(Reading time: 10 - 19 minutes)

ரவு உணவிற்காக எல்லோரும் மேஜையில் அமர்ந்திருந்தனர்.  ராகுல் அமைதியாக உட்கார்ந்திருந்த தங்கையை பார்த்தான்.

‘என்ன இவள்?! நாளைக்கு என்ன நாள்னு மறந்துட்டாளா?’ என்றெண்ணியவன்,

“சரயூ! நாளைக்கு காலேஜ் முதல் நாள்… அதுக்கு தயாரிகிட்டியா?”

“தயாராக நாளைக்கு பரிட்சையில்லை.  காலேஜுக்குதானே போகப்போறேன்”

“உங்கிட்ட போயி கேட்டேனே.. என்னை சொல்லனும்… நீயெல்லாம் நல்லா வருவ…”

இவர்களை கவனித்துக் கொண்டிருந்த ரவிகுமார்

“ராகிங்னு பற்றி ஏதாவது கேள்விபட்டியா, ராகுல்?”

“இல்லைப்பா… ஏதோ புது காலேஜ் போறாளே, நர்வஸ்ஸா இருக்கப் போறாளேனு தான் கேட்டேன்.  சரயூ ராக் பண்ணினாங்க அவ்வளவு தான்… இவள் அவங்களையெல்லாம் துரத்தி துரத்தி அடிக்கப் போறா.  நீங்க கவலையே பட வேணாம்” என்றதும் எல்லோரும் சிரித்தனர்.

“நான், உன்னை மாதிரி குழந்தையில்லை.  காலேஜ் போறதுக்காக பயப்படறதுக்கு.  போடா லூசு அண்ணா”

 “எத்தனை முறை சொல்றது? அண்ணனை மரியாதையா பேசுனு” என்று அதட்டினார் சாரதா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“கேளுங்கமா… இப்படிதான் மரியாதையில்லாம பேசுறா.  அதுவும் நீங்க இல்லாத நேரமாயிருந்தா இன்னும் அதிகமா பண்றா” என்று தன் பங்கிற்கு பேசிவிட்டு தங்கையைப் பார்த்து ரகசியமாக சிரித்தான்.

அண்ணனும் தங்கையும் அவ்வப்போது இப்படி சீண்டிக்கொள்வது வழக்கம்.  சரயூ, அவனை எப்படி அழைத்தாலும் அவனுக்கு அவள் அன்பு தங்கைதான்.  சில சமயங்களில் சரயூ மரியாதையோடு அழைத்தாலும் கூட “நான், என்ன பக்கத்து வீட்டு அண்ணாவா? இப்படி வாங்க போங்கனு சொல்லிட்டு” என்று அவளை மாற்றுவதே ராகுல்தான்.  இந்த விஷயம் ரவிகுமாரும் அறிந்ததுதான்.  ஆயினும் தன் பிள்ளைகளின் விளையாட்டை ரசிக்கவென அமைதியாக அமர்ந்திருந்தார்.

‘என்னையா மாட்டிவிடுற? இப்ப பாரு சரயூவோட ஸ்டைலையென்று’ எண்ணியவள், “அம்மா.. என்னை அதட்டுறத நிறுத்திட்டு, அவன் நேத்து என்ன பண்ணினான்னு கேளுங்க”

சாரதா, ராகுலைப் பார்க்க. அவனோ, ‘என்ன ப்ளான் பண்றா?’ என்று நினைத்தவாறு

“நான் ஏதும் செய்யலை” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

“நேத்து காலையில் அம்மா கோவிலுக்கு போனப்போ, நீ சாப்பிடாமா ஆபிஸ் போனதானே?”

“இல்லையே! நான் சாப்பிட்டேன்”

“அம்மா! இவன் சாப்பிடாமல்தான் போக தயாரானான்.  நான்தான் உங்ககிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி சாப்பிட வச்சேன்”

ஹப்பாடா… இதோடு முடிந்தது என்று நினைத்தான் ராகுல்.  ‘ஆனால் இப்படியே இதை முடிச்சிட்டா அம்மா என்னை சும்மா விடமாட்டீங்களே’ என்று மேலும் தொடர்ந்தாள், சரயூ.

“இது கூட பரவாயில்லைமா… ஆனா நீங்க சமைக்கிற மல்லிப்பூ இட்லியை கல்லுனு சொல்லிட்டான்.  அம்மாவோட அன்பு கலந்த இட்லியை இப்படி சொல்லாதடானு சொன்னேன்.  அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா?”

‘இதுக்கு மேல இவளை பேசவிட்டா, நான் காலி’ என்று குறுக்கிட்டு,

“இவள் பொய் சொல்றா.  இந்த போரிங் இட்லிலிருந்து தப்பிக்க பாக்குருயான்னு? அவள் தான் கேட்டாள்”

“போதும்…போதும்…ஒன்னு கேட்டா, சம்மந்தமே இல்லாத பத்து விஷயத்தை பேசுவீங்களே! இப்ப ஒழுங்கா சாப்பிடுங்க” என்றார் சாரதா.

“எப்படிமா?! எங்களை இவ்வளவு புரிஞ்சி வச்சுருக்க” என்று குட்டு வெளிப்பட்டதை எளிதாக ஏற்றுக்கொண்டு கேட்டாள் சரயூ.

“நான் உன்னை பெத்தவள்.  என் பிள்ளைகளை, எனக்கு தெரியாமலிருக்குமா? தினந்தோறும் உங்களை பார்த்திட்டுருக்கேனே. இன்னும் என்ன வேணும்?” என்றார் புன்னகைத்தபடி.

இவையனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்த ரவிகுமார், “எப்போதிலிருந்து புத்திசாலியான சாரதா?”

அவரை செல்லமாக முறைத்தபடி, “பிறந்ததிலிருந்து புத்திசாலிதான்.  ஆனால் உங்களை கல்யாணம் பண்ணிதான் எல்லாமே குறைந்துப்போச்சு”.

உணவின் பின் நடக்கும் வழக்கமான வேடிக்கை பேச்சுகள் முடிந்து எல்லோரும் தூங்க அவரவர் அறைக்கு சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.