(Reading time: 12 - 23 minutes)

" ஹோ எல்லாம் மகாராணியின் திருவிளையாடலா"  மனசுக்குள் பேசிக் கொண்டவன்

"சரிம்மா உடனே வாங்கிட்டு வந்திடுவேன்" சமர்த்துப் பிள்ளையாக கூறினான்.

அன்று தில்லி தமிழ் சங்கத்தில் மீனாட்சி திருக்கல்யாண சிறப்பு நிகழ்ச்சிகளின் முக்கிய பகுதியாக சுசீலாவின் செல்ல சிஷ்யை அபூர்வாவின் பரதநாட்டியம் அரங்கேற உள்ளது.

சுசீலாவின் கணவரும் சித்தார்த்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி ஐ ஏ எஸ் அதிகாரி. மத்திய அரசாங்கத்தில் மிக உயரிய பதவி வகிப்பவர். தமிழ் சங்கத்தின் புரவலரும் கூட. அவரின் வருகைக்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

"என்றென்றும் புன்னகை" என முணுமுணுத்துக் கொண்டே மாலையும் கையுமாக தமிழ் சங்கத்துக்கு சொந்தமான அரங்கத்தில் ஒப்பனைக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தான் சித்தார்த்.

"இந்தாங்க அம்மா " அவன் மாலையை நீட்டவும் சுசீலாவின் போன் அடிக்கவும் சரியாக இருக்க

"நீ அபியோட இரு சித்து...அப்பா கால் செய்றார்..வந்துட்டார் போல" என்று  அவசரமாக வெளியேறினார்.

அவர் அறையை விட்டு அகன்றதும்," ஐயோ மம்மீஈஈஈ... சந்திரமுகி  பேய் கூட தனியா விட்டுட்டு போறீங்களே..எனக்கு பயம்ம்ம்மா இருக்கே"  சிரிப்பை அடக்க மாட்டாமல் அடக்கி பயந்தது போல நடித்தான்.

"டேய்  என்ன பார்த்தா உனக்கு சந்திரமுகி பேய் மாதிரி இருக்கா"  இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிஜமாகவே சந்திரமுகி போல் முறைத்துக் கொண்டிருந்தாள்.

"இந்த காஸ்டியூம்க்கு அது தான் பொருத்தம்...இல்லைனா கான்ஜுரிங் பேய்ன்னு சொல்லிருப்பேன்"

"குடுடா மாலையை” அவன் கையில் இருந்த மாலையை பிடுங்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். அவன் இருப்பதை சட்டை செய்யாமல் கண்ணாடி முன் நின்று இப்படி அப்படி என அபிநயம் பிடித்துப் பார்த்தாள்.

அடர் பச்சையில் தங்க சரிகை இழையோட  நாட்டிய பாணியில் விஷேசமாக தைக்கப் பட்டிருந்த புடவை அவளுக்கு வெகு அழகாக பொருந்தியது..சிறு வயதில் இருந்தே பச்சை நிற ஆடை உடுத்தியே அவள் நாட்டியம் ஆடுவது வழக்கம். பச்சையும் வெள்ளையுமாக  கற்கள் பதித்த சூடாமணி ,நெத்திசூடி, காதில் அவள் அபிநயத்திற்கு ஏற்ப ஆடும் குடை ஜிமிக்கிகள். மெல்லிய இடையை மேலும் மெலிவாய் காட்டிடும் ஒட்டியாணம் கழுத்தில் ஹாரம் என அந்த தேவி மீனாட்சி வடிவாகவே இருந்தாள் அபூர்வா.

"டான்ஸ் டிரஸ்ல கொஞ்சமே கொஞ்சம்  லட்சணமா தான் இருக்கா...ஆனா இந்த சப்ப மூக்குல மூக்குத்தி தான் கொஞ்சம் அதிகப் படியா இருக்கு" கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தைப் பார்த்து மனதிலே நினைத்துக்  கொண்டிருந்தவன்

"ஏ பில்லி ( ஹிந்தியில் பில்லி  என்றால் பூனை) நாம சின்ன வயசுல தமிழ் அய்யாகிட்ட பாடம் படிச்சோமே உனக்கு நியாபகம் இருக்கா"

இவன் எதுக்கு இப்போ சம்பந்தமே இல்லாம இத கேக்குறான் என அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே

"அதுல ஒரு சங்க தமிழ் பாட்டு வருமே. வான்கோழி மயிலோட ரெக்கை எல்லாம் சொருகிகிட்டு தான் மயில்ன்னு பீலா விடுமே அந்த மாதிரி ஹாஹாஹா நீயும் ஹாஹாஹா” இம்முறை சிரிப்பை அடக்காமல் அவன் சொல்லிக் கொண்டே போக

"டேய்...உன்ன"  அவன் மேல் எதை எறியலாம் என தேட கையில் மலர் மாலை தான் சிக்கியிருந்தது அப்போது. சட்டென தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றி அவன் மீது வீசினாள்.

அவள் எதை எறிய போகிறாளோ என சுதாரிப்புடன் சற்று பின் வாங்கி தலையை குனிந்தவனின் கழுத்தில் ஜம்மென்று அவள் எறிந்த மாலை வந்து விழுந்தது.

"ஹாஹாஹா பில்லி...இப்படி மாலை போட்டெல்லாம் என்ன பாராட்டாதே...எனக்கு வெக்கமா இருக்கே"  மீண்டும் பரிகாசம் செய்து கொண்டிருந்தான்.

அப்போது பார்த்து அவன் மொபைல் ராகம் படிக்க டிஸ்பிளேவில் இருந்த பெயரைக் கண்டதும் முகமெல்லாம் சந்தோஷமாய் பூரித்துப் போனான்.

போனைக்  காதில் வைத்தவன்," நிலா பேபி சொல்லுடா செல்லம்"  என்றவாறே வலது கையால் கழுத்தில் இருந்த மலர்மாலையை எடுத்து சுவாதீனமாக அபூர்வாவின் கழுத்தில் அணிவித்து விட்டு ஜன்னல் அருகே சென்று உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தான்.

இப்போது அபூர்வாவிற்கு கோபம் தலைக்கேறியது.  நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டாள்.

பேசிக் கொண்டிருந்தவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி," ஏண்டி குத்துக்கல்லாட்டம் அக்கான்னு ஒருத்தி இருக்கேன்..ஒரு வாரமா எனக்கு போனே பண்ணல...இவன் கிட்ட என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு" என படபடவென பொரிந்தாள்.

"ஏய் பில்லி போன குடு..." என வலுக்கட்டாயமாக பிடுங்கி," சொல்லுடா என் தங்கச்சி செல்ல குட்டி...அவ கிடக்குறா வைல்ட் பில்லி" என்றான்.

போன் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம் சுசீலா அபி என்ற அழைப்புடன் வர சட்டென இருவரும் பவ்யமாக நின்று கொண்டனர்..

அப்புறம் பேசுகிறேன் என நிலாவிடம் சொல்லி விட்டு போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.