(Reading time: 21 - 41 minutes)

 03. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

ர்ஷினியின் வீட்டில் நமது ப்ரியாவும் வர்ஷினியும் டூயட் பாடிக்கொண்டிருந்தனர், கனவில் அவரவர் நாயகர்களோடு. (சொல்லவே இல்ல?)

அலாரம் காதினுள் தன் தேன்போன்ற இசையை அரங்கேற்ற, தூக்கம் கலைந்து எழுந்தது வர்ஷினி; சோம்பல் முறித்து தயாராகி வந்து உறங்கும் ப்ரியாவை எழுப்பினாள். ஆனால் அவளோ, புரண்டு படுத்து இன்னும் நன்றாக உறங்கத் துவங்கினாள். “இவளுக்கு நம்ம அஞ்சலி பட ரூட் தான் சரிப்பட்டு வரும்” என முடிவு செய்து உலுக்க ஆரம்பித்தாள் வர்ஷினி.

“எழுந்திரு ப்ரி! எழுந்திரு!” என அவள் உண்டியலாய் உலுக்கியதில் நித்திராதேவி தன்னுடனான ஒப்பந்தத்தை முறிக்க, வேறு வழி இல்லாமல் தன் கண்ணிமைகளைப் பிரித்தாள் ப்ரியா.

“சே, நல்ல கனவு. ஏன்டி என்னை இப்போ எழுப்பின?”

“அப்படி யார் வந்தா?“ எனத் தன் தோழியின் கனவில்வரும் அனைத்து நடிகர்களையும் அகரவரிசையில் கேட்டாள் வர்ஷினி.

“இவங்க யாருமே இல்லை. யாருன்னு முகம் கூட தெரியல. பட் மங்கலா தெரிந்தாலும் செமயா இருந்தான்டி” என்றுவிட்டு மீண்டும் கனவினுள் சென்று லயிக்க ஆரம்பித்தாள் ப்ரியா.

இதனைக் கண்ட வர்ஷினி தன் இரு கரம் குப்பி, “அம்மா தாயே, நீ நைட்டு எப்படி வேணாலும் கனவு காணு. இப்போது உன் அண்ணன் வருவதற்குள் ரெடியாகு.”

“அண்ணா எப்போ வருவேன்னு சொன்னாருடா?” எனக் கேட்டுக்கொண்டே ப்ரியா குளியலறை நோக்கி சென்றாள், தன் கைப்பையில் இருந்து எடுத்த மாற்றுடைகளுடன்.

“ஏழு மணிக்கு வருவதாக சொன்னாருமா” என்று கதவை சாற்றிவிட்டுச் சென்றாள் வர்ஷினி.

மீண்டும் ஒரு குளியலை முடித்துவிட்டு ப்ரியா வெளியே வரவும், வர்ஷினி கையில் இரு திண்பண்ட தட்டுகளுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“இது snacks-ஆ டின்னரா செல்லம்?” எனப் புருவம் உயர்த்திக் கேட்டாள், வர்ஷினி கொண்டுவந்ததைப் பார்த்து.

“என்ன கிண்டலா? இது எல்லாமே நீயே சாப்பிடனும்னு சொல்லிருக்காங்க. அதனால் என்னை பங்குக்கு கூப்பிடாம சாப்பிடனும்” என்று போலியாய் மிரட்டினாள் அவளது தோழி, ப்ரியாவிடம் ஒரு தட்டை நீட்டிக்கொண்டே. ஏனென்றால் ப்ரியா எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுபவள்.

“கொஞ்சம் நீ எடுத்துக்கடா” என எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் வர்ஷினி உதவி எதுவும் செய்யாததால், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, “ஹாலில் அமர்ந்து சாப்பிடலாமா?” எனக்கேட்டு தொலைக்காட்சியின் முன் சென்று சரணடைந்தாள் ப்ரியா. ப்ரியாவின் சிறுப்பிள்ளைத்தனமான செய்கையைக் கண்டு சிரித்துக்கொண்டே அவள் அருகில் அமர்ந்து தன் பங்கை சுவைக்க ஆரம்பித்தாள் வர்ஷினி.

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த நேரம், உள்ளிருந்து வர்ஷினியின் அம்மா குரல் கொடுக்க, என்னவென்று கேட்டுக்கொண்டே சமையலறையுள் நுழைந்தாள் வர்ஷினி. அதேநேரம் வாசலில் அழைப்புமணி ஒலிக்க, தன் கையிலிருந்த கடைசித் துண்டை மென்றுகொண்டே கதவைத் திறந்தாள் ப்ரியா.

எதிரே நின்றிருந்தவனை அப்படியே வாய்திறந்து பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள் ப்ரியா, ‘இவனா?’ என்ற கேள்வியோடு. அவனோ, அவளையும் அவள் நின்றிருந்த தோற்றத்தையும் கண்டு வெகுவாக சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரித்ததன் காரணம், ப்ரியா வாய் நிறைய பஜ்ஜியுடன் ஆவென வாய் பிளந்து நின்றிருந்தாள்.

அழைப்புமணியின் ஓசையாலும் அதைத் தொடர்ந்து நிலவிய அமைதியாலும் சமையலறையிலிருந்து வெளிவந்தனர் வைதேகியும் வர்ஷினியும். வெளியே நின்றிருந்தவனையும் அவனை மறித்துக்கொண்டு நின்றிருந்தவளையும் கண்டு, “வா தம்பி” என்று அழைத்தார் வைதேகி.

“இதோ வர்றேன் சித்தி” என ப்ரியாவை நோக்கி ஒரு மர்மச் சிரிப்பு சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவனுக்கு சரிக்கு சரியாக ப்ரியாவும் முறைத்துக் கொண்டுதானிருந்தாள்.

அப்போது, “ஹாய் ப்ரீ” என்று ஒரு குரலுடன் ஓர் உருவம் அவள் முன்வந்து நின்றது. எதிரே நின்றவரைப் பார்த்தவுடன் நமது தமிழ் புணர்ச்சிவிதி போல ‘அண்ணன் வரின் கோபம் என்னை விட்டு ஓடும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாய் “அண்ணா” என்று முகம் மலர்ந்தாள் ப்ரியா.

“ஏன் யாதவண்ணா, உங்களுக்கு இந்த நெடுமரத்தைத் தவிர வேறு ஆளே கிடைக்கலையா இங்க கூட்டிட்டு வர?” என்று வினவினாள், ஹால் சோபாவில் ஹாயாக அமர்ந்திருந்தவனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே.

“நானும் கழட்டிவிடப் பார்த்தேன் ப்ரியா. ஆனால் என் வருங்கால மாமியாரும் மனைவியும் உத்தரவு போட்டிருந்தாங்களே!” என அங்கலாய்த்தான் யாதவ். அதைக்கேட்டு வர்ஷினியையும் அவளது தாயாரையும் முறைக்கத் துவங்கினாள் ப்ரியா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.