(Reading time: 11 - 22 minutes)

சிங்கக்கூட்டங்கள் நிறைந்த காட்டில் மான் ஒன்று எச்சரிக்கையோடு நடந்து செல்வதைப்  போல தன் கண்களை நாலா பக்கமும் சுழல விட்டபடி, நடுக்கத்துடன் சென்று  உணவை கையில் எடுத்தவள், புயலென ஓடி வந்து பீரங்கியினுள் பதுங்கிக் கொண்டாள்.

தன்னை யாரேனும் பார்த்தார்களா என்று பீரங்கியினுள் இருந்து தன் தலையை மட்டும் நீட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உணவுப் பொட்டலத்தை பிரித்து, பர்கரை வெளியே எடுத்தாள். என்ன மாதிரியான உணவு இது? என்று  தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு பர்கரை மென்றாள். அப்போது, உணவுப் பொட்டலத்தின்  கீழே பாலித்தின் பையில் கருப்பான பொருள் ஒன்று இருப்பதை கண்டாள்.

பர்கரை தின்றபடி, பையின் உள்ளே இருந்த பொருளை வெளியே எடுத்தாள். அது ஒரு புத்தகம் போல் இருந்தது. அந்த புத்தகத்தை வெளியே எடுத்த அவள், நொடிப்பொழுதிலேயே அது புத்தகம் அல்ல, ஒரு புகைப்பட ஆல்பம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.

ஆல்பத்தைக் கையில் எடுத்தபோது மோதிரம் ஒன்று கீழே விழுந்தது. அந்த மோதிரத்தை கையில் எடுத்த அமேலியா நீண்ட நேரமாக அதையே வெறித்துக்கொண்டிருந்தாள். மோதிரத்தின் அழகு அவளை மிகவும் கவர்ந்தது. மோதிரத்தைக் கையில் வைத்தபடியே ஆல்பத்தை புரட்டினாள்.

ராணுவ உடையில் கம்பீரமாக சிரித்துக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ். அதை உற்று நோக்கிய அமேலியாவிற்கு தன் கண் முன்னால் இறந்து போன வில்லியம்ஸின் நினைவு வந்தது. எதற்காக அவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்று யோசனை செய்தபடி அடுத்த புகைப்படத்தை திருப்பினாள்.

ஓட்டப்பந்தயத்தில்  எல்லோரையும்  விட விரைவாக ஓடிக் கொண்டிருந்த இளவயது வில்லியம்ஸின் புகைப்படம் இருந்தது. ஓ! இவர் ஓட்டப்பந்தய வீரரா என்று நினைத்துக்கொண்டாள். சிறு வயதில் பள்ளியில் தானும் மற்ற பெண் பிள்ளைகளோடு சேர்ந்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றிபெற்றது அவளுக்கு நினைவு வந்தது. அவளின் இதழ்கள் அவளையறியாமல் புன்னகை புரிந்தன. அடுத்த புகைப்படத்தை பார்த்தாள். ஓட்டப்பந்தயத்தில்  வெற்றிபெற்று பதக்கம் வாங்கியபடி சிரித்துக் கொண்டிருந்தான் வில்லியம்ஸ். 

ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் தனது உடலை வில்லென வளைத்து நிற்கும் வில்லியம்ஸ், மேலிருந்து ஜிம்னாஸ்டிக் செய்தபடி குதிக்கும் வில்லியம்ஸ் என அவனது புகைப்படங்களைக் கண்டு, இப்படியும் ஒரு விளையாட்டு உண்டா? என அமேலியா ஆச்சர்யப்பட்டாள். இந்த விளையாட்டின் பெயர் என்னவென்று தெரியவில்லையே ! அந்த உயரத்தில் இருந்து கீழே குதித்தால் கால்கள் அல்லவா  உடைந்து போகும்? என வியந்தாள்.

அமேலியா தன் நினைவுகளை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தாள். நடக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து சென்றவனா இவன்? என அவள் ஆச்சர்யமுற்றாள். அவன் எதற்காக இறந்திருப்பான் என்று ஓரளவு அவள் புரிந்துகொண்டாள். முதன் முதலாக அமெரிக்கன் ஒருவன் மேல் அவளுக்கு இரக்கம் பிறந்தது. 

அடுத்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. இதுவரை அவள் கண்டிராத சம்பவம் அது. உலகில் இப்படியும் நடக்குமா? இது என்ன? இதை எவ்வாறு அழைப்பது? அவள் சட்டென ஆல்பத்தை மூடினாள். அவள் நெஞ்சம் துடித்தது; மூச்சு வாங்கினாள்; ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மீண்டும் ஆல்பத்தை திறந்து, தான் கடைசியாக கண்ட புகைப்படத்தை பார்த்தாள். மீண்டும் அதே படபடப்பு. ஆல்பத்தை மூடிவிட்டாள்; கண்களை மூடி ஆறுதல்படுத்திக் கொண்டாள். முகம் வியர்த்தது, துடைத்துக் கொண்டாள். அவள் உடலில் இனம் புரியா ஓர் உணர்ச்சி பாய்ந்தது. இதுவரை அவள் உணராத உணர்ச்சி. தான் ஒரு பாவச் செயலை செய்துவிட்டதாக அவள் உள்ளம் பதறியது. ஆனால், மனமோ மீண்டும் அந்த பாவச் செயலை பார் என்றது. 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "ஊனமறு நல்லழகே" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

உதட்டோடு உதடு வைத்து மெய்மறந்து தன் காதலி சாராவுக்கு முத்தம் கொடுப்பதை புகைப்படம் எடுத்து வைத்திருந்தான் வில்லியம்ஸ்.

சிறு வயதில் தான் குழந்தையாய் இருந்த பொழுது உறவினர்கள் ஆசையோடு மடியில் அமர்த்தி கன்னத்தில் முத்தம் கொடுத்ததை அறிந்திருக்கிறாள். அதுவும் இந்த முத்தம் ! அவள் இதுவரை பார்த்ததும் இல்லை;கேள்விப்பட்டதும்  இல்லை. அவர்கள் காதலர்கள் என்று கூட அவளுக்கு புரியவில்லை. இருவரும் கணவன் மனைவி என அவள் எண்ணினாள்.

அடுத்தடுத்த புகைப்படத்தில் காதலர்களின் ராஜாங்கமே மிகுதியாய் இருந்தது. உலக நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருந்தான் வில்லியம்ஸ். அவற்றை எல்லாம் மாலை நேர பொன்னிற சூரிய ஒளியில் ரசித்தபடி பார்த்தாள் அமேலியா .

அந்த புகைப்படங்களில் இருந்த இடங்கள் எல்லாம் அவள் கற்பனை செய்த இடங்களோடு ஒத்துப்போனது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது. கடைசி சில புகைப்படங்களில் காதலர்களை தாண்டி ஒரு பெண்மணி அமேலியாவின் கவனத்தை ஈர்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.