(Reading time: 10 - 19 minutes)

குட்நைட் அப்பா, அம்மா” என்று சொல்லியவாறு அவர்களின் கன்னங்களில் முத்தமிட்ட சரயூ, வீட்டினுள் இருக்கும் சுழற்படிகளில் ஏறி முதல் தளத்தின் அறைக்கு ராகுலோடு சென்றாள்.  முதல் தளத்தில் ஒரு ஹாலும் அதன் இரண்டு பக்கங்களிலும் அறைகளும் இருந்தன. ஹாலிலிருந்து பால்கனியை ஒரு கண்ணாடி கதவு பிரித்தது.  அக்கண்ணாடி கதவின் திரைசீலைகள் விலக்கப்பட்டிருந்ததால் அந்த இரவின் அழகிய நிலவொளி ஹாலில் படிந்திருந்ததைப் பார்த்த சரயூவின் மனம் இயற்கையின் எழிலில் மயங்கியது.  தங்கையின் முகத்தைப் பார்த்தே அவளின் மனநிலையை அறிந்த ராகுல் ‘இவள் இப்போது தூங்கமாட்டாள். எப்படி இவளை தடுப்பது?’ என்று யோசித்தவன்

“நாளைக்கு காலேஜுக்கு முதல் நாள்னு ஞாபகமிருக்கா?  நேரத்துக்கு போக வேணிடியிருக்கும்.  இப்போ போய் தூங்குமா” என்று அவளுக்கு நினைவு படுத்தினான்.

இயற்கையை ரசிப்பதில் சரயூவைவிட யாரும் சிறந்தவர் இருக்க முடியாது என்னும் அளவிற்கு அவளுடைய ரசனை இருந்தது.  அவள் குடும்பத்தார் அவளின் இந்த ரசனையை வியந்தாலும் அதே சமயம் அவள் தன்னையும் மறந்து அதிக நேரத்தை அதிலேயே கழித்துவிடுகிறாள் என்ற வருத்தமும் கொண்டிருந்தனர்.  சில சமயங்களில் உண்ணாமலும் உறங்காமலும் இயற்கையில் மூழ்கிவிடுவாள்.  காலை பொழுதின் பறவைகளின் சத்தம் இனிது என்பவள் இரவின் ஆழமான அமைதியும் இனிது என்பாள்.  அதனால் இரவின் ஒலியற்ற அமைதியை தூங்காமல் ரசிப்பாள்.  இப்படியாக இயற்கையிடம் பிரியம் கொண்ட சரயூ இந்த இரவை பார்த்த பின்பும் தூங்குவது எப்படி சாத்தியம்.  அதனால் தான் ராகுல் மறுநாள் காலேஜுக்கு போக வேண்டும் என்று சொன்னது.

“நீ என்ன ராகுல்? சும்மா காலேஜுன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருக்க?  நான் லேட்டா தூங்கினாலும் சரியான நேரத்துக்கு காலேஜுக்கு போயிருவேன்.” என்று அண்ணனின் மனதை கண்டு கொண்டவள் அதைப் பற்றி பேசினாலும் பயனில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தாள்.

“சரிடா! உன் விருப்பம்.  ஆனால் எனக்காக கொஞ்சம் சீக்கிரமாக தூங்கு.  குட் நைட்” என்றபடி தன் அறையினுள் நுழைந்தான்.

அவசரமாக காண்ணாடிக்கதவை திறந்து பால்கனியை அடைந்தவள் தனக்கு மிகவும் பிடித்த ஊஞ்சலில் அமர்ந்து அந்த இனிய சூழலை ரசிக்க துவங்கினாள்.

எத்தனை ரம்யாமான இரவு! அழகான ஒளி பொருந்திய முத்தாக நிலவும் சிறிய வைரக்கற்களாக மின்னும் நட்சத்திரங்களும் இயற்கை மங்கையின் கறுநிற வானக்கூந்தலின் அழகைக் கூட்டியிருந்தன.  அந்த முத்திற்கு மணம் இருக்குமா?! அந்த வைரங்களை ஒருமுறையேனும் கைகளில் அள்ளிக் கொள்ள முடியுமா?! என்று வியந்தாள் சரயூ.  இந்த அழகான முத்து ஓர் அதிசயம்! எப்படி பிறக்கிறது அந்த முத்து? வானத்திலிருந்து விழும் எத்தனையோ துளிகளில் கடலில் விழும் ஒரு துளி மட்டும் சிப்பிக்குள் சேர்ந்து முத்தாகிறது.  அதுபோல் காதலும் ஒரு அற்புதம்.  எல்லோர் மனதிலும் சிப்பி இருக்க தான் செய்கிறது.  யாரோ ஒருவர் அந்த சிப்பிக்கு தகுந்த முத்தாக பொருந்திவிடும் போது காதல் வளர்கிறது.  எத்தனையோ ஆண்களும் பெண்களும் இருக்கும் இவ்வுலகில் எனக்கானவன் இவன் தான் என்றும் எனக்கானவள் இவள் தான் என்றும் எப்படி முடிவாகிறது? எந்த துளி முத்தாகிறது என்பது யாரும் அறியாதொரு இரகசியம்.  காதலின் முத்தும் இப்படி இரகசியமாய் மனதின் சிப்பியில் குடிபுகுந்து விடுகிறது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

சரயூ என்ற இந்த அழகிய முத்து யாருடைய சிப்பியில் முத்தாகும்?

முத்து ஒளிரும்…

Episode 02

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.