(Reading time: 16 - 31 minutes)

சுதீப் வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆனது… இந்த இரண்டு நாட்களும் சரயூ அவனிடம் பேசவில்லை…

திலீப்பிடம் இருந்தும் சற்று விலகியே தான் இருந்தாள்… அது திலீப்பின் கவனத்தை எட்டாமல் போகவில்லை தான்… எனினும் அவன் அமைதியாய் இருந்தான்…

கோபமோ துக்கமோ வருத்தமோ அந்த அந்த நேரத்தில் வெளிப்படுத்திவிட்டால் யாருக்குமே பாதகமில்லை… ஆனால் உள்ளுக்குள்ளேயே அதை அமிழ்த்தி வைக்கும்போது ஒருநாள் அது தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவந்து விடுகிறது…

அப்படித்தான் திலீப்பின் மனமும் அமைதியை தகர்த்துக்கொண்டு வெளிவர நேரம் பார்த்து காத்திருந்தது… அதற்கு சொல்லிவைத்தாற் போல விதியும் தன் ஆட்டத்தை ஆட தயாராகிக்கொண்டிருந்தது…

பூஜிதாவும் பிரேமிதாவும் பள்ளிக்குச் சென்ற பின்னர் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை வலிக்க ஆரம்பிக்க பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள்… மேலும் மேலும் வலி எடுக்கவே, தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அவள் நின்றபோது, காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த விசாலம் அவளைப் பார்த்தாள்…

“உடம்பு எதுவும் சரி இல்லையா?... சரி… நீ போ… நான் வேலையை பார்த்துக்குறேன்…”

விசாலம் சொன்னதற்கு பதில் கூட சொல்ல தெம்பில்லாது மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தாள் சரயூ…

அந்த நேரம் அந்தப்பக்கமாய் வந்த சுதீப், சோர்ந்து போய் அமர்ந்திருந்த சரயூவைப் பார்த்துவிட்டு, அவளருகில் சென்றான்….

“அண்ணி…. என்னாச்சு?... உடம்பு சரி இல்லையா?...”

அக்கறையுடன் விசாரித்தவனிடம், எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள பார்த்தவள், நிற்க முடியாமல் தள்ளாட,

“அண்ணி பார்த்து….” என்றபடி அவள் கைகளை பிடித்து கீழே விழாமல் காப்பாற்றினான் சுதீப்…

“என்னாச்சு அண்ணி?.. உடம்புக்கு என்ன செய்யுது?... முதல்ல உட்காருங்க…. நான் வரேன்…” என்றவன் அவளை சோபாவில் அமரவைத்துவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து, அருந்தவும் சற்று கொடுக்க, அவள் சற்று தெளிந்தாள்…

அவள் முகத்தில் தெளிவு வந்ததை கவனித்தவன், “இப்போ பரவாயில்லையா அண்ணி?...” எனக் கேட்க, ஆம் என்பது போல் தலையாட்டினாள்…

“சரி வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…. கிளம்புங்க…”

இதுவரை பேசாமல் சமாளித்தவளுக்கு இனியும் அப்படி சமாளிக்க முடியும் என தோன்றாது, அவனிடம் பேசினாள்…

“இல்ல… நான் பார்த்துக்குறேன்…”

“என்ன பார்த்துப்பீங்க நீங்க?... எதுவும் பேசாம வாங்க…”

“இல்ல… எனக்கொன்னும் இல்ல… லேசான தலைவலி அவ்வளவுதான்…”

“அதை டாக்டர் சொல்லட்டும்… நீங்க வாங்க….”

“இல்ல சுதீப்… நான் நல்லா தான் இருக்குறன்….”

“நான் வேற எதையும் கேட்க தயாரா இல்லை… இப்போ நீங்க என்னோட ஹாஸ்பிட்டல் வரீங்க… அவ்வளவுதான்…”

“டேப்லட் இருக்கு நான் போட்டுப்பேன்… ஒன்னும் ப்ராப்ளம் இல்லை…”

“அய்யோ அண்ணி… இப்படி தலைவலிக்கு நீங்களா எல்லாம் டேப்லட் போடக் கூடாது…. அது தப்பு…”

“இல்ல டாக்டர் எழுதி கொடுத்தது தான்….”

“அப்படியா?... சரி இன்னொரு முறை போய் அவர்கிட்டயே கேட்கலாம்… நீங்க கொடுத்த டேப்லட் போட்டும் எனக்கு இன்னும் தலைவலி போகலைன்னு. சொல்லி சண்டை போட்டு வரலாம்… வாங்க…”

“வீட்டுல வேலை நிறைய இருக்கு… நான் ஈவ்னிங்க் போயிக்குறேன்…”

“விசாலம்மா இருக்குறாங்கல்ல அவங்க பார்த்துப்பாங்க… நீங்க கிளம்புங்க…”

“இல்ல…” என மறுபடியும் மறுத்து பேச ஆரம்பித்த சரயூ, “இப்படித்தான் தம்பி கொஞ்ச நாளாவே தலை வலிக்குதுன்னு சுருண்டு படுத்துக்குறா… டாக்டர்கிட்ட மாசத்துக்கு ஒருதடவை செக்கப் போக தான் செய்யுறா… ஆனாலும் ஒன்னும் குணமான மாதிரி தெரியலை…”

“என்ன அண்ணி இது?... விசாலம்மா சொல்லுறது உண்மையா?..”

அவன் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாது சரயூ அமைதியாக இருக்க, விசாலம் தொடர்ந்தாள்…

“வீட்டு வேலையை நான் பார்த்துக்குறேன்… நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வாங்க...”

அதற்கு மேலும் அந்த இடத்தில் இருந்தால் நிலைமை வேறு மாதிரி போய்விடும் என்றுணர்ந்த சரயூ, “எனக்கெதுமில்லை சுதீப்… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரி ஆகிடும்… அப்படியும் தலைவலி இருந்துச்சுன்னா நான் ஈவ்னிங்க் போய்க்கிறேன்..” என்றவள் விசாலமும் சுதீப்பும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று எழுந்து தனதறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.