(Reading time: 19 - 38 minutes)

கொஞ்சம் சுருங்கி விரிந்தன அவர் கண்கள். சட்டென அவன் யாரென புரியவில்லை அவருக்கு. இத்தனை வருடங்களில் அவனது நடை உடை பாவனைகளிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறதே!!!

சில நொடிகளில் புரிந்து போனது அவருக்கு. அவனை எதிர்ப்பார்த்திருக்கவில்லை அவர். பேச்சு எழவில்லை. சில வினாடிகள் சிலையாகவே நின்றிருந்தார் அவர்.

'பேசி விடுவாரா??? அவர் என்னுடன் பேசி விடுவாரா??? பரத் அவரையே பார்த்திருக்க  மெல்ல மெல்ல மாறியது அவர் முகம். அங்கிருந்து கொஞ்சம் விலகி அங்கே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டார் அவர். அவர் இதயம் மட்டும் தறிக்கெட்டு துடித்துக்கொண்டிருந்தது.

விஷ்வாவும் பரத்தும் அவரையே பார்த்திருக்க, அவர்களை கலைத்தது அபர்ணாவின் குரல்!!!

ஆம்!!! விஷ்வாவின் அப்பாவுடன் வந்திருந்த இருவரும் அபர்ணாவும் அவளது தந்தையும்தான். அஸ்வினி அபர்ணாவின் தங்கை!!!

'கண் முழிச்சிட்டாளா விஷ்வா??? நாங்க பார்க்கலாமா???' அவள் கேட்க, பரத்தின் பார்வை அவள் மீது பதிய, அவனை பார்த்தாள் அபர்ணா.

இவன் எப்படி இங்கே??? என்ற கேள்வி அவளுக்குள் எழ..... முன்பு ஒரு முறை... பரத் பெங்களூரில் இருப்பதாக விஷ்வா சொன்னது அவள் நினைவுக்கு வர.. அவனை பார்த்து அவள்  நட்பாக புன்னகைத்தாள் அபர்ணா. அபர்ணாவின் அப்பா கூட பரத்தை சில வருடங்களுக்கு முன் ஓரிரு முறை பார்த்திருக்க கூடும். இப்போது அது அவர் நினைவுக்கு வரவில்லை.

சரியாக அந்த நேரத்தில் அவர்கள் அருகில் வந்து நின்றான் அருண். இத்தனை நேரம் அருணை கவனிக்கவில்லை அபர்ணா. அவனை பார்த்ததும் சட்டென மலர்ந்து, குளிர்ந்து போகத்தான் செய்தாள் அவள். அவள் முக பாவங்களை படிக்க தவறவில்லை பரத்.

அதே நேரத்தில் அதற்கு ஈடான சந்தோஷம் அருணிடமும் இருக்கத்தான் செய்தது. அருகில் பரத் நின்றிருக்கிறான் என்ற தவிப்பும், அபர்ணாவை தன்னவள் என்று பறை சாற்றிக்கொள்ளும் அவசரமும் அவனிடத்தில். அவளை ஒட்டி நின்றுக்கொண்டான் அவன். அதுவும் பரத்துக்கு புரியாமல் இல்லை.

சொல்லப்போனால் ஒரு பெருமூச்சுடன் சின்னதாக ஒரு ரகசிய புன்னகையும் எழுந்தது அவனிடத்தில். இந்த அவசரமும் நல்ல காதலின் அடையாளம் இல்லையா???

ஆனால் இது எல்லாம் புரிந்திருக்கவில்லை விஷ்வாவுக்கு. இன்று மாலை பேசிக்கொண்டிருந்த போது பேச்சு வாக்கில் அருண் அபர்ணாவுடன் வேலை செய்வது மட்டும் புரிந்திருந்தது விஷ்வாவுக்கு.

'நம்ம அருண்தான் நான் வர வரைக்கும் அஸ்வினி கூடவே இருந்திருக்கார் அபர்ணா. அதுவும் அவர் வேலையெல்லாம் விட்டுட்டு...அவருக்கு நாம எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் போதாது ... சச் எ நைஸ் ஜென்டில் மேன்..' விஷ்வா சொல்ல

வியப்புடன் திரும்பி அருணை பார்த்து புன்னகைத்தாள் அபர்ணா. கொஞ்சம் பெருமிதம் கலந்த பார்வை அருணிடத்தில்.

