(Reading time: 12 - 23 minutes)

ருவரும் சிரித்த முகமாய் நொடி நேரத்திற்குள் காட்சி தர  ," அபி கடவுள் வாழ்த்து முடிஞ்சு உன் டான்ஸ் .. சலங்கை கட்டி ரெடியா இரு" என்று தகவல் சொல்லிவிட்டு சென்றார் சுசீலா. 

"சரி அத்தை" என்றவள் சலங்கையை பையில் இருந்து எடுத்து இரு கரங்களில் ஏந்தி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் மெல்லிய நீர் திரை லேசாக படரத் தொடங்க  அவளிடம் இருந்து அந்த சலங்கையை வாங்கி கொண்டவன் கண்களாலே அழ கூடாது என உத்தரவிட அவள் கண்ணீரும் அவன் விழியின் ஆணைக்கு அடங்கிப் போனது.

சலங்கையை கண்களில் ஒற்றிக் கொண்டவன் அவளையும் தொட்டு வணங்குமாறு சொல்ல அவளும் அவன் சொன்னபடி செய்தாள்.

அருகில் இருந்த மோடாவில் அவளை அமரச் செய்த அவன், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அவள் பாதங்களை  ஒவ்வொன்றாக தன் மடி மீது வைத்து சலங்கையைக் கட்டி விட்டான்.

அவன் கட்டி முடித்ததுமே எழுந்து நின்று ஜல் ஜல் என சப்தம்  செய்து ஒரு வித ஏக்கமான கேள்வியுடன் அவனைப் பார்க்க அவன் தன் இமைகளை மெல்ல மூடித் திறந்து  அவளின் கேள்விக்கு விடையளித்தான்.  

 "ஆல் தி பெஸ்ட் பூக்குட்டி " அவளை மெல்ல அணைத்து அவன் சொல்ல அவள் முகம் தெளிந்து புன்னகையை சிந்தி ஒளிர்ந்தது.

 அழைப்பு வரவே அவள் மேடை ஏற அவன் முதல் வரிசையில் தன் பெற்றோருடன் அமர்ந்தவன் அவள் நடனத்தில் லயித்தான்.

ங்க நிற வண்ணப்பூக்கள் தூவிய பச்சை நிற பட்டாடை உடுத்தியே சிரசில் மகுடமென பனிக்கிரீடம் சூட்டிக் கொண்டிருந்தாலோ இயற்கை.   சலசலவென நதி சங்கீதம் பாட அதன் கரை ஓரம் இருந்த நெடிய மரங்கள் தலையசைத்து ஜதி சொல்லின.  

ஆங்காங்கே செம்மறி ஆடுகளும் கோவேரி கழுதைகளும் இனபேதம் இல்லாமல் அங்கிருந்த பசும் புல்வெளிகளில் ஆனந்தமாக மேய்ந்து கொண்டிருந்தன.   அந்த மலைக்கிராமத்தில் அங்கங்கே சிறு சிறு வீடுகள். பெண்கள் விறகுகளை சுமந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தி சாயும் வேளை.

ஐந்து வயது சமீர் தன் தாயுடன் அந்த நதிக்கரை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்தான். நதியின் ஓரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கே இருந்த பாறையில் நீல வண்ண அழகிய பறவை ஒன்றைக் கண்டதும் கண்கள் மின்ன ப்ரகாசமானான்.

இந்தப் பறவை சில நாட்களாகவே அவ்வப்போது அங்கு தோன்றுவதும் உடனே மறைந்து விடுவதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.. இன்று எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் சட்டென்று தன் அன்னையின் கரம் விடுத்து அப்பறவையை நோக்கி ஓடினான்.

திடீரென மகன் கையை விட்டு செல்லவும் திரும்பிப் பார்த்த அவன் அன்னை அவர்களின்  பாஷையில்

"சமீர் எங்கே போற ஓடாத நில்லு" என்று கூறிக் கொண்டே விறகுகளை கீழே போட்டவள் அவன் பின்னே சென்றாள்.

"மா அந்த குருவியை பிடிக்க போறேன்"

அவன் துரத்தி வருவதைக் கண்டதும் அக்குருவி நதியின் மேலே பறந்து செல்ல அதன் பின்னே நதிக்குள் துரத்திக் கொண்டே சென்றவனை சுழல் ஒன்று சட்டென தன்னுள் விழுங்கி கொண்டது.

பின்னோடே ஓடி வந்த  மற்ற பெண்களும் இந்தக் காட்சியைக் கண்டு கூச்சலிட்டனர். சமீரின் அன்னை செய்வதறியாது கலங்கி துடித்து நின்ற நொடி கரையை நோக்கி ஓர் உருவம் சமீரை சுமந்து வருவதைக் கண்டு அங்கு விரைந்தாள்.

"என் மகன்...அவனுக்கு ஒன்னுமில்லையே" அவள் அந்த உருவத்திடம் கண்களில் நீர் வழிய கேட்க அவ்வுருவம்  பதில் ஏதும் சொல்லாமல் சிறுவனை தலை குப்புற படுக்க வைத்து முதுகில் அழுத்தவே சிறுவன் வாயில் இருந்து நீர் வெளியேற சிறிது நேரத்தில் சுரணை பெற்றான் . கண் விழித்துக் கொண்டான்.

பல நாட்களாக பராமரிக்கப் படாத ஜடாமுடியும் முகம் முழுதும் தாடியும் கந்தலான அங்கங்கே கிழிந்திருந்த உடையும் பல நாள் பட்டினி கிடந்ததன் அடையாளமாய் மெலிவுற்ற தேகமுமாய் அந்த உருவம் ஒரு மனிதன் தான் என்று அங்கிருந்தோர் அறிந்து கொண்டனர்.

சமீர் கொஞ்சம் தெளிந்ததும் மெதுவாக அமர்ந்தான். தான் சுழலில் மாட்டியபோது ஒரு கரம் தன் முடியைக் கொத்தாக பிடித்தது வரை அவனுக்கு நினைவு இருந்தது.

நீர் சொட்டிக் கொண்டிருந்த அந்த மனிதன் தான் தன்னை பிடித்து இழுத்தது என்று சிறுவன் அவனும் தெரிந்து கொண்டான். அச்சிறுவன் மனதில் அந்த மனிதன் பால் அன்பு சுரந்தது.

"நீங்க யாரு" சமீர் கேட்க அந்த மனிதன் எதுவுமே பதில் அளிக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

"மா இவரு ஏன் பேச மாட்றாரு" தன் அன்னைக்கு தெரியுமோ என சமீர் கேட்க அருகில் இருந்த பெண்களில் ஒருத்தி

"வாய் பேச முடியாதோ என்னவோ...காதும் கூட கேக்குதான்னு தெரியலையே" அவள் கண்டுபிடித்ததை சொல்லவே தன் கைகளை தட்டினான் சமீர். அந்த மனிதனிடம் இருந்து ஒரு எதிர்வினையும் இல்லாததால் அவன் செவிகளும் செயல் இழந்து போயின என்று அறிந்து கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.