க, இன்று வரை அவருக்கும் மேனேஜர் என யாரும் அழைத்தால் வித்தியாசமாக தான் தோன்றும். கனகாம்பாள் மட்டுமே அப்படி அழைப்பார். மத்தபடி வீட்டில் அனைவரும் மேனேஜர், சுந்தரம் அங்கிள், சுந்தரம் அண்ணா என்று தான் அழைப்பர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.