அபர்ணாவின் குரல் கொஞ்சம் தழைந்து ஒலிக்க, அவள் முக பாவத்தில் ஏதோ ஒன்று சுருக்கென தைத்தது விஷ்வாவினுள்ளே. அதற்குள் அருணின் கையை பற்றி குலுக்கி விட்டிருந்தார் அவள் அப்பா.

'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் அருண்..' அவர் குரல் கொஞ்சம் கரைய..

'அய்யோ... என்ன அங்கிள் நீங்க??? இது என்னோட கடமைன்னு வெச்சுக்கோங்களேன். வாங்க நாம போய் அஸ்வினியை பார்த்துட்டு வருவோம். அருண் சொல்ல..

அவளது அப்பா சற்று முன்னே நடக்க அபர்ணாவின் தோளில் கைபோட்டபடியே ஒரு முறை பரத்தை திரும்பி பார்த்துவிட்டு அருண் நகர, அவனது முகபாவத்தை பார்த்ததில் கொஞ்சம் திகைப்பில் மூழ்கித்தான் போனான்  விஷ்வா.

விஷ்வாவின் பக்கம் திரும்பினான் பரத். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கண்களை இறுக மூடி நின்றிருந்தான் விஷ்வா. அவனுக்கு ஏதோ புரிய துவங்கி இருக்கிறது என தெரிந்தது பரத்துக்கு.

'ஹலோ ப்ரதர்...' என்றான் பரத். விஷ்வாவை சட்டென இயல்பாக்க இதை விட பெரிய மருந்தில்லை பரத்திடம். திடுக்கென கண் திறந்தான் விஷ்வா.

'ஹேய்.. இப்போ நீ என்னை என்னன்னு கூப்பிட்டே???"

'ம்??? எருமை மாடுன்னு கூப்பிட்டேன்...' என்றான் மென்சிரிப்புடன். 'ப்ரதர்...' அந்த வார்த்தைக்காகத்தான், அந்த அழைப்புக்காகத்தான்  நீண்ட நாட்களாக ஏங்கிக்கொண்டிருக்கிறான் விஷ்வா. எப்போதும் இப்படியே அழைத்தால் என்னவாம்???

ஒரு பெருமூச்சு எழ பின்னர் மெதுவாக கேட்டான் விஷ்வா...

'ஆமாம் அருண் உன்னை பார்க்கிற பார்வையே சரி இல்லை. அபர்ணா நடந்துக்கற விதத்தை பார்த்தாலும் எனக்கு என்னவோ...'

பதில் சொல்லாமல் வேறே பக்கம் பார்க்க ஆரம்பித்தான் பரத்.

'டேய்.....'உண்மையை சொல்லு. உனக்கு இதெல்லாம் முதலிலேயே தெரியுமா???  கேட்டே விட்டான் அவன்.

'தெரியும். ஆனா தெரியாது...' என்றான் பார்வையை திருப்பாமல்

'டேய்...விளையாடாதே....நீ அவளை எப்படி விரும்பறேன்னு என்னாலே புரிஞ்சிக்க முடியுது.... ' அவன் முடிப்பதற்குள் சட்டென திரும்பி

'விடு விஷ்வா...' என்றான் கொஞ்சம் தளர்ந்து போன குரலில். 'விட்டுடு ப்ளீஸ்... எனக்கு அபர்ணா சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்'

பரத் ஒரே வரியில் முடித்துவிட நிஜமாகவே வியந்து போனான் விஷ்வா. இப்படி கூட காதலிக்க முடியுமா என்ன??? அது ஏனோ தெரியவில்லை... அருணை அபர்ணாவின் அருகில் நிறுத்திப்பார்ப்பதை கூட ஏற்றுக்கொள்ள மறுத்தது விஷ்வாவின் மனம்.

ஆனால் அவள் மனதை உடைத்து போடவும் மனம் ஒப்பவில்லையே??? யோசித்தபடியே நின்றிருந்தான் விஷ்வா. சில நொடிகள் இருவரின் மத்தியிலும் இறுக்கமான மௌனம்.

தூரத்தில் அமர்ந்து இருக்கையில் கண்களை மூடி சாய்ந்திருந்த விஷ்வாவின் அப்பாவை ஒரு முறை பார்த்துவிட்டு சற்றே தள்ளி சென்று அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான் பரத். அலையடிக்கும் மனதை கட்டுப்படுத்த அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.