(Reading time: 17 - 34 minutes)

ச்சகத்திலிருந்து எடுத்து வந்தஇரண்டு புத்தங்கங்களோடு இளங்கோ அந்த அறைக்குள் நுழைந்தான்.... வேலையாள் எடுத்து வந்த தேநீரை இரு தோழிகளும் பருகி கொண்டிருந்தனர்... அவன் இருக்கையில் வந்து அமர்ந்தான் இளங்கோ....

"நர்மதா... இது தான் உங்க ஆத்தரோட புது புக்... வாங்கிக்கோங்க.."

"அண்ணா... எப்பவும் நாங்க சொல்றது தான்... இருந்தாலும் சொல்றேன்... காசு கொடுக்காம இப்படி ஃப்ரீயா புக் வாங்கிக்கிறதுல எங்களுக்கு உடன்பாடே இல்லண்ணா... நீங்களும் காசு வாங்க மாட்டேங்கிறீங்க.... அதனால ஒரு புக் மட்டும் கொடுங்கண்ணா... நாங்க ரெண்டுப்பேரும் மாத்தி மாத்தி படிச்சிக்கிறோம்..."

"என்ன நர்மதா... எத்தனை தடவை சொல்றது... இந்த ரெண்டு புக் உங்களுக்கு கொடுக்கறதால,  எந்த நஷ்டமும் எனக்கு இல்ல.... அப்புறம் இதுவரைக்கும் இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொன்னதில்ல... உங்க பேவரிட் ஆத்தர் கிட்ட இந்த ரெண்டு ரசிகைகள் பத்தி நான் சொல்லியிருக்கேன்... அவங்க தான் இதை உங்களுக்கு அவங்க சார்பா காம்ப்ளிமென்ட்டா கொடுக்க சொன்னாங்க..."

"போங்கண்ணா... எங்களைப் பத்தி அவங்கக்கிட்ட சொன்னதா சொல்றீங்க... ஆனா எங்களுக்கு தான் அவங்கள பத்தி எதுவும் தெரியல.."

"நர்மதா நமக்கு மட்டும் இல்ல, யாருக்கும் அவங்கள பத்தி டீடெய்ல் எதுவும் தெரியல..." என்று யமுனாவும் அந்த கதாசிரியர் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆவலோடு கூறினாள்.

"ஆமாண்ணா... யமுனா சொல்றது போல, அந்த ஆத்தர் பத்தி யாருக்கும் எதுவும் தெரியல... அவங்க பேர் மட்டும் தான் தெரியும்...

அதுக்கூட உண்மையான பெயரா..?? இல்லை புனைப்பெயரா..?? அவங்க ஆணா..?? பெண்ணா..?? அவங்க கல்யாணம் ஆனவங்களா..?? இல்லையா..?? அவங்க வயசானவங்களா..?? இல்ல இளவயசா..?? அவங்க ஸ்டூடன்ட்டா..?? இல்லை வொர்க் பண்றாங்களா..?? இது எதுவுமே தெரியலையே ண்ணா...

அவங்க புக் உங்க பப்ளிகேஷன்ல மட்டும் தான் பப்ளிஷ் ஆகுது... அவங்கள பத்தி உங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு... எப்போண்ணா, அவங்க ஃபேன்ஸ்க்கெல்லாம் அவங்களபத்தி சொல்லப் போறீங்க..??"

"அவங்க எப்போ விருப்பப்பட்றாங்களோ.. அப்போ எல்லோருக்கும் சொல்லிடலாம்... இப்போதைக்கு அவங்களப்பத்தி வெளியே சொல்ல அவங்க விருப்பப்படல நர்மதா.."

"அப்படி அவங்களப்பத்தி அவங்க சொல்ல நினைக்கும்போது, எங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் சொல்லனும்... அப்புறம் அண்ணா... அவங்களோட அடுத்த புக் பப்ளிஷ் ஆனா, அதுல அவங்க ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுங்கண்ணா.."

"கண்டிப்பாம்மா.. உங்களுக்காக இதை கூட செய்யமாட்டேனா..??"

"அப்புறம் அண்ணா.. நான் ரொம்ப நாளா இதை கேக்கனும்னு நினைச்சிருக்கேன்... இந்த பதிப்பகத்துக்கு நதிகள் பதிப்பகம்னு ஏன் பேர் வச்சீங்க...?? இதுக்கு ஏதாவது ரீஸன் இருக்கா..?? இல்ல ஒரு டிஃபரன்ட்டா இருக்கட்டும்னு வச்சீங்களா..??"

"அதுவா.. நான் இப்படி ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கனும்னு நினைச்சப்பவே.. என்னோட அம்மா பேரை வைக்கனும்னு நினைச்சேன்... அவங்க பேர் காவேரி... அவங்க என்னோட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க... அதனால அவங்க பேர்ல ஆரம்பிக்கனும்னு ஆசைப்பட்டேன்...

