(Reading time: 21 - 41 minutes)

ணவகத்தின் தரையில் இருந்த தூசி உட்பட அனைத்தையும் இரண்டே நிமிடத்தில் பார்த்து பார்த்து அலுத்துவிட்டதால், வானத்தின் அடியிலிருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள் வர்ஷினியிடம். வர்ஷினியோ, இந்த இரு புதியவர்களையும் அவ்வப்போது பார்த்துக்கொண்டே பேசினாள். அவர்கள் இருப்பதால் தனது இயல்பான பண்பைக் காண்பிக்கத் தயக்கம் காட்டுகிறாள் வர்ஷினி எனப் புரிந்துகொண்டார்கள் ஆண்கள் இருவரும்.

மெல்ல ப்ரியாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் ப்ரனிஷ். முதலில் யோசித்தாலும், பின் அவனது தோற்றம் ஒரு நம்பகத்தன்மையைத் தந்ததால் பேச ஆரம்பித்தாள் ப்ரியா. இருவரும் பரஸ்பரம் அறிமுகமான பின்னர் மற்ற இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தனர். ஆனால், பேசியது என்னவோ ப்ரனிஷும் ப்ரியாவும் தான்.

வர்ஷினிக்கு அறியாதவர்களிடம் பேச ஏதோ தடுத்தது. அது மட்டுமில்லாமல், யாதவ் அவளைப் பார்த்த பார்வை தன் நெஞ்சை ஊடுருவுவது போல உணர்ந்தாள்.

பெண்களிடம் இருக்கும் ஒரு உள்ளுணர்வு எப்போதுமே ஒரு ஆண் நம்மைப் பார்க்கும் பார்வையை வைத்தே மேற்கொண்டு எப்படி பழக வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்திவிடும். அவ்வாறே, யாதவின் பார்வையில் தன் மனம் படபடக்கக் கண்டாள் வர்ஷினி. ஆனால் இன்னதென்று அறிந்துகொள்ள அந்தப் பேதைக்கு அப்போது முடியவில்லை.

யாதவிற்கோ, வர்ஷினியிடம் இன்று எப்படியேனும் தன் காதலை சொல்ல வேண்டும் என்னும் படபடப்பு, அதைக் கூறியவுடன் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் கூடிய பயம்.

காதலிக்கும் பலர் தன் காதலர் அல்லது காதலியிடம் அதனைத் தெரிவிக்கத் தயங்குவது, அந்தக் காதல் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுமோ என்ற பயம் தானே? அந்த பயம் யாதவிற்கும் தொற்றிக்கொண்டதில் வியப்பென்ன?

இவர்கள் இருவரது மனப் போராட்டம் புரியாமல்/புரிந்துகொள்ள விரும்பாமல் ப்ரனிஷும் ப்ரியாவும் தங்களது வாழ்நாள் கதையைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கியிருந்தனர். (ப்ரனிஷ், சுயசரிதை எழுதவா இங்க வந்தீங்க? அதோ எங்களைக் காப்பாற்றும் விடிவெள்ளி தெரிகிறது. பணியாளர் வருகிறார் இவர்களை நோக்கி)

சர்வர் வந்ததும் பேச்சு நின்று, அனைவரும் கைக்கும் வாய்க்குமான கைகலப்பை ஆரம்பித்தனர். வர்ஷியும் ப்ரியாவும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ப்ரனிஷ் யாதவைப் பார்த்து சைகை செய்தான், ‘அவர்கள் எழுந்து செல்வதற்குள் சொல்லுடா’ என்று. பயம் ஆட்கொள்ள, மாட்டேன் என்று தலையசைத்தான் யாதவ். ‘உன்னை’ என தன் பற்களை யாருமறியாமல் கடிக்கத்தான் முடிந்தது ப்ரனிஷால்.

இனி யாதவ் இயம்புவான் என்று தோன்றாததால், சாப்பிட்டு முடித்து வர்ஷினியும் ப்ரியாவும் விடைபெற்று வெளியேறப்போன ப்ரியாவை விளித்தான் ப்ரனிஷ். என்னவென்று கண்களாலேயே வினவி ப்ரியாவும் மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள். அவளைக் கண்டு வர்ஷினியும் அமர்ந்தாள்.

“இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு நீ உதவி செய்வாய் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்” என முன்னுரை எழுதினான் ப்ரனிஷ்.

வெளியில் தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் மனமும் உடலும் தந்தியடித்தது அவன் மட்டுமே அறிந்தது. பின்பு, இதுவரை யாரிடமும் காதல்மொழி கூறாதவனை இன்னொருவன் காதலுக்கு தூது போக சொன்னால்?

 ‘ஏதோ பெரியதாக கூறப்போகிறான்’ என உணர்ந்தாள் ப்ரியா; இருந்தாலும், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அறியாதவரையில் எந்த முடிவுக்கும் வரவேண்டாம் எனப் பொறுமை காத்தாள். வர்ஷினியோ, எதுவும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

ப்ரியாவும் சரி, வர்ஷினியும் சரி, யாரையும் காதலிக்கவில்லை என்பதை ப்ரனிஷ் இருவருடனும் பேசியபோதே அறிந்து வைத்திருந்தான்.

“ப்ரியா, அதாவது, நான் சொல்வதை தப்பா எடுத்துக்காத….”

வர்ஷினியின் பார்வை குழப்பமடைந்தது. ப்ரியாவின் பார்வை கூர்மையாயிற்று. அவள் ஏதோ பேச வாயெடுக்க,

“சொல்ல வேண்டியவற்றை சொல்லிடறேன். அதன் பின் பேசு” எனக் கூறித் தடுத்தான் ப்ரனிஷ்.

“இப்போ நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ் தான? சோ….” (இந்தப் பட்டம் ப்ரியா தந்ததா அல்லது தாங்கள் பறித்ததா குருவே???)

“ஸோ???” என கோபத்துடன் கேட்டாள் ப்ரியா. ‘சொல்லு சொல்லு… அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி’ என்பது தான் அதன் அர்த்தம் எனப் புரிந்துகொண்டு, தன் இஷ்டதெய்வத்தை ஒரு முறை நினைத்து, ‘இப்போ தெரியுது இவன் ஏன் மாட்டேன்னு சொன்னான்னு. இந்த முறை எங்களை காப்பாற்றிவிடு தெய்வமே! இனிமேல் யார் காதலுக்கும் தூது போகவே மாட்டேன்’ என வேண்டிக்கொண்டு, தன்னை நோக்கிக்கொண்டிருந்த மூன்று ஜோடிக்கண்களைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.