அப்புறம் இந்த பதிப்பகத்தை ஆரம்பிச்சப்போ.. அதுக்கு என்னோட முக்கியமான ஃப்ரண்ட் தான் காரணமாயிருந்தாங்க... அவங்க பேரும் ஒரு நதியோட பேர் தான்... அதான் ரெண்டுப்பேருக்கும் பொதுவா, நதிகள் பதிப்பகம்னு வச்சிட்டேன்..."

"சூப்பர் ண்ணா.. இதுல இன்னொரு விஷயம் பாருங்களேன்... உங்க வருங்கால மனைவியோட பேர்க் கூட ஒரு நதியோட பேராகவே இருக்கு இல்லண்ணா... பின்னாடி இதுபோல யாராவது உங்கக்கிட்ட கேட்டா... உங்க மனைவி பேரையும் நீங்க சேர்த்து சொல்லிக்கலாம்..." என்று யமுனாவை பார்த்துக் கொண்டே நர்மதா கூற... பதிலுக்கு யமுனா நர்மதாவை முறைத்தாள்.

"ஆமாம் நர்மதா... நான் கூட இதைப்பத்தி யோசிச்சிருக்கேன்..." என்று இளங்கோ கூற, அதற்கு யமுனாவோ...

"ம்ம் உங்களுக்கு நதியோட பேர்ல தானே மனைவி வேணும்... கவலைப்படாதீங்க, ஒரு கோதாவரியோ.. இல்லை தாமிரபரணியோ உங்களை தேடி சீக்கிரம் வருவாங்க..." என்று கேலியாகச் சொன்னாள்.

அப்போது அங்கே வேலை செய்யும் வேலையாள் ஒருவன்  வந்து... " சார்... நம்ம ப்ரஸ்ல கூட்டிப்பெருக்குற வேலை செய்யும் கோதாவரி உங்களை பார்க்க வந்திருக்கு.. சம்பள விஷயமா ஏதோ பேசனுமாம்..." என்று சொன்னதும், யமுனா வாய்விட்டே சிரித்துவிட... நர்மதாவோ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்...

யமுனா சிரித்ததை, கொஞ்சம் அசடு வழிந்தபடியே ரசித்தான் இளங்கோ... "அவங்கள கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லு.." என்று அந்த வேலையாளை அனுப்பிவைத்தான். பின் நர்மதாவை பார்த்தவன்...

"நர்மதா... கூடவே என்னோட தங்கை பேர் கூட ஒரு நதியோட பேர்னு சொல்லிக்கலாம் போல... என்னோட சம்பந்தப்பட்டவங்க எல்லோருக்கும் நதி பேராகவே இருக்கு.." என்று அவன் ஆச்சர்யபட, நர்மதாவோ அவனின் உடன்பிறந்த தங்கை போலவே உரிமையோடு பேசியதில் நெகிழ்ச்சியாக பார்த்தாள்...

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனோ... "என்ன நர்மதா.. ஏன் அப்படி பார்க்குற... எனக்கு ஒரு தங்கை இல்லையேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன்... நீ அண்ணா அண்ணான்னு கூப்படும்போதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் தெரியுமா..? ஊருக்குப் போனா எல்லோர்க்கிட்டேயும் இதை சொல்லி சந்தோஷப்படுவேன்...

அப்பாக்கூட நான் போனதும், முதலில் என்னை எப்படி இருக்கன்னு கூட கேக்கமாட்டாரு... நம்ம ... என்று சொல்ல வந்து நிறுத்தியவன்...

"நம்ம நர்மதா, யமுனா எல்லாம் நல்லா இருக்காங்களாப்பா... அவங்கள ஒருநாள் ஊருக்கு கூட்டிட்டு வாயேன்னு தான் முதலில் கேப்பாரு..." என்று சொல்லிமுடித்தான்.

"அப்படியாண்ணா... எனக்கு கூட அப்பாக்கூட பேச ஆசையா இருக்கு... போன் போட்டு கொடுங்களேன்..."

"அப்பா இந்நேரம் தூங்கிக்கிட்டு இருப்பாரு... நான் இன்னொரு நாள் போன் போட்டு தரேன்ம்மா.."

"இருக்கட்டும் பரவாயில்லண்ணா... அப்புறம் அப்பாக்கிட்ட என்னை தங்கச்சின்னு சொல்லி வச்சிருக்கீங்க சரி... யமுனாவை என்னன்னு சொல்லியிருக்கீங்க.."

"வேற என்ன சொல்லுவேன்... உங்க வருங்கால மருமகன்னு சொல்லி வச்சிருக்கேன்... " என்று சொன்னதும் யமுனா ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்த பார்வையோடு அவனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.